ஆண்டான் அடிமை மனநிலை மாறவேண்டும



ஆட்சியாளர்கள் , ஆண்டான் அடிமை எனும் மனநிலையில் இருந்து மாறி, ஒரே நாட்டிற்குள் ஒற்றுமையாக வாழ விரும்பும் தமிழ் மக்களுக்கு இடையூறு விளைவிக்க வேண்டாம் என ஆட்சியாளர்களிடம் தான் கோருவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே..சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். 

மாவீரர் நாள் நினைவேந்தலுக்கு, பருத்தித்துறை நீதிமன்றினால் தடை விதிக்க வேண்டும் என கோரி பொலிசாரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பிலான விசாரணைகளை அடுத்து பருத்தித்துறை நீதவான் நீதிமன்றின் நியாயதிக்கத்திற்குள் பொதுக்கூட்டம் கூட மன்று தடை விதித்தது. 

அதனை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே எ,.கே.சிவாஜிலிங்கம் அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், 

பொலிசாரினால் மாவீரர் நினைவேந்தலுக்கு தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையின் போது பொலிசார் தமது சமர்ப்பணத்தில் , தற்போதைய கோவிட் -19 இன் தாக்கம் தொடர்பிலும் குறிப்பிட்டனர். 

அதனை மன்று உணர்ந்து கொண்டு கோவிட் -19 இனை கருத்தில் கொண்டு , தனது நியாயாதிக்க எல்லைக்குள் பொதுக்கூட்டங்களை நடத்த தடை விதித்தது. அதேவேளை நினைவேந்தல் தொடர்பில் எதனையும் மன்று குறிப்பிடவில்லை. 


எனவே ஒன்றிணைந்த தமிழ் கட்சிகள் நேற்று கூடி ஆராய்ந்து எடுத்த தீர்மானத்தின் பிரகாரம் நாளைய தினம் மாலை 6.05 மணிக்கு மணியோசை எழுப்பி , 06.06 மணிக்கு மௌன அஞ்சலி செலுத்தி , 06.07 மணிக்கு சுடரேற்றி மக்கள் தமது வீடுகளில் இருந்தவாறே அஞ்சலி செலுத்த முடியும். 


எந்த அரசாங்கத்தினாலும் தமிழ் மக்களின் நினைவேந்தும் உரிமையை தடுக்க முடியாது.  ஜனாதிபதி , பிரதமர் உள்ளிட்ட ஆட்சியாளர்களிடம் சொல்ல விரும்புவது , தமிழர்களின் உரிமைகளை தடுக்கும் உரிமை உங்களுக்கு இல்லை. எனவே நாங்கள் நினைவேந்தல் செய்வதற்கு இடையூறு விளைவிக்காது இருக்க வேண்டும். 

துட்டகைமுனு மன்னனை பின் பற்றுவதாக கூறியே ஆட்சிக்கு வந்து, அந்த மன்னனின் மண்ணில் வைத்து சத்திய பிரமாணம் எடுத்து ஜனாதிபதி ஆகினீர்கள். அந்த மன்னன் தன்னுடன் பேரிட்டு மடிந்த எல்லாள மன்னனுக்கு நினைவிடம் அமைத்து , அவ்வழியாக செல்வோர் இறங்கி எல்லாள மன்னனுக்கு அஞ்சலி செலுத்த வேண்டும் என கட்டளை இட்டு இருந்தவர். அவரை பின் பற்றுவதாக கூறும் நீங்கள் , தமிழர்களின் நினைவேந்தல் உரிமைகளை பறிக்கிறீர்கள். 

ஒரே நாட்டினுள் ஒற்றுமையாக வாழவே தமிழ் மக்கள் வாழ விரும்புகின்றார்கள். எனவே தமிழ் மக்களுக்கு இடையூறு விளைவிக்காம , நீங்கள் ஆளுபவர்கள் , தமிழர்கள் அடிமைகள் எனும் மனநிலையில் இருந்து மாறுங்கள் என தெரிவித்தார்.

No comments