யாப்பு வரைபு குழு:கற்றறிந்தோர் தேவையென்கிறார் முரளி!


தேசிய கட்சிகள் பெயரில் புதிய சட்டவரைபை தயாரிக்க சட்டத்துறையில் அடிப்படை தகுதி அற்றவர்களைக் கொண்ட குழு நியமனம் செய்யப்பட்டுள்ளதாக சமுதாய மருத்துவ நிபுணர் முரளி வல்லிபுரநாதன் கருத்து வெளியிட்டுள்ளார்.


தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து 5 பேர் கொண்ட அரசியல் யாப்பு வரைபுக் குழுவை நியமித்து இருப்பதாகவும் அதில் மாவை சேனாதிராஜா தலைமையில் சிவிகே சிவஞானம், சுரேஸ் பிரேமச்சந்திரன், எம் கே சிவாஜிலிங்கம் , பொருளியல் பேராசிரியர் சிவநாதன் ஆகியோர் செயற்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதில் கோமாளித்தனம் என்னவென்றால் இவர்களில் ஒருவர் கூட அடிப்படை சட்ட அறிவுடைய சட்டத்தரணியாக கூட இருக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

விடுதலைப்புலிகளின் காலத்திலேயே சட்டவரைபை அவர்கள் உருவாக்க முயன்றபோது நேர்மையாக தமது உறுப்பினர்களின் சட்ட பற்றிய பரிச்சயமின்மையினை ஏற்றுக்கொண்டு முன்னாள் சட்டமாஅதிபர் சிவபசுபதி சட்டநிபுணர் விசுவேந்திரன் மேலும் பல கற்றறிந்த பேராசிரியர்களை கொண்ட ஆலோசனைக்குழுவை நியமித்து இருந்தார்கள்.

ஆனால் இன்று சட்டம் சம்பந்தமான அடிப்படை அறிவற்ற குழு ஓன்று அரசியல் யாப்பு வரைபை தயாரிக்க புறப்பட்டு இருப்பது இந்தியா அல்லது வேறு சக்திகளினால் ஏற்கெனவே தயாரிக்கப்பட்ட ஒரு அரசியல் யாப்பு வரைபுக்கு உயிர் கொடுக்கும் சூழ்ச்சியோ என்ற நியாயமான சந்தேகம் பலர் மனதிலும் எழுந்துள்ளது. கடந்த காலத்தில் சுகாதாரத்துறை உட்பட அனைத்து துறைகளிலும் தமிழர் தேசத்தை பாதிக்கும் பிரச்சினைகளில் முடிவெடுக்கும் போது தொடர்புடைய துறைசார் நிபுணர்களையும் பேராசிரியர்களையும் கொண்ட ஆலோசனைச்சபை அமைத்து அவர்களின் வழிகாட்டுதலுடன் செயல்படவேண்டும் என்று தமிழ் கட்சிகளை கோரியிருந்தேன். 


ஆனால் தமிழ்கட்சிகளின் தற்போதைய தான்தோன்றித்தனமான செயல்பாடுகள் கல்லாத மாந்தர்க்குக் கற்றுணர்ந்தார் சொற் கூற்றம் என்று ஒளவையார் மூதுரையில் பாடியிருப்பதை நினைவூட்டுகிறது. இந்த நிலையில் இந்தக் குழுவினரின் செயல்பாடுகளையும் இவர்களால் சமர்ப்பிக்கப்பட உள்ள அரசியல் யாப்பு வரைபையும் ஈழ தமிழ் ஆர்வலர்கள் அனைவரும் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும் என்றும் பொறுப்பு வாய்ந்த தமிழ் ஊடகங்கள் இது தொடர்பாக தமிழ் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் எனவும் முரளி வல்லிபுரநாதன் தெரிவித்துள்ளார்.


No comments