முள்ளிவாய்க்கால் நினைவு சின்னமே வேண்டும்: அமையம்?

 


கொடூரமாக வெல்லப்பட்ட யுத்தத்தின் வெற்றிச் சின்னங்கள் வடகிழக்கெங்கும் நிரம்பியிருக்க யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் அமைந்திருந்த முள்ளிவாய்க்காலில் கொல்லப் பட்ட பொதுமக்களின்  நினைவுச் சின்னம் அழிக்கப் பட்டமை ஏன் என தமிழ் சிவில் சமூக அமையம் கேள்வி எழுப்பியுள்ளது.

அதேவேளை இன்று துணைவேந்தர் நினைவுத் தூபி அழிக்கப்பட்ட இடத்திலேயே மீள அதனை அமைப்பேன் எனச் சொல்லி அடிக்கல் நாட்டியிருப்பதை நாம் நம்பத் தயாராக இல்லை. இனப்படுகொலையை நினைவு கூரும் தூபியை நீக்கி பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டது போல ‘சமாதானத்’ தூபியோ அல்லது யுத்த வெற்றி தூபியோ அமைக்கப்படலாம் என நாம் அஞ்சுகிறோம். நாம் எப்படி எவ்வாறு எதனை நினைவு கூர வேண்டும் என்பதனை நாமே தீர்மானிக்க வேண்டும். இருந்த தூபி இருந்தவாறே மீள அமைக்கப்பட வேண்டும். வேறெந்த தீர்வும் திணிப்பே தவிர வேறொன்றும் இல்லை என்பதையும் அமையம் சுட்டிக்காட்டுயள்ளது.

தற்போது ஆட்சியிலிருக்கும் அரசு தான் ஆட்சிக்கு வருவதற்கான பிரதான ஆயுதமாக பேரினவாதக் கருத்தியலையே கையிலெடுத்தது. ஆட்சிக்கு வந்த பின்னர், அதே கருத்தியலின் வழி நின்று தன்னைச் சிங்கள பௌத்தர்களுக்கு மட்டுமான அரசு என்பதைச் சொல்லிலும் செயலிலும் நிரூபித்து வருகிறது. எண்ணிக்கையில் குறைவான பிற தேசிய இனத்தவர்களுக்கு எதிரான கருத்தியலைச் சிங்கள பௌத்த மக்களின் மத்தியில் பரவலாக்கி, அவர்கள் வழங்கும் தார்மீக ஆதரவில், பிற தேசிய இனங்களை அடக்கி, ஒடுக்கி, பலவீனப் படுத்தி, அகற்றும் செயற்திட்டத்தை முழு அளவில் முடுக்கி விட்டுள்ளது.

நில அபகரிப்பு, வளச் சூறையாடல், பௌத்த மத விரிவாக்கம், தொல்லியல் மையங்கள் என்ற போர்வையில் பிற தேசிய இனங்களின் பாரம்பரிய வாழ்புலத்துக்குள்ளான அத்துமீறிய நுழைவு, வரலாற்று அடையாளங்களை அழித்தல், திரிவுபடுத்தல், போலியானவற்றை உருவாக்கல், மற்றைய இன, மதத்தவரின்- ஆடை முறை, இறுதிச் சடங்குகள் உள்ளிட்ட-  பண்பாட்டு, வாழ்வியல் முறைகளைத் தடை செய்தல், அரச துறைகளில் இராணுவத்தினரின் மிதமிஞ்சிய உள்நுழைப்பு, நினைவு கூரும் உரிமை மறுதலிப்பு என பல்பரிமாணப் பேரினவாத நிகழ்ச்சித் திட்ட்மொன்றை அரசு தீவிரமாக முன்னெடுத்து வருகிறது. இத்திட்டத்தின் ஆகப் பிந்திய அரங்கேற்றமாக யாழ்ப்பாணப் பல்கலைக் கழக வளாகத்தில் மாணவர்களால் அமைக்கப் பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம், பல்கலைக் கழக நிர்வாகத்தினரால், காவற்றுறை, இராணுவம் இணைந்து வழங்கிய இறுகிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன், இரகசியமாக, இரவோடிரவாக அழித்தொழிக்கும் நிகழ்வு நடந்ததென அமையம் தெரிவித்துள்ளது.

அனுமதி வழங்கப் படாத கட்டுமானம் என்பதனால், மேலிட உத்தரவுகளுக்கமைய அந்த நினைவுச் சின்னம் அழிக்கப் பட்டது என்ற தொழில்நுட்பக் காரணத்தை முதலில் வழங்கிய பல்கலைக்கழகத் துணை வேந்தர், பின்னர் பல்லின மாணவர்கள் கல்வி கற்கும் இடத்தில் இது வேண்டத் தகாதது என்ற கருத்தியல் நியாயப் படுத்தலையும் வழங்கியிருந்தார். மேலிட உத்தரவுகளுக்கமைய அந்த நினைவுச் சின்னம் அழிக்கப் பட்டது என்ற துணைவேந்தரின் கூற்றினைப் பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவரும், இராணுவத் தளபதியும் தனித்தனியாக மறுத்துரைத்திருந்தனர். போரின் நினைவுச் சின்னங்கள் தேவையில்லை, நல்லிணக்கத்திற்கான நினைவுச் சின்னங்களே தேவை எனக் குறிப்பிட்டு, இதனையும் போரின் நினைவுச் சின்னமாகக் கருதி, இவ்வாறான நினைவுச் சின்னங்கள் இன நல்லுறவைப் பாதிக்கும் என்பதனால் அவை தேவையற்றவை, அகற்றப்பட வேண்டியவையே என்ற கருத்தையும் ப.மா. ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்திருந்தார்.

நாடெங்கிலும் பொதுவாகவும், வடக்குக் கிழக்கில் குறிப்பாகவும் எண்ணுக் கணக்கற்று நிறைந்திருக்கும், குரூரமாக வெல்லப் பட்ட யுத்தத்தின் வெற்றிச் சின்னங்கள் குறித்தோ, ஒவ்வொரு வருடமும் கோலாகலமாகக் கொண்டாடப் படும் யுத்த வெற்றி விழா குறித்தோ, அவை பாதிக்கப் பட்ட மக்களின் மனங்களில் மீள மீள ஏற்படுத்தும் காயங்கள் குறித்தோ, ஒரு வித சிறு குறிப்பிடலும் இல்லாது, போரின் இறுதி நாட்களில் இறந்த பொது மக்களின் நினைவாக எழுப்பப் பட்ட ஒரு சிறு நினைவுச் சின்னம், இன நல்லிணக்கத்தைப் பாதிக்கும் என்ற பேரினவாதச் சிந்தனையை எது வித வெட்கமுமற்று ப.மா. ஆணைக்குழுவின் தலைவர்  வெளிப்படுத்தினார்.

கொத்துக் கொத்தாகக் கொல்லப் பட்ட தமது உறவுகளைத் தனியாகவும், கூட்டாகவும் நிறைவாக நினைவு கூரும் சந்தர்ப்பமும், அதற்கான தடையற்ற உரிமையும் ஏற்படுத்தக் கூடிய ஆற்றுப் படுத்தலின் விளைவாக உருவாகக் கூடிய நல்லிணக்கச் சிந்தனைகளுக்கான சந்தர்ப்பத்தை வழங்குவதா அல்லது அனுமதி வழங்கப் படாது கட்டப் பட்டது என்பதனால் சட்டத்தை அமுலாக்குதல் என்ற போர்வையில், எவருக்கும் எந்த இடையூறும் விளைவிக்காது, ஒரு சிறிய இடத்தில் அமைந்திருந்த நினைவுச் சின்னத்தை, இடித்தழித்து ஏற்கனவே இழப்பின் வலிகளால் துடித்துக் கொண்டிருக்கும் கூட்டு உளவியலின் மீது இன்னுமொரு காயத்தை ஏற்படுத்தும் சந்தர்ப்பத்தை வழங்குவதா விருப்பத் தெரிவாக இருந்தது என்பது இதன் மூல காரணர்களது நிகழ்ச்சி நிரலைத் தெளிவுபடுத்தி நிற்கிறது.

சட்டத் துறை, கல்வித் துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும், பேரினவாதக் கருத்தியலுடன் ஒத்தியங்க முடியாதவர்கள் தொடர்ச்சியான பழிவாங்கல்களுக்குட்பட்டு வரும் அழுகலாட்சி முறையின் விளைவாக, அனைத்துத் துறைகளிலும் பிறழ்வு மனநிலையுடைய அலுவலர்கள் உருவாகியிருக்கிறார்கள். சமூகத்தின் மனச்சாட்சியாகவும், குரலாகவும் இருக்க வேண்டிய இவர்கள், அப்பட்டமான சுய இலாபங்களுக்காக, மானுட நீதியைப் புறமொதுக்கும் சமூக அநீதியாளர்களாக மாறிவிட்டனர். நினைவுச் சின்ன அழிப்பிற்கு எதிராகக் குரல் கொடுத்தவர்கள் மீது கனரக வாகனத்தை ஏற்றுமாறு கூறிய பலகலைக்கழகப் பதிவாளர், எதிர்ப்பதை நிறுத்தாவிட்டால் ‘உரிய வழியில்’ அதனை நிறுத்தப் போவதாக எச்சரித்த துணை வேந்தர் என்போர் சமூக அநீதியாளர்களாகத் தம்மை வெளிப்படுத்திக் கொண்ட அண்மைய உதாரணர்கள்.

பேரினவாத அரசு தமது பேரினவாத நிகழ்ச்சி நிரலினை நிறைவேற்றுவதற்கு தமிழ்ப் பொது ஊழியர்களையே ஒரு கருவியாக பயன்படுத்துவதை ஒரு வழமையாக ஆக்கி விட்டனர். ஒரு பேரினவாத அரசின் கட்டமைப்பிற்குள் ஒடுக்கப்படும் சமூகத்தை சேர்ந்த  பொது ஊழியர்களின் கடமை, பொறுப்பு ஆகியன தொடர்பில் பொதுக் கலந்துரையாடல் அவசியம். நாம் ஏற்காத முறைமைக்குள்ளிருந்தும் நாம் எவ்வாறு செய்யப்படுவது என்பது தொடர்பில் தெளிவும் அவதானமும் தேவை. 

இவற்றின் பின்னணியில், தமிழ் சிவில் சமூகம்,

1. இந்த நினைவுச் சின்ன அழிப்பிற்கு மூல காரணமாக இருப்பவர்கள் பேரினவாத அரசும், அதன் ஆயுதப் படைகளும், அதன் கருத்தியற் படைகளில் ஒன்றான பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுவும் என்பதை மிகுந்த கண்டனத்துடன் சுட்டிக் காட்டுகிறது.

2. பாதிக்கப் பட்ட மக்களின் உணர்வுகளை மேலும் கடுமையாகப் பாதித்து, எதிர்பாராத விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய இந்த விடயத்தில், விரிவான பல்கலைக் கழக சமூகம், பிற பங்கீடுபாட்டாளர்கள் என்போருடன் உரையாடி, ஆலோசனைகளைப் பெற்று இவ்விடயத்தைக் கையாண்டிருக்க வேண்டிய துணை வேந்தரும், பல்கலைக் கழக நிர்வாகத்தினரும், குறுகிய சுய இலாபங்களின் அடிப்படையில் அநீதியாளர்களின் கைப்பாவைகளாக மாறி, அவர்களின் நோக்கங்களை நிறைவேற்றியது மட்டுமல்லாது அதற்கான நியாயப் படுத்தல்களையும், கருத்தியல் வியாக்கியானங்களையும் வழங்கியதை ஒரு சமூக அநீதிச் செயற்பாடாகக் கருதி மிக வன்மையாகக் கண்டிக்கிறது

3. தமது வார்த்தைகளாலும் செயல்களாலும் தமது சொந்த சமூகத்தின் உணர்வுகளைக் காயப்படுத்திய துணைவேந்தரும், பதிவாளரும் மக்களிடம் நிபந்தனையற்ற, பகிரங்க மன்னிப்பைக் கோர வேண்டும் என எதிர்பார்க்கிறது.

4. நினைவு கூரும் உரிமை ஒரு அடிப்படை மனித உரிமை. அதனை மீள நிலை நிறுத்துவதற்குத் தேவையான அனைத்து அறவழிச் செயற்பாடுகளிலும் தொடர்ச்சியாக ஈடுபட வேண்டும் எனத் தனி நபர்கள், சமூக நிறுவனங்கள், அரசியற் கட்சிகள் என அனைவரையும் வேண்டிக் கொள்கிறது.

5. எமது பாவனைப் பொருட்கள், பண்பாட்டு நிகழ்வுகள், கலை இலக்கிய முயற்சிகள் என அனைத்து வழிமுறைகளூடாகவும், குறியீட்டு வடிவில் எமது நினைவு கூர்தலும், நினைவு கூரும் உரிமைக்கான போராட்டமும் முன்னெடுக்கப் பட வேண்டும் என அவாவி நிற்கிறது.

6. நினைவுச் சின்ன அழிப்பிற்கு எதிராகப் பல்கலைக் கழக மாணவர்கள் ஆரம்பித்துள்ள அறவழிப் போராட்டத்திற்கு தனது நிபந்தனையற்ற ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறது.

7. இன்று துணைவேந்தர் நினைவுத் தூபி அழிக்கப்பட்ட இடத்திலேயே மீள அதனை அமைப்பேன் எனச் சொல்லி அடிக்கல் நாட்டியிருப்பதை நாம் நம்பத் தயாராக இல்லை. இனப்படுகொலையை நினைவு கூரும் தூபியை நீக்கி பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டது போல ‘சமாதானத்’ தூபியோ அல்லது யுத்த வெற்றி தூபியோ அமைக்கப்படலாம் என நாம் அஞ்சுகிறோம். நாம் எப்படி எவ்வாறு எதனை நினைவு கூர வேண்டும் என்பதனை நாமே தீர்மானிக்க வேண்டும். இருந்த தூபி இருந்தவாறே மீள அமைக்கப்பட வேண்டும். வேறெந்த தீர்வும் திணிப்பே தவிர வேறொன்றும் இல்லை என்பதைச் சுட்டிக்காட்டுகிறது.ஷ

8. தமிழ் அரசியற் கட்சிகள், கட்சி சார் அரசியற் செயற்பாடுகளுக்கு மேலாக, எமது தேசிய இனத்தின் மீது பிரயோகிக்கப் படும் அனைத்து அடக்கு முறைகளுக்கு எதிராகவும், சரிநிகர் சமானமாக இந்த நாட்டில் வாழ்வதற்கான உரிமைகளுக்காகவும், பொதுவான வேலைத்திட்டமொன்றை உருவாக்கி முன்னெடுக்க வேண்டும் எனவும் வேண்டிக்கொள்கிறது.

No comments