பேரரசரின் மெஜிக் ஆடைகள்?



ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்டிருக்கும் விசேட குழு, ஜெனிவாவில் அணிந்துகொள்வதற்கான ஒரு ‘மெஜிக் ஆடை’ மாத்திரமே என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இலங்கையில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஆராய்வதற்கு ஜனாதிபதி, உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.எச்.எம்.டி.நவாஸ் தலைமையில் மூவரடங்கிய விசேட குழுவொன்றை நியமித்திருக்கின்றார்.

இதனை மேற்கோள்காட்டி தனது டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவொன்றிலேயே பிமல் ரத்நாயக்க மேற்கண்டவாறு குறிப்பிட்டிருக்கிறார். 

‘பேரரசரின் மெஜிக் ஆடைகள்’ என்று தலைப்பிட்டிருக்கும் அவர், ‘உங்களுடைய சட்டமா அதிபர் திணைக்களம் ஒரு கொலைக்குற்றவாளியான பாராளுமன்ற உறுப்பினரை விடுதலை செய்தது. நீங்கள் நீதித்துறையைப் பயமுறுத்துவதற்கு முயற்சிக்கின்றீர்கள்.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நீங்கள் பகிரங்கமாகவே அச்சுறுத்தல் விடுக்கின்றீர்கள்.

நீங்கள் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவை வலுவிழக்கச் செய்திருக்கிறீர்கள்.

அனைத்தையும் நீங்கள் இராணுவ மயப்படுத்தியிருக்கிறீர்கள். இத்தகைய பின்னணியில் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஆராய்வதற்கு உங்களால் நியமிக்கப்பட்டிருக்கும் விசேட குழு என்பது ஜெனிவாவில் அணிந்துகொள்வதற்கான ஒரு மெஜிக் ஆடையைப் போன்றதேயாகும்’ என்று குறிப்பிட்டுள்ளார். 

No comments