சண்டைக்கு போனவர்களும் தனிமைப்படுத்தலில்?பருத்தித்துறை புலோலியில் தனிமைப்படுத்திய குடும்பத்தினருடன் மோதலில்  ஈடுபட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அப்பகுதியை சேர்ந்த 6 குடும்பங்களைச் சேர்ந்த 8 பேர் தனிமைப்படுத்தப்பட்டதுடன் இவர்களுக்கான தனிமைப்படுத்தும் காலம் 14 நாட்கள் நிறைவடைந்ததும் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி குற்றத்திற்காக சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவுள்ளது.

சம்பவம் பற்றி மேலும் தெரியவருகையில் புலோலி வடக்கினைச் சேர்ந்த குடும்பத்தினர் வைத்திய தேவைக்காக ஒரு மாத காலமாக மேல்மாகாணத்தில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். அவர்களை அவர்களது வீட்டில் அப்பகுதி சுகாதார பரிசோதகரால் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டதுடன் பொலீஸாரின் கண்காணிப்பில் உட்படுத்தப்பட்டனர். 

நேற்று வெள்ளிக்கிழமை முகக் கவசம் (மாஸ்க்) அணியாமல் சில இளைஞர்கள் அருகில் விளையாடியுள்ளனர். இது தொடர்பாக தனிமைப்படுத்தி வைக்கப்பட்டவர்கள் முகக் கவசம் அணியாமல் விளையாடியமையை சுட்டிக் காட்டினர்.

இதனால் ஆத்திரமுற்ற இளைஞர்களின் உறவினர்கள் பெண்கள் உட்பட சிலர் வீடுபுகுந்து தாக்குதல் நடாத்தினர். இது தொடர்பாக முறைப்பாடு தெரிவிக்கப்பட்டதையடுத்து பொதுச் சுகாதார பரிசோதகர்,  பொலீஸார்,  கிராம அலுவலகர் கொண்ட குழு சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு அவர்களை கடுமையாக எச்சரித்ததோடு 6 குடும்பங்களைச் சேர்ந்த 8 பேரையும் சுய தனிமைப்படுத்தப்பட்டு பொலீஸார் கண்காணிப்பில் வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


No comments