ஒருவாரம் பிற்போடப்பட்டது தமிழ்த் தேசியப் பேரவை உருவாக்கம்!


தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள அரசியல் கட்சிகளை ஒன்றிணைத்து தமிழ்த் தேசியப் பேரவையை உருவாக்கும் முயற்சியானது ஒருவாரத்திற்கு பிற்போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் கடந்த வெள்ளிக்கிழமை கூடிய தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள அரசியல் கட்சிகள் யாவும் ஐக்கியம் அவசியம் என்பதில் உறுதியாக இருந்ததோடு அதில் கொள்கை அளவிலும் இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளன.

முன்னதாக 28ஆம் திகதி (இன்றையதினம்) தமிழ்த் தேசியப் பேரவையை கட்டமைப்பதற்கான கலந்துரையாடலை நடத்துவதென்று ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்த போதும், ஒவ்வொரு கட்சிகளும் தமது கட்சியின் உயர்மட்டக்குழுக்களை கூட்டி அது தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்கு கால அவகாசம் தேவையாக இருப்பதாக நேற்று முன்தினம் வவுனியாவில் நடைபெற்ற கூட்டத்தில் கூறப்பட்டது.

ஆகவே இதில் பங்கேற்பதற்கு கொள்கை அளவில் இணங்கியுள்ள கட்சிகள் அனைத்தும் தமது கட்சியின் சார்பில் உத்தியோக பூர்வமான பேச்சுக்களை முன்னெடுத்து இறுதி தீர்மானங்களை அறிவிக்க வேண்டும் என்று அக்கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதிநிதிகள் இடையே இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இதனடிப்படையில் தமிழ்த் தேசியப் பேரவை தொடர்பில் இறுதி தீர்மானங்களை எடுக்கும் கலந்துரையாடலை ஒருவாரத்தின்  பின்னர் நடத்துவதற்கு எதிர்ப்பதாக  தமிழ்த் தேசியக் கட்சியின் செயலளர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

No comments