பனங்காட்டான் எழுதிய ''இந்திய அரசின் மறைமுகத்தை துகிலுரித்த தியாகியின் காலம் - 1''

1987ம் ஆண்டு - அன்று தனியார் வானொலிகள், தொலைக்காட்சிகள் இல்லை. கைத்தொலைபேசிகள் இல்லை. சமூக ஊடகங்கள் இல்லை. இணையத் தளங்கள் இல்லை. முகநூல்கள் இல்லை. இவை போன்ற எவையுமே இல்லை. இலங்கை அரசினதும், இந்திய நாட்டினதும் அனைத்து ஊடகங்களும் திலீபனின் தியாகப் பயணத்தை இருட்டடிப்பு செய்தன. ஆனால், ஒரு மணி நேரத்துள் ஆயிரம் ஆயிரமாக தமிழீழ மக்கள் நல்லூர் வீதியை மொய்த்து பல்லாயிரமாக திரள ஆரம்பித்தனர். 

முப்பத்து மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் எழுத வேண்டும் என எண்ணியும், ஏனோ எழுதத் தவறிய வரலாற்றுப் பதிவொன்றை இப்போது எழுத வேண்டிய தேவை உருவாகியுள்ளது. 

நீராகாரம்கூட அருந்தாது மண்ணுக்காகவும், தனது மக்களுக்காகவும் உயிர் கொடுத்த திலீபனின் தியாகத்தை கொச்சைப்படுத்தும் நோக்கோடு - அது இந்தியாவுக்கு துணைபோவது என்பதை மறந்தும் - அந்த அகிம்சைப் போராளியை நோயினால் மரணமானதாகவும், பயங்கரவாதியெனவும் சிங்கள் தேசம் பரப்புரையை ஆரம்பித்துள்ளதால் இந்தப் பதிவு அவசியமென இப்போது  நினைக்கிறேன். 

யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த முரசொலி தினசரியின் பிரதம ஆசிரியராக நான் பணியாற்றிக் கொண்டிருந்த காலமது. சுமார் நாற்பது வரையான (பெயரளவில்) ஆயுதக்குழுக்கள் அப்போது இயங்கின. 

பட்டம் பதவிகள் எனும் மோகமின்றி தாயகம் - தேசியம் என்ற உரிமைக் குறிக்கோளுடன் இயங்கிக் கொண்டிருந்த விடுதலைப் புலிகள் அமைப்பின் யாழ்ப்பாணத் தளபதியாக கிட்டு அவர்களும், அரசியல்துறைப் பொறுப்பாளராக இளைஞர் திலீபன் அவர்களும் பணியாற்றிக் கொண்டிருந்தனர். 

1963 நவம்பர் 29ம் திகதி உரும்பிராய் கிராமத்துக்கு அருகிலுள்ள ஊரெழு என்ற இடத்தில் இராசையா (ஆசிரியர்) தம்பதியினரின் புதல்வனாகப் பிறந்த திலீபனுக்கு (இயற்பெயர் பார்த்திபன்) 1987ம் ஆண்டில் 23 வயது மட்டுமே. அப்போதுதான் இலங்கைத் தமிழருக்காக இந்தியப் பிரதமர் ராஜிவ் காந்தி இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனவுடன் ஒப்பந்தம் செய்தார். கல்யாணத் தரகர் மணமகள் சார்பில் மணமகனை பதிவுத் திருமணம் செய்தது போன்றது இந்த ஒப்பந்தம் என அப்போது ஒரு கட்டுரையை எனது பத்திரிகையில் நான் வரைந்தது ஞாபகமுள்ளது. 

இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஐந்து அம்சங்களுக்கு இந்திய அரசு பொறுப்பானது. அவற்றுள் ஒன்று, இடைக்கால அமைப்பு அமைக்கப்படும்வரை புனர்வாழ்வு என்ற பெயரில் தமிழர் பிரதேசங்களில் சிங்களக் குடியேற்றம் இடம்பெறக்கூடாது என்பது. ஆனால், இதற்கு எதிர்மாறாக சிங்களக் குடியேற்றம் திருமலையில் இந்தியா பார்த்திருக்க இலங்கை அரசால் மேற்கொள்ளப்பட்டது. 

அந்த நாட்களில் வாரத்துக்கு ஒரு தடவையாவது திலீபன் இரவு வேளையில் எனது பத்திரிகை அலுவலகத்துக்கு வந்து பல்வேறு விடயங்களை உரையாடுவார். அரசியற் பொறுப்பாளர் என்ற அவரது பணி வழியாக இவ்வுரையாடல் அவருக்கு அவசியமாகவிருந்தது. இதனால் முரசொலி ஆசிரிய பிரிவில் பணியாற்றிய இளையவர்களான பாரதி, றஞ்சன், பிறேம், ரூபன், லியோன், துஸ்யந்தன் போன்றவர்களுடன் சகஜமாகப் பழகும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது. 

திருமலையில் இடம்பெற்ற சிங்களக் குடியேற்றங்கள் திலீபனை வெகுவாகப் பாதித்திருந்தது என்பதை அவரது உரையாடல்கள் ஊடாக என்னால் அறியமுடிந்தது. திருமலைக்கு நேரில் சென்று சில நாட்கள் தங்கியிருந்து இது தொடர்பான விபரங்களைச் சேகரித்து முரசொலியில் தொடர்கட்டுரையாக எழுதும் நோக்குடன் எமது மூத்த செய்தியாளரான இ.பாரதியை (தற்போது கொழும்புத் தினக்குரல் ஞாயிறு பதிப்பின் பிரதம ஆசிரியராகவுள்ளார்) ஆகஸ்ட் 30ம் திகதி பேருந்தில் அங்கு அனுப்பினேன். 

அன்றிரவு வவுனியாவில் ராணுவத்தினர் நடத்திய சினைப்பர் தாக்குதலில் அவரது வலது கரம் படுகாயமடைந்ததால் மறுநாள் அவரை இந்தியாவுக்கு சிகிச்சைக்காக அனுப்பிய போதிலும், அது பலனளிக்காது வலது கரம் துண்டிக்கப்பட்டது திலீபனுக்கு மிகுந்த மனவேதனையைக் கொடுத்தது. நாம் விரும்பியவாறு சிங்கள குடியேற்ற விபரங்களை நிரூபணமாக வெளிக்கொணரவும் முடியாது போய்விட்டது. 

அடுத்த இரண்டு வாரங்களில் - செப்டம்பர் 13ம் திகதி இரவு எனது அலுவலகத்துக்கு திலீபன் வந்தபோது அவரிடம் வழமையான கலகலப்பான சிரிப்பு காணப்பட்டதாயினும் ஏதோவொன்றை அவர் இலக்கு வைத்திருப்பது போன்று அவரது பேச்சுத்தொனி இருந்தது. ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து அன்றைய தினம் கொழும்பிலுள்ள இந்தியத் தூதுவர் டிக்சிற்றுக்கு 24 மணிநேர அவகாசம் கொடுத்து அனுப்பப்பட்ட கடிதம் பற்றி குறிப்பிட்ட அவர் வேறு எதனையும் தெரிவிக்கவில்லை. 

14ம் திகதி முக்கிய பத்திரிகையாளர் சந்திப்பொன்று (அப்போது ஊடகவியலாளர் என்ற பெயர் பயன்படுத்தப்படுவதில்லை) நடைபெறுமென்றும் அது தொடர்பாக தேசியத் தலைவருடன் முடிவெடுக்கப்பட்டதாகவும் சொல்லிச் சென்றார். அவர் சொன்னதுபோல அச்சந்திப்பு இடம்பெற்றது. அதில் உரையாற்றியவர் அவரேதான். முரசொலியிலிருந்து பிறேம் (தற்போது லண்டன் ஐ.பி.சி.யில் பணியாற்றுகிறார்) மற்றும் றஞ்சன் ஆகிய இருவரையும் அனுப்பியிருந்தேன். திலீபனின் உண்ணாவிரத அறிவிப்பு அதிகாரபூர்வமாக வெளியானது. இது முற்றிலும் எதிர்பாராதது. 

1984 பெப்ரவரி மாதத்திலிருந்து மிக நெருக்கமாகப் பழகிய ஒரு பத்திரிகையாளன் என்ற வகையில் அவரை நான் நன்கு புரிந்து வைத்திருந்தேன். எந்த முடிவையும் அவர் திடீரென எடுக்க மாட்டார். எந்த வார்த்தையும் அவர் உதட்டிலிருந்து எழுந்தமானமாக வராது. எதனையும் ஆய்ந்தோய்ந்து ஆழமாகச் சிந்தித்து முடிவெடுப்பார். 

அப்போதைய காலத்தில் ஷஅண்ணை| என்று எல்லோராலும் உரிமையுடன் அழைக்கப்பட்ட தேசியத் தலைவரிடம் தனது முடிவைத் தெரிவித்து அவரது அனுமதியையும் பெற்ற பின்னர் எடுக்கப்பட்ட முடிவை (நீராகாரம் அருந்தாத நோன்பு) திலீபன் ஒருபோதும் மாற்றமாட்டார் என்பதை அவரை அறிந்தவர்கள் நன்கறிவர். இருப்பினும் சிலர் 14ம் திகதி அவரைச் சந்தித்து முடிவில் மாற்றத்தை வேண்டினர். வழமையான சிரிப்பினூடாக தமது முடிந்த முடிவை அவர் தெரியப்படுத்தியதை கூடவிருந்த சில போராளிகள் ஊடாக அறியமுடிந்தது. 

15ம் திகதி காலை நல்லூர் கோவிலின் வடக்கு வீதியில், மனோன்மணி அம்மன் ஆலயத்துக்கு முன்னால் நெல்லி மரத்தின் கீழ் அவர் அமர்வதற்கான மேடை அமைக்கப்பட்டது. ஒரு கதிரையும், ஒரு கட்டிலும் அங்கு வைக்கப்பட்டன. அவ்வப்போது பலரும் உரையாற்றவென ஒலிபரப்பு வசதியும் பொருத்தப்பட்டது. 

காலை ஒன்பதரை மணியளவில் பழுப்பு நிற வாகனமொன்றில் திலீபன் கம்பீரமாக தனக்கேயுரிய சிரிப்புடன் வந்திறங்கினார். அவருடன் வாஞ்சிநாதன் (யாழ். பொது மருத்துவமனையில் தாதியாகக் கடமையாற்றியவர்), ராஜன் (பின்னர் யாழ்ப்பாண அரசியல் பொறுப்பாளராகவிருந்தவர்), அன்ரன் மாஸ்ரர், சொர்ணம் உட்பட வேறு பலரும் கூடவந்தனர். 

சற்றும் எதிரிபாராதவாறு முற்றிப் பழுத்த கனி போன்ற மூதாட்டி ஒருவர் நல்லூர் கோவில் தரிசனம் முடிந்து அர்ச்சனைப் பொருட்களுடன் வந்து திலீபனின் நெற்றியில் திருநீறு பூசினார். அது தியாகத் திலகம் என அப்போது நாம் எவரும் எண்ணவில்லை. இருபாலையைச் சேர்ந்த இந்த அம்மையாரின் பேரன் - அவரது பெயரும் பிரபாகரன், ஓர் இளம்புலி என்பது பின்னரே தெரியவந்தது. ஆனால், அம்மையாரின் தரிசனம் திட்டமிடப்படாத முற்றிலும் எதிர்பாராதது.

சரியாக 9:45 மணியளவில் மேடையேறிய திலீபனை அருகில் நின்று பார்த்தேன். தன் கண்களால் புன்னகைத்தவாறு கதிரையில் அமர்கிறார். பிரசாத் தலைமையில் கூட்டம் ஆரம்பமானது. நடேசனும் (பின்னர் காவற்துறை மாஅதிபராகவிருந்தவர்), காசி ஆனந்தனும் உண்ணா நோன்பின் தேவையையும் முக்கியத்துவத்தையும் விளக்கிக் கூறினர். 

புதுடில்லியில் தலைவர் பிரபாகரனுக்கும் இந்தியப் பிரதமர் ராஜிவ் காந்திக்குமிடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டவர்களில் திலீபனும் ஒருவர். இதனால் அப்பேச்சுவார்த்தையின் ஆழமும் நீளமும் இவர் நன்கறிவார். 

விடுதலைப் புலிகளுடன் எந்த ஒப்பந்தமும் செய்யாது எழுதாத ஒப்பந்தம் (கனவான்கள் ஒப்பந்தம்) மட்டுமே செய்தவர் ராஜிவ் காந்தி. தவிர்க்க முடியாத சூழ்நிலை கருதி விடுதலைப் புலிகள் இதனை ஏற்க நேர்ந்தது. 

வரலாற்றுப் பெருமைமிக்க சுதுமலைக் கூட்டத்தில் தேசியத் தலைவர் உரையாற்றுகையில், இந்த ஒப்பந்தத்தை விடுதலைப் புலிகள் ஏற்றுக்கொள்வதானது தமிழ் மக்களின் பாதுகாப்பை இந்திய அரசிடம் ஒப்படைப்பதானது என்று தெரிவித்தது முக்கியமானது. ஆனால், இரண்டு மாதங்களுக்குள்ளேயே அது மீறப்பட்டுள்ளது. 

இந்தியா தமிழீழம் பெற்றுத்தர வேண்டுமென்று திலீபன் கேட்கவில்லை. இந்த இடைக்காலத்தில் இந்தியா எதனைச் செய்ய வேண்டும், எதனைச் செய்யக்கூடாதென்ற ஐந்து அம்ச கோரிக்கையை மட்டுமே திலீபன் முன்வைத்தார். இதற்காக எழுத்து மூலம் கொழும்பிலுள்ள இந்தியத் தூதுவருக்கு 24 மணிநேர அவகாசம் வழங்கப்பட்டது. அதற்கான பதில் மௌனமே. 

இந்தக் கருத்துகளை இங்கு உரையாற்றியவர்கள் மிக விபரமாக விளக்கிக் கூறினர். ஆயுதங்களால் ஆயிரக்கணக்கான ராணுவத்தினரின் முகாமைத் தாக்கச் சொல்லும் ஓர் படையணியின் தலைவனுக்குரிய நெஞ்சுரத்துக்கு நிகராக திலீபன் தமது சாத்வீகப் போராட்டத்தை ஆரம்பித்தார். இது, விடுதலைப் போராட்டத்தின் இன்னொரு வடிவம் என்பதை தெரிந்து கொண்ட தமிழீழ மக்கள், ஆயிரம் ஆயிரமாக நல்லூர் வீதியை மொய்க்கத் தொடங்கினர். 

பாடசாலைச் சீருடையிலான மாணவிகளே இவர்களில் அநேகர். மேடையேறி கவிமழை பொழிந்தனர் பலர். அதில் திலீபனும் கரைந்ததை அவரது கண்களில் திரண்ட நீரலைகள் காட்டின. 

குடாநாட்டின் எண்திசைகளிலிருந்தும் வந்த ஈருருளிகள், மகிழுந்துகள், பேருந்துகள் அனைத்தும் நல்லூரை நோக்கியே பயணித்தன. நடந்தும், கிடந்தும், ஓடியும் திரண்டவர் கூட்டம் இன்னொரு புறம். அன்று தனியார் வானொலிகள், தொலைக்காட்சிகள் இல்லை. கைத்தொலைபேசிகள் இல்லை. சமூக ஊடகங்கள் இல்லை. இணையத் தளங்கள் இல்லை. முகநூல்கள் இல்லை. இவை போன்ற எவையுமே இல்லை. இலங்கை அரசினதும், இந்திய நாட்டினதும் அனைத்து ஊடகங்களும் திலீபனின் தியாகப் பயணத்தை இருட்டடிப்பு செய்தன. 

ஆனாலும் சிறுவர், இளையோர், பெண்கள், ஆண்கள், மூத்தோர் என எண்ணுக்கணக்குக்கு முடியாத பெருந்தொகையினரால் நல்லூரின் நான்கு வீதிகளும் நிரம்பி வழிந்தது. முரசொலி பத்திரிகை அன்று பிற்பகல் சிறப்புப் பதிப்பொன்றை வெளியிட்டது. நான்கு மணி நேரத்துக்கு ஒருவராக எமது செய்தியாளர்கள் களத்;தில் கடமையாற்றினர். அவர்கள் நேரலையில் கூறுவதுபோல செய்திகளை எழுதினர். 

அன்றிரவு எனது பணி முடிந்த பின்னர் நல்லூருக்குச் சென்றேன். அப்போது சுமார் பதினொரு மணியிருக்கும். தேசியத் தலைவர் ஒரு கதிரையில் அமர்ந்தவாறு கட்டிலில் சாய்ந்திருந்த திலீபனுடன் உரையாடிக் கொண்டிருந்தார். மூத்த போராளித் தலைவர்கள் பலர் அங்கு நின்றனர். 

தலைவர் இறங்கிச் சென்றதையடுத்து என்னை அருகே வருமாறு திலீபன் கைகளால் அழைத்தார். நீண்ட நேரம் உரையாடினால் களைப்பு ஏற்படும் என்பது தெரிந்தும் சுமார் பதினைந்து நிமிடங்கள் என்னுடன் உரையாடினார். அவரது கைகளை என் கைகளுடன் இணைத்து அணைத்து தடவி விட்டு விடைபெற்றேன். அடுத்து, பசீர் காக்கா (மனோகரன்) அவர் அருகே சென்று உரையாடினார். நள்ளிரவைத் தாண்டியபின்னர் திலீபன் நித்திரை கொண்டதாக அறிந்தேன். 

(அடுத்த கட்டுரையில் நிறைவுபெறும்) 


No comments