ஜெனிவா: தமிழ்த் தேசிய கட்சிகளும் புலம்பெயர் தமிழரின் வகிபாகமும்! பனங்காட்டான்


ஜெனிவா அமர்வுகள் இடம்பெற ஆரம்பிக்கையில் தமிழர் தரப்பு விழித்துக் கொள்வது வழமை. முதன்முறையாக இம்முறை தமிழ்த் தேசியத்தை பிரதிபலிக்கும் மூன்று தலைமைகளும் ஒரு நேர்கோட்டில் இணைந்திருப்பது பல காலமாக எதிர்பார்க்கப்பட்ட விருப்பம். எனினும் அதற்குள் ஏதோ சறுக்கல், சுயவிருப்பு நிறைவேற்றம், காலிழுப்பு என்பவை இருப்பது போலவும் உணரப்படுகிறது. அதேசமயம், புலம்பெயர் தமிழரை நோக்கி சில ஊடகங்கள் நேரடியாக விரல்களை நீட்டுவதும் நன்றாகவே தெரிகிறது. 

முள்ளிவாய்க்காலில் 2009ல் இனப்படுகொலை இடம்பெற்ற ஆறாவது ஆண்டில், ஜெனிவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை மன்றில் முதன்முதலாக ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இலங்கையில் மனித உரிமைகள், நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் ஆகியவற்றை ஏற்படுத்துவது என்ற பெயரில் 2015 அக்டோபர் முதலாம் திகதி இத்தீர்மானம் நிறைவேறியது. 

இலங்கையின் சிங்கள பௌத்த தேசியவாத அரசாங்கத்திடமிருந்து நேர்மையான பொறுப்புக்கூறலை சர்வதேச பங்களிப்புடன் பெறலாமென யுத்தத்தில் பாதிக்கப்பட்ட தமிழர் நம்பிக்கை கொண்டனர். அப்போதைய இலங்கை அரசு இத்தீர்மானத்துக்கு இணைஅனுசரணை வழங்கியதே இதற்குக் காரணம். 

குறிப்பிட்ட காலப்பகுதியுள் எதுவுமே இடம்பெறவில்லை. நல்லாட்சிக் காலத்தில் மைத்திரி - ரணில் அரசுடன் கூட்டுக் குடும்பம் நடத்திய தமிழ்;த் தேசிய கூட்டமைப்பு இலங்கைக்கு ஆதரவாக காலநீடிப்பை ஜெனிவாவில் பெற்றுக் கொடுத்தது. 

கோதபாய தலைமையிலான குடும்ப ஆட்சி பதவிக்கு வந்ததும், ஜெனிவா தீர்மானத்திலிருந்து இலங்கை தன்னை விலத்திக் கொண்டது. சுருக்கமான இந்தப் பின்னணி, இனி இடம்பெறப்போகின்றவைகளை புரிந்து கொள்ள உதவக்கூடும். 

தாயில்லாப் பிள்ளையாக இப்போதுள்ள இந்தத் தீர்மானம், அடுத்த மாதம் 22ம் திகதி முதல் மார்ச் மாதம் 19ம் திகதிவரை இடம்பெறவுள்ள ஜெனிவாவின் 46வது கூட்டத்தொடரில் என்னவாகும்? 

ஜெனிவா அமர்வில் மனித உரிமை ஆணையாளர் மிச்சேல் பச்லெட் அம்மையார், அந்தந்த  நாடுகள் தொடர்பான அறிக்கையை வெளியிடுவார். அதற்கு முன்னராக ஒவ்வொரு நாட்டுக்கும் அந்த நாடு தொடர்பான தமது அறிக்கையின் வரைபை அனுப்புவார். 

இதன் பிரகாரம் இலங்கை தொடர்பான அறிக்கை அனுப்பப்பட்டு விட்டது. இதற்கான பதிலை இலங்கை அரசு வெட்டொன்று துண்டு இரண்டாக அனுப்புமென தெரியவந்துள்ளது. தாம் அனுசரணை வழங்கிய தீர்மானத்திலிருந்து இலங்கை விலகியபின் ஜெனிவா என்ன செய்ய முடியும்? வழக்கம்போல கவலை, வருத்தம் தெரிவிக்கலாம். 

ஜெனிவாவின் 46வது கூட்டத்தொடர் தொடர்பில் தமிழர் தரப்பில் இம்முறை சிறு மனமாற்றமொன்று ஏற்பட்டுள்ளது. கடந்த காலங்களில் தனிக்காட்டு ராஜாக்களாகவிருந்து தம் விருப்பப்படி நடந்து கொண்ட கூட்டமைப்பு இம்முறை அவ்வாறு செயற்பட முடியாது போய்விட்டது. 

கடந்த வருடத் தேர்தலின்போது கஜேந்திரகுமார் தலைமையிலான மக்கள் முன்னணியும், விக்னேஸ்வரன் தலைமையிலான தேசியக் கூட்டணியும், சம்பந்தனின் கூட்டமைப்பினது மூன்று ஆசனங்களைக் கைப்பற்றியதால் அவர்களைத் தவிர்த்து கூட்டமைப்பால் செயற்பட முடியாத நிலையேற்பட்டது. 

அக்கறையுள்ள சில தனி ஆட்களும், சில தமிழ் அமைப்புகளும் ஆகக்குறைந்த பட்சமாக ஜெனிவா அடிப்படையில் மூன்று தமிழ்த் தேசிய கட்சிகளையும் இணைத்து ஒரு முடிவை காட்டின. தாயகத் தமிழர் மட்டுமன்றி புலம்பெயர் தமிழரும் - அவர்களின் அமைப்புகளும் இதில் மகிழ்ச்சி கண்டன. 

மூன்று தமிழ்த் தேசிய கட்சிகளையும் இணைத்த ஜெனிவா ஆவணம் புலம்பெயர் தமிழர் அமைப்புகளால் வரையப்பட்டது என்று கூட்டமைப்பின் சுமந்திரனால் அறிவிக்கப்பட்டது, ஆனால், அந்த அமைப்புகளின் பெயர்கள் பகிரங்கப்படுத்தப்படவில்லை. இதில் கனடிய தமிழர் அமைப்பு என்ற பெயர் பரவலாக அடிபடுகிறது. 

மனித உரிமை ஆணையத்திலுள்ள 47 நாடுகளின் ஆதரவு கோரும் இந்த ஆவணம் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மூன்று தமிழ்த் தேசிய கட்சிகளின் தலைவர்களான இரா.சம்பந்தன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோருடன் குடிசார் அமைப்புகளின் பிரதானிகளின் ஒப்பங்களும் இதில் இடம்பெற்றுள்ளது. 

இதே ஆவணம் மனித உரிமை ஆணையகத்துக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் இதனை எவரும் உறுதி செய்யவில்லை. இது தொடர்பாக கேள்வியும் எழுந்துள்ளது. 

வலி சுமக்கும் தமிழர் சமூகம் நீண்டகாலமாக எதிர்பார்த்த தமிழ் தலைமைகள் இணைப்பு என்ற விடயம் ஓரளவுக்கு நிறைவேறியுள்ளது என்று நிம்மதி நெடுமூச்சு விடலாமென எண்ணும் வேளையில், இந்த ஆவணத் தயாரிப்பின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் சின்னத்தனமான சில சம்பவங்கள் தொடர்பாக வெளிவந்துள்ள தகவல்கள் கவலையைத் தருகிறது. 

இனப்படுகொலையை 2009ம் ஆண்டிலிருந்தே வலியுறுத்தி வந்த கஜேந்திரகுமார், இந்த ஆவணத்தில் அதனை இடம்பெறாதிருக்க விரும்பினாரென்றும், விக்னேஸ்வரன் அணியின் நெருக்குதலால் ஒருவாறு அதற்கு இணங்கினாரெனவும், அதன்பின்னரே சுமந்திரனும் சம்மதித்தாரென்றும் சுரே~; பிரேமச்சந்திரன் பல இடங்களில் சுட்டிக்காட்டி வருகிறார். 

இந்த ஆவணத்தில் முதலாம் இரண்டாம் மூன்றாம் இடங்களில் யார் யார் ஒப்பமிடுவது என்பதில்கூட தலைவர்களிடையே இழுபறி இருந்ததாக தெரிய வந்துள்ளது. 

தமிழ்த் தேசிய கட்சிகளில் அங்கம் வகிக்கும் மற்றைய கட்சிகளின் (தமிழரசு, ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ். உட்பட) தலைவர்களின் ஒப்பங்களை இந்த ஆவணத்தில் சேர்க்க முக்கியமானவர்கள் தடையாக இருந்ததாகவும், அவ்வாறு ஒப்பமிடப்பட்ட பகுதி இறுதியில் நீக்கப்பட்டதாகவும் இன்னொரு தகவல். 

ஊடக சந்திப்புகள், அறிக்கைகள் வாயிலாக இந்த விடயங்களை பகிரங்கப்படுத்துவதை தமது தலையாய பணியாக சுரே~; பிரேமசந்திரன் மேற்கொண்டு வருகிறார். இவர் அங்கம் வகிக்கும் தமிழ் தேசிய கூட்டணியின் தலைவர் விக்னேஸ்வரன் இவ்வாறு பிரச்சனைகள் உருவாவதை தடுக்கும் ஆற்றல் இல்லாதவராக இருக்கிறாரா? அல்லது, மெதுவாக இவை வெளிவரட்டுமென்று அமைதி காத்து வருகிறாரா?

இனப்படுகொலை என்ற சொற்பதம் இந்த ஆவணத்தில் இடம்பெறக்கூடாதென கஜேந்திரகுமார் விரும்பினார் என்பது உண்மையா? இதற்கான அவரது பதில் என்ன?

கடந்த பத்தாண்டுகளாக கீரியும் பாம்புமாக இருந்த சுமந்திரனும் கஜேந்திரகுமாரும் தமிழர் நலன் சார்ந்த விடயத்தில் இணைந்து பணியாற்றுவதையிட்டு வரவேற்கப்பட வேண்டிய நல்ல முடிவு என்று கூறவேண்டிய நிலையில், இவர்கள் இணைப்பின் பின்னால் ஏதோவொன்று இருப்பதாகக் கூறப்படுவது பல சந்தேகங்களை ஏற்படுத்துகிறது.

வடமாகாண சபையில் விக்னேஸ்வரன் முதலமைச்சராக இருந்தபோது ஏற்பட்ட பகைமை, கசப்புணர்வு என்பவற்றுக்கு ஒரு பாடம் கற்பிக்க சுமந்திரன் இதனைப் பயன்படுத்துவதாகவும், தம்மை ஏமாற்றிய சுரே~; பிரேமச்சந்திரனை விக்னேஸ்வரன் அவரது கூட்டணியில் இணைத்ததை பழிவாங்க கஜேந்திரகுமார் காய் நகர்த்துவதாகவும் கூட்டமைப்புக்குள் பேசப்படுகிறது. 

மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன் ஆகிய கூட்டமைப்பின் பங்காளிக் கட்சித் தலைவர்கள் கடந்த தேர்தலில் தமக்கு எதிராகச் செயற்பட்டமையால் அவர்களின் ஒப்பம் ஆவணத்தில் இடம்பெறுவதை சுமந்திரன் விரும்பவில்லையென்பதை நடைபெற்ற சம்பவங்கள் காட்டுவதாக யாழ். மாநகரசபை உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

இவைகளை அவதானிக்கும்போது முக்கூட்டு இணைப்பு என்பது தற்காலிகமானது - சில மாதங்களின் பின்னர் கூட்டமைப்பு மட்டுமன்றி மற்றைய தமிழ்த் தேசிய கட்சிகளுக்குள்ளும் உடைவுகள் ஏற்படலாமென சிலர் கூறுகின்றனர். 

இந்த செயற்பாடுகளின் பின்னணியில் சில வெளிநாட்டு சக்திகள் இருப்பதாகவும், இங்கிலாந்திலுள்ள தமிழர் அமைப்பொன்று பிரதான பங்கு வகிப்பதாகவும் பரவலாக சொல்லப்படுகிறது. யாழ்ப்பாண பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்தழிப்பு சம்பவம், ஜெனிவா ஆவணத்தயாரிப்பு ஆகியவைகளை மையப்படுத்தி புலம்பெயர் தமிழர்களையும் அவர்களின் அமைப்புகளையும் சுட்டும் பல கட்டுரைகள் கொழும்பிலுள்ள ஆங்கில சிங்கள ஊடகங்களில் கடந்த சில நாட்களாக வெளிவருகிறது. 

புலம்பெயர் தமிழர்களை கண்காணிப்பதாக கோதபாய தரப்பு தெரிவித்து வரும் இக்காலத்தில்,  அதற்கு ஒத்திசைவாக கொழும்பு ஊடகங்களில் வெளிவரும் விடயங்களைக் காணலாம். முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்தழிக்கப்பட்ட பின்னர் பல்கலைக்கழக மாணவர் நடத்திய சாத்வீகப் போராட்டத்துக்கு ஆதரவாக உலகெங்குமுள்ள தமிழர் தத்தம் நாடுகளில் கவனயீர்ப்புகளை நடத்தினர்.

இந்த மாதம் பத்தாம் திகதி கனடிய ரொறன்ரோ நகரில் சுமார் நாலாயிரம் வாகனங்கள் பங்கேற்ற தொடரணி ஏறத்தாழ ஆறு மணித்தியாலங்களாக இங்குள்ள பிரதான வீதிகளில் இடம்பெற்றது. கனடாவின் மைய ஊடகங்கள் இதுபற்றிய செய்தியை வெளியிடுகையில், இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலை ஞாபகார்த்தமான முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்ன அழிப்பு என்று தெரிவித்தது குறிப்பிடப்பட வேண்டியது. 

பத்தாண்டுகளில் கனடிய மண்ணில் ஏற்பட்ட ஒரு மாற்றத்துக்கு இங்கு வாழும் தமிழரின் தொடர் பங்களிப்பு கணிசமானது. கனடிய வாகன தொடரணி பற்றி கொழும்பிலிருந்து வரும் சன்டே ரைம்ஸ் பத்திரிகை ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரையில் பின்வருமாறு ஒரு பந்தி வந்தது:

'கனடாவில் புலம்பெயர்ந்த தமிழர் புலிகளின் கொடிகளை ஏந்தியவாறு பவனியை நடத்தினர். மக்கள் கவனத்தை ஈர்க்க கோர்ண்களை அடித்து ஒலியெழுப்பினர். மேர்சிடஸ் பென்ஸ், பி.எம்.டபிள்யு. ஒளடி மற்றும் புத்தம் புதிய மொடல் ராக்சிகள் இதில் பங்குபற்றின. இவர்கள் அங்குள்ள அரசியல்வாதிகளிடையே கணிசமான செல்வாக்கை செலுத்துகின்றனர்" என்கிறது இந்தப் பந்தி. 

கனடாவில் மட்டுமன்றி புலம்பெயர்ந்த நாடெங்கும் தமிழர் தங்கள் கடும் உழைப்பால் செல்வாக்குடன் வாழ்கின்றனர். இதனாலேயே போரினால் பாதிக்கப்பட்ட தங்கள் உறவுகளுக்கு இவர்களால் உதவ முடிகிறது. இதனைத் தெரிந்து கொண்டதால்தான் தாயகத்தின் பொருளாதார உதவிக்கு இவர்கள் உதவ முன்வரவேண்டுமென இலங்கை அரசு அடிக்கடி கோரிக்கை விடுவதை ஊடகங்கள் நினைவிற் கொள்ள வேண்டும். 

கொழும்பிலிருந்து வெளிவரும் டெய்லி மிறர் தினசரி, ஜெனிவா விவகாரம் தொடர்பான கட்டுரையொன்றை பிரசுரித்துள்ளது. 'இலங்கைத் தமிழர் பிரச்சனைகள் வெளிநாட்டு அரசாங்கங்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் தலையிட்டால் மட்டுமல்லாமல், புலம்பெயர்ந்த தமிழராலும் சிக்கலானது. புலம்பெயர்;ந்தோர்தான் இலங்கைத் தமிழரை வழிநடத்துகிறார்கள். இவர்களுக்கான நிகழ்ச்சி நிரலை அவர்களே அமைக்கிறார்கள். அதனைச் செயற்படுத்தவும் நிதி வழங்குகிறார்கள்..." 

விடுதலைப் புலிகளுக்கு ஆயுதம் வழங்க புலம்பெயர்ந்த தமிழர் நிதி வழங்கினர் என முன்பு கூறியவர்கள், இப்போது அதனை மாற்றி வேறுவிதமாக கூற முயற்சிக்கிறார்கள். இது கோதபாய அரசு புலம்பெயர்ந்த தமிழர் மீது சுமத்தும் குற்றச்சாட்டுகளுக்கு பலம் சேர்ப்பதாக அமையலாம். 

இனப்படுகொலை, மனித குலத்துக்கு எதிரான செயற்பாடு, போர்க்குற்றம் என்பவற்றுக்கு நீதி கேட்கவும், இவ்விடயத்தில் பங்களிக்கவும் புலம்பெயர்ந்த தமிழருக்கு முழு உரிமையுண்டு. இவர்கள் வேற்றுலகவாசிகள் அல்ல. முப்பது வருடத்துக்கு மேலான கொடூர இனவழிப்பு யுத்தத்தால் பல இழப்புகளுடன் தங்கள் சொந்த மண்ணிலிருந்து ஈரவேரோடு வெளியேறியவர்கள். 

அந்த மண்ணின் ஈரம் இன்னமும் காய்ந்து போகாதுள்ளது என்பதே அவர்களை இது தொடர்பான விடயங்களில் அர்ப்பணிப்புடன் ஈடுபட வைக்கிறது. 

No comments