அம்மாச்சி பூட்டப்பட்டது?


வவுனியா புதிய பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள வடமாகாணசபையின்  அம்மாச்சி உணவகம் நேற்றிலிருந்து மூடப்பட்டுள்ளது.

வவுனியா திருவநாவற்குளத்தைசேர்ந்த காவல்துறை உத்தியோகத்தர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது இதனையடுத்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தொற்று உறுதிசெய்யப்பட்ட காவல்துறை உத்தியோகத்தரின் மனைவி அம்மாச்சி உணவகத்திற்கு சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சுகாதார பிரிவினரின் அறிவுறுத்தல்களிற்கமைய அம்மாச்சி உணவகம் மூடப்பட்டுள்ளது.


இதேவேளை யாழ். குடாநாட்டில் கொரோனா தொற்று பரவுகின்ற வீதம் சற்று குறைவடைந்துள்ளது. இன்று உடுவில் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் போது தற்போதுவரை எவருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்படவில்லையென யாழ்.மாவட்ட செயலர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.

மொத்தமாக ஒக்டோபர் மாதத்தின் பின்னர் 120 பேர் யாழ். மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர். அதிலே 25 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இவர்களுடன் தொடர்புபட்ட வகையிலே சுய தனிமைப்படுத்தலுக்குட்பட்ட 2176 குடும்பங்களைச்சேர்ந்த 6109 பேர் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


No comments