தண்டிக்கவோ கட்டுப்படுத்தவோ முடியாத பிரேரணை தீர்மானங்களால் என்ன பயன்? பனங்காட்டான்


'போர் நடைபெற்ற வேளையில் மூன்று பிரதான நாடுகளின் தூதுவர்கள் என்னிடம் வந்து, இப்போது புலிகளை அழிக்க வேண்டியுள்ளது. அது முடியும்வரை எதுவுமே பேசாதிருங்கள். அந்த வேலை முடிந்த பின்னர் தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றும் தீர்வை பெற்றுத்தருவோம் என்றார்கள். பத்து வருடங்கள் தாண்டிவிட்டது. அவர்கள் எங்களை ஏமாற்றிவிட்டனர்" என்ற கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனின் வாய்முறைப்பாடு அவருக்கே சமர்ப்பணம்.
 

ஜெனிவாவின் 46வது கூட்டத்தொடர் ஆரம்பமாவதற்கு இன்னும் மூன்று வாரங்கள் உள்ளன. நாட்கள் நெருங்க நெருங்க இது தொடர்பான அங்கலாய்ப்புகளும் எதிர்பார்ப்புகளும் அதிகரித்துச் செல்கிறது. 

சிங்கள ஆட்சித்தரப்பில் ஒருவகை நெருக்குவாரம் காணப்படுகின்றபோதிலும், எதனையிட்டும் அஞ்சாத தோற்றப்பாட்டுடன் அனைத்தையும் தூக்கி வீசும் வழமையான போக்கே காணப்படுகிறது. 

தமிழர் தரப்பில் ஓர் இணக்கப்பாட்டுக்கு வந்து, பல விட்டுக்கொடுப்புகளுடன் ஆவணத்தில் ஒப்பமிட்ட மூன்று தமிழ்த் தேசிய பெயர் கொண்ட பிரதான கட்சிகளும், இணைந்த நோக்கத்தை மறந்து தமக்குள் ஏதோ ஒன்றுக்காக முட்டி மோதிக் கொண்டிருக்கின்றன.

மனித உரிமைகள் ஆணையாளர் வெரோனிகா மிச்சேல் பச்சலட் ஜெரியா அம்மையார் தமது அறிக்கையில் இலங்கை பற்றி சுட்டிய கருத்துகளின் முக்கிய பகுதி அம்பலமானதையடுத்து கொழும்பு ஊடகங்களும் அரசியல்வாதிகளும் அதனை விலாவாரியாக விமர்சித்து வருகின்றனர்.

போர்க்குற்றம் புரிந்தவர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்கள்மீது பயணத்தடை விதிக்க வேண்டும், அவர்களின் சொத்துகள் முடக்கப்பட வேண்டுமென்பவை ஆணையாளரின் முக்கிய பரிந்துரைகள். 

அத்துடன் வெளிநாடுகளுக்கு சமாதானப் படைகளாக இலங்கைப் படையிளர் செல்வது தடை செய்யப்பட வேண்டும், வெளிநாடுகளில் இவர்கள் பயிற்சி பெற அனுமதிக்கக்கூடாது என்பவையும் இவரின் பரிந்துரைகள். தேவைப்பட்டால் - இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் முன்னால் கொண்டு செல்லலாமென மனித உரிமைப் பேரவையின் நாற்பத்தியேழு நாடுகளுக்கும் ஆணையாளர் கோடு காட்டியுள்ளார். 

இலங்கையில் போர்க்குற்றங்கள் நிகழ்த்தப்பட்ட பின்னர் ஆணையாளர்களாகவிருந்த லூயிஸ் ஆர்பர் அம்மையார், நவநீதம்பிள்ளை அம்மையார், ஸெயிட் அல் ஹுசேன் ஆகியோர் தத்தம் பதவிக் காலத்தில் படிமுறையாக இது தொடர்பான பல கருத்துகளையும் பரிந்துரைகளையும் முன்மொழிந்தனர். 

கனடியரான லூயிஸ் அம்மையார் விடுதலைப் புலிகளின் பினாமி என்று இலங்கை குற்றம் சுமத்தியதால் அவர் விரக்தியுடன் ஒரு தவணையோடு பதவியிலிருந்த வெளியேற நேர்ந்தது. நவநீதம்பிள்ளை அம்மையார் ஆறு வருடங்கள் ஆணையாளராகவிருந்தபோது துணிச்சலாக பல நடவடிக்கைகளை மேற்கொண்டார். இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று மக்களின் வாழ்க்கை முறையை நேரில் பார்த்து பல தகவல்களைச் சேகரித்த இவரை ஒரு தமிழர் என்று முத்திரை குத்தி புறக்கணித்தது இலங்கை அரசு.

2014 முதல் 2018 வரை ஆணையாளராகவிருந்த அல் ஹுசேன் காலத்தில்தான் இலங்கை அரசின் இணைஅனுசரணையுடன் 30:1 பொறுப்புக்கூறல் மற்றும் சர்வதேச விசாரணைக்கான பொறிமுறைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தலையைச் சுற்றும் பம்மாத்தில் அனுபவம் கொண்ட சிங்கள ஆட்சிபீடம் காலநீடிப்புகளை பெற்றுவிட்டு, இறுதியில் அதிலிருந்து கைவிரித்தது. தமது பதவிக்காலம் முடிய அவரும் போய்விட்டார். 

தற்போதைய ஆணையாளர் 2018 செப்டம்பரில் பதவியேற்றவர். சிலி நாட்டின் முதலவாது பெண் ஜனாதிபதியாக பதவி வகித்த இவர் ஸ்பானிய சமூகத்தவர். சிலி நாட்டின் பாதுகாப்பு அமைச்சராகவும் இருந்தவர். தொழிலால் மருத்துவரான இவர், படைத்துறை செயற்பாட்டு நுட்பத்தை பிரதான பாடமாக பட்டப்படிப்பில் கற்றவர். 

இளவயதில் இவரும் இவரது தாய்தந்தையரும் பல தடவைகள் அரசபடைகளால் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டவர்கள். தந்தை சிறையில் சித்திரவதைக்குட்பட்டு மரணமானவர். இதனைத் தொடர்ந்து சிலியை விட்டு தப்பிச் சென்று ஆஸ்திரேலியா, ஜேர்மன் நாடுகளில் மறைமுக வாழ்க்கையில் இருந்தவர் மிச்சேல். 

இத்தகைய பின்னணிகளைக் கொண்வராக இவர் இருப்பதால், இலங்கையின் போர்க்காலத்தில் சிங்கள அரசினது படைத்தரப்பு எவ்வாறான இனப்படுகொலை, மனித குலத்துக்கு எதிரான குற்றங்களைப் புரிந்திருக்கும் என்பதை இலகுவாக இவரால் உய்த்துணர முடிந்திருக்கும். 

2009 போர்க்கால மனித உரிமை மீறல்கள், அதன் பின்னரான மூன்று ஆணையர்களின் நடவடிக்கைகள், தீர்மானங்கள், காலநீடிப்புகள் ஆகியவற்றில் இலங்கையின் செயற்பாட்டை மையப்படுத்தியே இறுதியானதும் கடுமையானதுமான சில பரிந்துரைகளை இவர் இப்போது முன்மொழிந்துள்ளார். இவ்விடயத்தில் தமிழர் தரப்பு கவனிக்க வேண்டிய அல்லது தெரிந்து கொள்ள வேண்டிய விடயங்கள் சிலவுண்டு. 

மனித உரிமைகள் பேரவை ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் கீழ் இயங்குவது. இது ஒரு நீதிமன்றம் அல்ல. எதனையும் விசாரித்து தீர்ப்பளிக்கும் அதிகாரமுள்ள நடுவமமும் அல்ல. இப்பேரவையில் அங்கம் வகிக்கும் 47 நாடுகளும் விசாரணை நடத்தி தீர்ப்பளிக்கும் உரிமை பெற்றவையும் அல்ல. 

சொல்லப்போனால், பெரும்பாலான உறுப்பு நாடுகளும் மனித குலத்துக்கெதிரான - மனித உரிமை மீறல்களுடன் சம்பந்தப்பட்டவையாகவும் உள்ளவை. எனவே இவை இன்னொரு நாட்டுக்கு எதிராக விரல் நீட்டி குற்றம் சுமத்த பெரும்பாலும் விருப்பம் காட்ட விரும்பாதவை.

அந்த வகையில் மனித உரிமைகள் பேரவையின் கண்டனம், கவலை என்பவையும், ஆணையரின் பரிந்துரை வேண்டுகோள் என்பவையும் எந்த நாட்டையும் கட்டுப்படுத்தும் அதிகாரம் கொண்டவையல்ல. இங்கு நிறைவேற்றப்படும் தீர்மானங்களை சம்பந்தப்பட்ட நாடு ஏற்கலாம் அல்லது நிராகரிக்கலாம். அவ்வேளை மனித உரிமைகள் பேரவை அல்லது ஆணையர் எதுவுமே செய்ய முடியாது.

இதனை நன்கு தெரிந்துகொண்டே இங்கு நிறைவேற்றப்பட்ட மூன்று தீர்மானங்களையும் இலங்கை அரசு நிராகரித்தது. இப்போதைய ஆணையாளர் மிச்சேல் அம்மையாரின் பரிந்துரைகளையும் இலங்கை மிகத்துணிச்சலாக நிராகரித்துவிட்டது. 

இலங்கையின் பொறுப்புக்கூறல், போர்க்குற்ற விசாரணைகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு பாரப்படுத்துவது பற்றி ஆணையாளர் தமது கருத்தை வெளியிட்டுள்ளார். மனித உரிமைகள் பேரவையிலுள்ள 47 நாடுகளும் இதனையிட்டு சிந்திக்க வேண்டுமென்பது ஆணையாளரின் வேண்டுகோள். இதனையும்கூட அவர் பரிந்துரையாகவே முன்வைத்துள்ளார். 

இந்த உறுப்பு நாடுகள் இவ்விடயத்தில் எந்தளவுக்கு கரிசனை கொள்ளுமென்பது பிரதான கேள்வி. போதிய ஆதரவு கிடைக்காவிட்டால் அடுத்த நடவடிக்கை என்ன? குற்றவியல் நீதிமன்றத்தில்கூட போதிய ஆதரவு கிடைக்காவிட்டால் இவ்விவகாரம் மீண்டும் மனித உரிமைகள் பேரவைக்கு சமரப்பிக்கப்படும் சாத்தியமுண்டா?

அனைத்துலக மன்னிப்புச்சபை, சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் உட்பட பல மனித உரிமை ஆர்வல அமைப்புகள் இலங்கைமீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரி வருகின்றன. ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்காவின் புதிய நிர்வாகம் மனித உரிமை விவகாரத்தில் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்குமென அதன் தூதுவர் அலைனா ரெப்பிளிற்ஸ் தெரிவித்துள்ளார். 

இலங்கையின் சமாதானம், பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் என்பவற்றை உறுதி செய்ய மனித உரிமைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளவைகளை வரவேற்றுள்ள கனடா, தொடர்ந்து அதற்கு ஆதரவளிக்குமென அதன் வெளிவிவகார அமைச்சர் மார்க்கானோ கூறியுள்ளார். 

ஐரோப்பிய ஒன்றியம், பிரித்தானியா ஆகியவைகளும் ஆணையாளரின் கருத்தையும் பரிந்துரைகளையும் வரவேற்றுள்ளன. ஆனால் இவ்விடயத்தை தாமதமின்றி முழுமூச்சுடன் தீவிரமாக செயற்படுத்த வேண்டிய மூன்று தமிழ்த் தேசிய கட்சிகளினதும் கூட்டு, அடுத்த கட்டத்துக்கு நகர முடியாமல் அறிக்கைப்போரிலும், ஊடக சந்திப்புகளிலும், நேரடியாக பெயர் சொல்லும் தாக்குதல்களிலும் மோதிக்கொண்டிருக்கிறது. 

இக்கட்சிகளின் தலைவர்கள், பிரமுகர்கள், பேச்சாளர்கள் மட்டுமன்றி சிவில் அமைப்புகளின் குட்டித் தலைவர்களும் தங்கள் தலைகளை உயர்த்தி கைகளை நீட்டி சவால் முழக்கமிடுகின்றனர். 

யார் யார் ஆவணங்களில் ஒப்பமிடுவது, இனப்படுகொலையை ஆவணத்தில் நீக்க முனைந்தவர் யார், ஆரம்பத்திலிருந்து இனப்படுகொலையை எதிர்த்து வந்தவர் இறுதியில் எவ்வாறு ஏற்று ஒப்பமிட்டார், சர்வஜன வாக்கெடுப்பை விரும்பாதவர் யார் என்ற பட்டிமன்றம் தாயகத் தமிழ் தொலைக்காட்சிகளிலும், அலைவுத்தமிழரின் வானொலிகளிலும் தொடர்ந்து இடம்பெறுகின்றது. 

இவை ஆரோக்கியமானவையாக அமையவில்லை. கட்டாய தேவையை ஒட்டி உருவான ஒற்றுமையை சிதறடிக்கும் சில்லறைத்தனமே இங்கு காணப்படுகிறது. இலங்கையின் பொறுப்புக்கூறலை வலியுறுத்தி மூன்று வெவ்வேறு ஆவணங்களை சர்வதேச சமூகத்துக்கு அனுப்புவதாக முக்கூட்டு அணியினால் தீர்மானிக்கப்பட்டதென்றும், அதில் ஒன்று மட்டுமே இதுவரை அனுப்பப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது. 

மனித உரிமைகள் பேரவையிலிருந்து இவ்விடயத்தை ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்துக்கு பாரப்படுத்தும் கோரிக்கையை மையப்படுத்தும் அடுத்த இரண்டு கடிதங்களும் இதுவரை அனுப்பப்படாமைக்கு காரணமென்ன? 

சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்பும், விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ்த் தேசிய கூட்டணியுமே இதில் பின்னடிப்பதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்து வருவது உண்மையா?

இவைகளைப் பார்க்கும்போது முக்கூட்டு ஒற்றுமை என்பது பொறிப்பந்தலாகவே தோற்றம் தருகிறது. முதுமையில் ஞாபகமறதியுடன் தள்ளாடும் தலைவர் சம்பந்தன், சில மாதங்களுக்கு முன்னர் ஞாபகசக்தியில் தெரிவித்த ஒரு விடயத்தை இங்கு நினைவூட்டுவது அவசியமாகிறது. 

'போர் நடைபெற்ற வேளையில் மூன்று பிரதான நாடுகளின் தூதுவர்கள் என்னிடம் வந்து, இப்போது புலிகளை அழிக்க வேண்டியுள்ளது. அது முடியும்வரை எதுவுமே பேசாதிருங்கள். அந்த வேலை முடிந்தபின்னர் தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றும் தீர்வை பெற்றுத்தருவோம் என்றார்கள். பத்து வருடங்கள் தாண்டிவிட்டது. அவர்கள் எங்களை ஏமாற்றிவிட்டனர்" என்ற சம்பந்தனின் வாய்முறைப்பாடு அவருக்கே சமர்ப்பணம். 


No comments