கோத்தாபாயவின் ஆணைக்குழு ஒரு ஏமாற்று வித்தை! சம்பந்தன் புலம்பல்


ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவினால் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் குறித்த முன்னைய விசாரணைக் குழுக்கள், ஆணைக்குழுக்களின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான வழிமுறைகள் தொடர்பாக, ஆராய்வதற்கு அமைக்கப்பட்டுள்ள மூவர் கொண்ட விசாரணை ஆணைக்குழுவானது ‘ஒரு ஏமாற்று வித்தையாகும்’ என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். 

இலங்கை அரசாங்கம், தனது பொறுப்புக்கூறலை செய்யாது அதனை குழி தோண்டிப் புதைப்பதற்கே முயற்சிக்கின்றது. அதற்காக தமிழ் மக்களையும், சர்வதேசத்தினையும் ஏமாற்றவதற்காக இவ்விதமான காலதாமதப்படும் செயற்பாடுகளை திட்டமிட்டு முன்னெடுக்கின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

பொறுப்புக்கூறல் விடயத்தில் தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் சிவில் அமைப்புக்கள் என்பன கூட்டாக நிலைப்பாட்டை விபரித்து ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளோம். மேலும் பொறுப்புக்கூறலை செய்விப்பதற்கும், அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வினை பெற்றுக்கொள்வதற்குமான எமது முயற்சிகள் மேலும் தீவிரமாகத் தொடரும் என்பதையும் இலங்கை அரசாங்கத்திற்கு தெரிவித்துக்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார். 

உயர்நீதிமன்ற நீதியரசர் நவாஸ் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள மூவர் கொண்ட இந்த ஆணைக்குழுவில், முன்னாள் காவல்துறைமா அதிபர் சந்திரா பெர்னான்டோ, ஓய்வுபெற்ற மாவட்டச் செயலாளர் நிமால் அபேசிறி ஆகியோரும் உறுப்பினர்களாக  அறிவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமைகள் மீறல்கள், மனிதாபினமானச் சட்ட மீறல்கள் தொடர்பாக இற்றைவரையில் இலங்கை அரசாங்கம் பொறுப்புக்கூறவில்லை. நல்லிணக்கத்தினை ஏற்படுத்துவது சம்பந்தமாக எவ்விதமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.

இலங்கையில் கடந்த  காலங்களில் ஸ்தாபிக்கப்பட்ட  ஆணைக்குழுக்கள்  மற்றும்  ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்பன இலங்கை அரசாங்கத்தின் பொறுப்புக்கூறலை செய்வதற்கும், நல்லிணக்கத்தினை ஏற்படுத்துவதற்குமான சிபார்சுகளைச் செய்துள்ளன. 

குறிப்பாக, 2010ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் அமைக்கப்பட்ட  கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவானது பல்வேறு அமர்வுகளை நடத்தி 2011 நவம்பர் 15 இல் அதன் இறுதி அறிக்கையை அவரிடத்தில் சமர்ப்பித்தது. அதில் பல்வேறு விடயங்கள் சம்பந்தமான விடயங்கள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டு பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளன. 

அதேநேரம், 2012, 2013 ஆகிய ஆண்டுகளில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட  தீர்மானத்திலும் கற்றுக்கொண்ட  பாடங்கள்  நல்லிணக்க  ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு இலங்கை அரசாங்கத்திடத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

ஆனால் அந்தத் தருணங்களிலும் அதன் பின்னருமான காலத்தில் அந்த பரிந்துரைகள், தீர்மானங்கள் தொடர்பாக இலங்கை அரசாங்கம் எவ்விதமான நடவடிக்கைகளையும் முன்னெடுத்திருக்கவில்லை.

இந்நிலையில் தான் ஜனாதிபதி கோத்தாபய பழைய ஆணைக்குழுக்களின் பரிந்துரைகளை விசாரணை செய்வதற்கு புதிய ஆணைக்குழுவொன்றை நியமித்திருக்கின்றார். இவ்வாறானதொரு ஆணைக்குழுவொன்று தற்போதைய சூழலில் தேவையற்றதொன்றாகும். 

இவ்வாறான ஆணைக்குழுவினை நியமிப்பதன் மூலம் காலத்தினை கடத்தலாம் என்று கோத்தாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் எண்ணுகின்றது. பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் ஆகியன தொடர்பில் நடவடிக்கைகள்  எடுக்கப்படுவது போன்று காண்பித்து தமிழ் மக்களையும், சர்வதேசத்தினையும் ஏமாற்றிவிடலாம் என்றும் இந்த அரசாங்கம் கருதுகின்றது. 

எம்மைப்பொறுத்தவரையில், புதிய விசாரணை ஆணைக்குழுவானது ஏமாற்று வித்தையாகும். அதற்கு எவ்விதமான பெறுமதியும் இல்லை. அதன் விசாரணைகளும், அறிக்கைகளும் எவ்விதமான பயனையும் தரப்போவதில்லை. அதன் மீது எமக்கு நம்பிக்கையும் இல்லை. 

இலங்கை அரசாங்கத்தினை பொறுத்தவரையில் பொறுப்புக்கூறல் செயற்பாட்டினை குழி தோண்டிப் புதைப்பதையே விரும்புகின்றது. அதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது. எமது மக்களுக்கான பொறுப்புக்கூறல் செய்யப்பட வேண்டும். அதில் எவ்விதமான விட்டுக்கொடுப்பிற்கும் இடமில்லை. அரசாங்கம் புதிய விசாரணை ஆணைக்குழு போன்ற குறைபாடுடைய விடயங்களை பயன்படுத்தி தப்பித்து விட முடியாது. பொறுப்புக்கூறலைச் செய்வதற்கான  எமது தீவிர செயற்பாடுகள் தொடர்ந்தும் இடம்பெறும் என்பதில் மாற்றமில்லை என்றார். 

No comments