திலீபனின் காலடியில் துண்டு போட்டு இடம்பிடித்தோமா?

தியாகி திலீபனின் நினைவேந்தலை இலங்கை சிங்கள இனவாத அரசு தடுத்துள்ள நிலையில் மறுபுறம் நினைவேந்தலை நடத்த துண்டு போட்டு காத்திருந்த தரப்புக்கள் தொடர்பில் மக்களது கோபம் திரும்பியுள்ளது.

முள்ளிவாய்க்கால் முதல் திலீபன் நினைவேந்தல் ஈறாக தமக்கான அரசியலை செய்ய முன்னணி முண்டி அடிப்பது தெரிந்ததே. அதனை கேள்விக்குள்ளாக்குபவர்கள் மீது சேறுபூசுவதும் வழமையாகும்.

இதனிடையே நினைவேந்தல் தடுக்கப்பட்டமை தொடர்பில் முன்னணி தலைவர்களுள் ஒருவரான பார்த்தீபன் கருத்து தெரிவிக்கையில்:-

நீதிமன்றம் தடை உத்தரவு வழங்கியது என்பதற்கு அப்பால் எமக்கு நாமே தடைகளை இட்டுக் கொண்டோம். ஒரு வளைவினை அமைப்பது முதல் யார் நினைவேந்தலை நடாத்துவது வரை பல தடைகளை நமக்குள் நாமே போட்டுக் கொண்டோம்.

எங்கள் நாக்கு என்றும் அடக்கத்துடன் இருந்தது கிடையாது. நினைவேந்தலை நடாத்துவதற்கு முழுத் தகுதியையும் கொண்ட ஏகபோக உரிமை எமக்கே உரித்தானது என்று ஒவ்வொருவரும் ஒவ்வொருவரை தட்டிக் கழித்தோம்.

எமது தமிழ் இன வரலாறுகளை ஓன்று பட்டு அடுத்த சந்ததிக்கு கடத்த வேண்டும் என்று நினைத்ததை விட கடும் சொற்களால் மற்றவர்களை ஒதுக்குவதில் தான் கரிசனை கொண்டோம்.

இதைத்தான் நாம் தொடர்ந்தும் செய்யப்போகின்றோம் என்றால் மக்கள் புரட்சி வெடிக்கட்டும் என்றுரைத்த அந்த உத்தமனின் கனவுப்படி ஒன்று பட்ட மக்கள் திரட்சியை உருவாக்கவோ வரலாறுகளை கடத்தவோ முடியாது.

கமால் குணரட்ன என்பவன்  கூறியது போல் திலீபன் நோயால் இறந்தான் என்ற வரலாற்றுப் பிறள்வை சிங்கள பௌத்த பேரினவாதம் ஒன்று பட்டு விதைக்கும்.

தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களைத் தாண்டி நாவடக்கதுடன் மனிதநேயப்பண்புடன் ஒன்றுபட்ட கொள்கையுடன் எல்லோரும் ஒன்றுபடுதல் சாத்தியமாகும் வரை தியாக தீபம் திலீபன் அண்ணாவின் பசி தீர்ந்து போவதும் அசாத்தியமாகும் என தெரிவித்துள்ளார்.


No comments