ஊடகப்படுகொலைகள்:செல்வம் பேச்சு-விபரம் தேடும் கஜேந்திரன்?


காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பில் இதுவரையில் நீதி கிடைக்கவில்லை. இந்த நேரத்தில் இவர்களை நினைவுகூர்ந்து அவர்களுக்கு அனுதாப அஞ்சலியை செலுத்திக்கொள்கின்றேன்.

ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டும் மற்றும் ஊடக நிறுவனங்கள் தாக்கப்பட்டுள்ள போதிலும் அவர்கள் இந்த நாட்டின் நற் பெயருக்கு தீங்கு ஏற்படாத வகையிலும் அரசியல் மற்றும் சமூக பொருளாதார அபிவிருத்திக்கு தங்களுடைய பங்களிப்பை செய்து வருகின்றனர் என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் பாராளுமன்றில் இடம்பெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.

இதனிடையே கொல்லப்பட்ட மற்றும் ஊடகவியலாளர் விபரங்களை தேடிக்கொண்டிருந்த முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் விபரம் கிடைக்காமையினால் ஆத பற்றி பேசியிருக்கவில்லையென தெரியவருகின்றது.

செல்வம் தனது உரையில் போர்ச்சூழலில்கூட எங்களுடைய ஊடகவியலாளர்கள் நேர்மையான முறையில் செயற்பட்டார்கள். இருப்பினும் ஊடகவியலாளர்கள் தற்பொழுது அச்சத்துடன் செயற்படவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

குறித்த அமைச்சு ஊடகவியலாளர்களின் தேவைகள் மீது கவனத்தை செலுத்த வேண்டும். இவர்களுக்கு ஓய்வூதிய திட்டமொன்றை நடைமுறைப்படுத்த வேண்டும்.

அனுபவம் கொண்ட அமைச்சர் என்ற ரீதியில் இந்த விடயங்களை நீங்கள் கவனத்தில் எடுக்க வேண்டும்.

எங்களுடைய ஊடகவியலாளர்களை பொறுத்த மட்டில் வறுமை உண்டு. இவர்களை ஊக்குவிப்பதற்கு உபகரணங்களை வழங்குதல் மற்றும் ஏனைய ஊக்குவிப்பு நடைமுறைகளை மேற்கொள்வதற்கான வழிமுறைகளை அமைச்சின் கீழ் மேற்கொள்ள வேண்டும்.

வடக்கு கிழக்கு ஊடகவியலாளர்கள் மிக சிரமத்துடன் செயற்படுகின்றார்கள். அண்மையில் முல்லைத்தீவில் இரண்டு ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டார்கள் இதில் நீங்கள் கவனம் செலுத்தியிருந்தீர்கள். இதற்கு எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.

இவ்வாறு அமைச்சு செயற்படும் போது எமது ஊடகவியலாளர்கள் துணிச்சலாகவும், நேர்மையாகவும் செயற்படுவார்கள். ஆகவே அமைச்சு இதில் கவனம் செலுத்தி அவர்களை முன்னேற்றுவதற்கு ஓய்வூதிய திட்டமொன்றை நடைமுறைப்படுத்தினால் அவர்களும் அவர்களது வருங்கால சந்ததியும் தங்களைப் போற்றும்.

இதேவேளை இந்தியா உட்பட மலேசியா மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகளுக்கு எமது இளைஞர் யுவதிகள் தொழிலுக்காக சென்றுள்ளனர்.

இவர்கள் தற்பொழுது கொரோனா தொற்று காரணமான மிகவும் இன்னல்படுகின்றனர். இவர்கள் மீது கவனம் செலுத்த வேண்டும் எனத் தெரிவித்தார்.

No comments