சம்பந்தனின் புதிய நட்சத்திரம் அமெரிக்க கமலா(தேவி) ஹரிஸ்! பனங்காட்டான்


நேற்றைய தமிழ்த் தேசிய வரலாற்றையும், இன்றைய தமிழர் வாழ்வாதாரத்தையும், நாளைய தமிழ்மண் பொருளாதாரத்தையும் இழந்து நிற்பதற்கு தாமே முழுமுதற் காரணமென்பதை உணராது, வழக்கமான பொங்கல், தீபாவளி, வருடப்பிறப்பு நம்பிக்கைபோல - அமெரிக்காவின் உபஜனாதிபதியாகத் தெரிவாகியுள்ள கமலா(தேவி) ஹரிஸ் மீது சம்பந்தன் நம்பிக்கை வைப்பதில் எந்தப் பயனும் இல்லை
.   

கொரோனா கொள்ளை நோயின் இரண்டாம் அலை உலகை உலுப்ப ஆரம்பித்துள்ளது. எந்த ஒரு நாட்டையும் இம்முறை இது விட்டுவைக்கவில்லை. நோயுற்றவர்கள் ஐம்பது மில்லியனைத் தாண்ட மரணித்தவர்கள் ஒரு மில்லியனுக்கும் அப்பால் ஆகியுள்ளனர். இதற்கு இலங்கையும் விதிவிலக்கல்ல. 

மக்கள் தொகை, நிலப்பரப்பு என்ற ஒப்பீட்டில் பார்க்கையில் இலங்கையில் இப்போது கொரோனா வீச்சுக் கண்டுள்ளது. ஆகஸ்ட் மாத பொதுத் தேர்தலின்போது இதனை மடக்கிவிட்டோம் என்று கூறி, ஐ.நா.விடம் கெட்டிக்காரப்பிள்ளை என்று பெயர் வாங்கிய கோதபாய அரசின் பொய்யும் புரட்டும் இப்போது அம்பலமாகியுள்ளது. 

மாவட்டத்துக்கு மாவட்டம் எல்லை பிரிக்கும் நிலைக்கு நிலைமை இங்கு கட்டுமீறிவிட்டது. இதேவழியில், வடக்கையும் கிழக்கையும் தனித்துத் தள்ளிவிட்டால், கொரோனாவுடன் சேர்த்து அரசியல் பிரச்சனைக்கும் தீர்வு கண்டுவிடலாமல்லவா?

கொரோனாவைப் பார்த்து, இது என்ன கொரோனா என்று நையாண்டி செய்த டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் புதுவகை நோயினால் எதிர்காலம் என்னவென அறியாது திகிலடைந்துள்ளார். கிட்டத்தட்ட கொரோனாவின் நிலைதான். 

கோமாளித்தனமும், கொள்கையின்மையும் கலந்த இவரது சின்னத்தனமான செயற்பாடுகள், உலகின் தலைநாடென மதிக்கப்படும் அமெரிக்க ஜனநாயகத்தை கேள்விக்குறியாக்கி சவாலுக்குட்படுத்தியுள்ளது. 

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் நடைமுறை இவருக்கு வாய்ப்பாகிப் போய்விட்டது. தெரிவான ஜனாதிபதி பதவியேற்கும் அடுத்தாண்டு ஜனவரி 20ம் திகதிவரை இவருக்கு சூரிய சந்திர யோகம். இந்தத் தாராள கால இடைவெளி அவர் விரும்பும் சூதாட்டங்களை நடத்த போதுமானது. 

ஐந்து மாநிலங்களில் இவர் தரப்பால் தாக்கல் செய்யப்பட்டுள்ள நீதிமன்ற தீர்ப்புகள் இவருக்கு சாதகமாகுமா? வெள்ளை மாளிகை வாயிலில் ஜோ பைடன் காத்திருக்க, அதன் உட்புறத்தில் டொனால்ட் ட்ரம்ப் கதவை இறுக்கி மூடிக்கொண்டிருக்கிறார். 

புதிதாக பதவியேற்கும் ஜனாதிபதியின் நிலைமாறுகால நிர்வாகமென்பது ட்ரம்பின் இரண்டாம் தடவை ஜனாதிபதியாகப் பதவியேற்பதற்கான காலமென அமெரிக்க ராஜாங்க அமைச்சர் மைக் பொம்பியோ கூறியிருப்பது எதிர்கால நம்பிக்கையீனத்தைத் தருகிறது. 

ஜனாதிபதியாகத் தெரிவாகியுள்ள ஜோ பைடனுக்கும், உபஜனாதிபதி கமலா(தேவி) ஹரிசுக்கும் கனடியப் பிரதமர் உட்பட பல நாடுகளின் தலைவர்கள் வாழ்த்துக் கூறிவிட்டனர். ஆனால், வெள்ளை மாளிகையில் புதிய ஜனாதிபதியின் பணிகளுக்கென இயங்க வேண்டிய அலுவலகத்துக்கு ட்ரம்ப் நிர்வாகம் இடமளிக்க மறுக்கிறது. 

தோல்வியை ஏற்றுக் கொண்டு ட்ரம்ப் பதவி விலகாது இழுத்தடிப்பதற்கான காரணம், ஜனவரி நடுப்பகுதியில் அவர் விடுக்கவிருக்கும் முக்கிய அறிவிப்பில் இடம்பெறுமென சொல்லப்படுகிறது. தேர்தலில் நான் தோற்கவில்லை. வாக்கு மோசடிகளால் பைடன் இப்பதவியைக் கைப்பற்றியுள்ளார். ஆனால், 2024ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் நான் மீண்டும் போட்டியிடுவேன்" என்பதே இவரது அறிவிப்பாக இருக்குமென அவரது குடியரசுக் கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன. 

இப்படி நடக்குமானால், அத்தேர்தலில் கமலா(தேவி) ஹரிசுடன் டொனால்ட் ட்ரம்ப் மோதும் நிலை உருவாகக் கூடுமென்று ஜனநாயகக் கட்சியினர் கருதுகின்றனர். 

என்னவோ - முதன்முறையாக ஒரு பெண்மணி, தாய்வழியால் தமிழ் நாட்டின் வம்சாவழி, தந்தை வழியால் ஜமெய்க்க கலப்பினத்தவர், யூத சமூகத்தவரை கணவராகக் கொண்டவர், பிறப்பினால் அமெரிக்கரானவர் - மொத்தத்தில் பல்இன பல்கலாசாரத்தின் சின்னமாக அல்லது பிரதிநிதியாக கமலா(தேவி) ஹரிஸ் இன்று உலக அரங்கில் அடையாளம் காணப்படுகிறார். 

ஜோ பைடனின் துருவ நட்சத்திரம் இவர். எழுபத்தெட்டு வயதான பைடனுக்கு ஐம்பத்தாறு வயதான கமலா(தேவி) ஹரிஸ் உறுதுணையாக இயங்குவாரென அனைவரும் எதிர்பார்க்கின்றனர். இலங்கையரான தமிழ்ப் பெண் ரோகிணி லக்சுமி ரவீந்திரனை தமது செயலக முதன்மை அதிகாரியாக (ஊhநைக ழக ளவயகக) கமலா ஹரிஸ் நியமித்துள்ளார். ரோகிணியின் தந்தையார் அமெரிக்காவின் பிரபலமான ஒரு மருத்துவர். 

வெள்ளை மாளிகையில் முதன்முதலாக இரண்டு தமிழ்ப் பெண்மணிகள் பதவி வகிப்பது பெருமை தருவது. இதனால் ஈழத்தமிழர் அரசியலுக்கு ஏதாவது தீர்வு கிடைக்குமென உலகம்வாழ் தமிழர்கள் எதிர்பார்ப்பது சாத்தியமாகுமா?

உலகின் எந்த மூலையிலாவது எவராவது ஒரு தமிழர் ஏதாவது ஒரு உயர்பதவியை அடையும்போது அதனால் உவகை கொள்வதும், அவர்கள்மீது அதீத நம்பிக்கை வைப்பதும் எம்மவர் வழக்கம். ஆற்றில் தத்தளிக்கும்போது சிறு துரும்பொன்றை எட்டிப்பிடிக்கும் நம்பிக்கை போன்றது இது. 

உபஜனாதிபதியாகத் தெரிவாகியுள்ள கமலா(தேவி) ஹரிசினால் அமெரிக்க வெளியுறவுக் கொள்கையில் அவர் விரும்பியவாறு ஏதாவது மாற்றம் செய்ய முடியுமா?  

எடுத்த எடுப்பில் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் இவ்விடயத்தில் தமது நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார். நம்பிக்கைதான் வாழ்க்கை என்ற தத்துவத்தின் அடிப்படையில் நம்பிக்கை ஏற்படுவது தவறன்று. ஆனால், அறிவுபூர்வமாக இதனை சிந்திக்க வேண்டும். 

கடந்த பல ஆண்டுகளாக அமெரிக்க அரசியலில் பல புதிய குழுக்களை அங்கு வாழும் தமிழர்கள் உருவாக்கியுள்ளனர். கிளின்ரனுக்கான தமிழர், ஒபாமாவுக்கான தமிழர், ட்ரம்புக்கான தமிழர் (Tamils for Obama, Tamils for Clinton, Tamils for Trumpஎன்ற பெயர்களில் இயங்கிய குழுக்களால் எதனை சாதிக்க அல்லது நிறைவேற்ற முடிந்தது. 

சில வாரங்களுக்கு முன்னர் பைடனுக்கான தமிழர் என்ற பெயரிலும் ஓர் அறிக்கை வெளிவந்தது. விரைவில் கமலா(தேவி) ஹரிசுக்கான தமிழர் என்ற பெயரிலும் ஒரு குழு நிச்சயமாக உருவாகுமென நம்பலாம். இவைகளால் அறிக்கைகள் விடுவது மட்டுமே செய்யக்கூடியதாக அமையும். 

இந்திய - அமெரிக்க பொருளாதார அபிவிருத்தியில், கல்வித்துறை மேம்பாட்டில், கலாசார பரிவர்த்தனைகளில் உபஜனாதிபதியின் பங்களிப்பு நிச்சயமாக இடம்பெறும். இதற்கும் அப்பால், இந்திய மத்திய அரசு ஈழத்தமிழர் விடயத்தில் பைடன் - கமலா நிர்வாகம் ஏதாவது முன்னெடுக்க அனுமதி வழங்குமா? 

பிரித்தானியாவில் விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க அங்குள்ள உயர் ஆணையம் வழங்கியுள்ள தீர்ப்பை ஏற்று நடைமுறைப்படுத்தக்கூடாதென இந்திய அரசு பிரித்தானிய அரசுக்கு இந்த வாரம் ஆலோசனை வழங்கியதை இங்கு நினைவிற்கொள்ள வேண்டும். 

2001 செப்டம்பர் 11ம் திகதி இஸ்லாமிய தீவிரவாதம் அமெரிக்காவின் இரட்டைக் கோபுரம் மீது தாக்குதல் நடத்தயதைத் தொடர்ந்து, அப்போதைய ஜனாதிபதி ஜோர்ஜ்புஷ்எஉலகளாவிய ரீதியில் தடையொன்றை பிரகடனம் செய்தார். 

பயங்கரவாதத்தக்கு எதிரான தடையென்ற பெரும் போர்வைக்குள் விடுதலைப் போராட்ட அமைப்புகளையும் உட்படுத்தியதால் இரண்டுக்கும் நடுவிலிருந்த தடித்த கோடு அழிக்கப்பட்டது. இதனால்தான் தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடிய விடுதலை புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியே பிரித்தானியா, கனடா உட்பட உலக நாடுகள் பலவும் விடுதலைப் புலிகள் அமைப்பை தடைசெய்ய வழிவகுத்தது. 

பைடன் - கமலா நிர்வாகம் இந்தத் தடையை நீக்குமா? இந்தியாவுடன் ஆலோசிக்காமல் தமிழர்களின் அரசியல் விவகாரங்களில் ஒருதலைப்பட்சமாக முடிவை எடுப்பார்களா? 

சிலவேளை, ஜெனிவாவில் அமெரிக்கா முன்மொழிந்த இலங்கை தொடர்பான தீர்மானத்தை அமுல்படுத்த முன்வரலாம். அதனை முன்னெடுக்க ஈழத்தமிழர் தரப்பிலிருந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இதற்கான வல்லமை ஈழத்தமிழர் தரப்பிடம் இருக்கிறதா? இவ்விவகாரத்தில் அமெரிக்காவைக் கையாளக்கூடிய தலைமைத்துவம் இப்போது தமிழரிடம் உள்ளதா? உண்மையைச் சொல்வதானால் இல்லையென்றே கூறவேண்டும். 

ஈழத்தமிழருக்கென ஒரு நாடு இல்லை, ஓர் அரசு இல்லை. ஒரு நிர்வாகக் கட்டமைப்பு இல்லை. ஆகக்குறைந்தது ஒன்றுபட்ட கூட்டுத்தலைமை கூட இல்லை. 

எங்களுடன் பேச்சு நடத்த வருமுன் நீங்கள் உங்களுக்குள் ஒன்றுபட்டு ஒரு தலைமையில் ஒரு குரலில் வாருங்கள் என்று இந்தியா தமிழர் தரப்பிடம் கூறியும் அது இதுவரை நடக்கவில்லை. 

1965ல் இலங்கையில் பிரதமராகவிருந்த டட்லி சேனநாயக்க தமிழருக்கு ஒரு பல்கலைக்கழகம் வழங்க முன்வந்தார். தமிழரசார் தமிழ்ப் பல்கலைக்கழகம் கேட்க தமிழ்க் காங்கிரசார் இந்துப் பல்கலைக்கழகம் வேண்டினர். இருதரப்பும் ஒன்றாக ஒரு பல்கலைக்கழகம் கேளுங்கள் தருகிறேன் என்றார் டட்லி. அது நடைபெறவில்லை. 

இதே நிலைமைதான் இன்றுங்கூட. தமிழ்த் தலைமைகள் ஒன்றுபட்டு இணைந்து ஒரு தலைமையில் செயற்பட மாட்டாது என்பது தெரிந்து கொண்டே இந்தியா நாடகம் நடத்துகிறது. அமெரிக்காவில் பைடன் - கமலா நிர்வாகம்கூட அதே வழியைப் பின்பற்ற இந்தியா ஆலோசனை வழங்கலாம். 

இந்தியாவைக் கையாள ஒரு கூட்டுத்தலைமையை ஏற்படுத்த முடியாத தமிழர் தரப்பு, அமெரிக்காவுக்காக இணைந்து ஒரு தலைமையின் கீழ் வருமா? 

இருபது ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு தலைமையின் கீழ் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பை சின்னாபின்னமாக்கிய சாதனையாளர் சம்பந்தன். கூட்டிலிருந்த இரு கட்சிகள் வெளியேறியபோது அதனை அவர் விருப்புடன் நிறைவேற்றினார். பின்னர் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளையும் ஓரவஞ்சமாக நடத்தி தமிழரசை மட்டும் தம் கைக்குள் பிடித்துக் கொண்டார். 

தியாகி திலீபன் நினைவு நிகழ்வுக்காக இணைந்த மூன்று தமிழ்த் தேசிய கட்சிகளை நிரந்தரமாக இணைக்க விரும்பும் மாவை சேனாதிராஜாவுக்கு முட்டுக்கட்டை போட்டிருப்பவரும் இவரே. இந்த வயோதிபத் தலைமையிடம் வலுவான கூட்டாக இணைந்து செயற்பட விரும்பும் எண்ணம் கிடையாது. 

ஆயுட்காலம்வரை தலைவர் பதவிஇ சிங்கள அரசு வழங்கியுள்ள ஆடம்பர மாளிகை, சுற்றிவர பணியாளர்கள், பந்தாவுடன் கூடிய பாதுகாப்பு வசதி என்பவையே இவரது தமிழருக்கான தீர்வு. 

நேற்றைய தமிழ்த் தேசிய வரலாற்றையும், இன்றைய தமிழர் வாழ்வாதாரத்தையும், நாளைய தமிழ்மண் பொருளாதாரத்தையும் இழந்து நிற்பதற்கு தாமே முழுமுதற் காரணமென்பதை உணராது, வழக்கமான பொங்கல், தீபாவளி, வருடப்பிறப்பு நம்பிக்கைபோல - அமெரிக்காவின் உபஜனாதிபதியாகத் தெரிவாகியுள்ள கமலா(தேவி) ஹரிஸ் மீது சம்பந்தன் நம்பிக்கை வைப்பதில் எந்தப் பயனும் இல்லை. 

No comments