காணாமல் ஆக்கப்பட்டோர்:காலம் தந்த தீர்வை பெறுவோமா? அழ.இனியவன்

அண்மைக்காலமாக தமிழர் தாயகப்பகுதிகளில் இடம்பெற்றுவருகின்ற வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் தொடர் போராட்டங்கள் சர்வதேச

அளவில் கொரோணாவின் பின்னதான புதிய உலக ஒழுங்கில் இலங்கைக்கு எதிராக மிகுந்த சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது.குறிப்பாக அமெரிக்கா பிரிட்டன் போன்ற நாடுகள் நேரடியாகவே இலங்கையை எச்சரித்துள்ளது.இருப்பினும் தமிழ் மக்களின் தேவை இலங்கைக்கு எதிரான வெறும் எச்சரிப்பல்ல. காணாமலாக்கப்பட்ட உயிர்களின் சொந்தங்களுக்கு அவர்கள் இருக்கிறார்களா,இல்லையா?இல்லை என்றால் அவரகளுக்கு என்ன நடந்தது?இருக்கிறார்கள் என்றால் அவர்கள் எங்கே?என்ற ஒரு தெளிவான பதிலையும் அதற்கான சட்ட நடவடிக்கைகளையும் பகிரங்கமாக தெளிவுபடுத்தவேண்டும் .இல்லையெனில் காணமாலாக்கப்பட்டவரகளின் உறவுகளும் அவரகளின் அடுத்த சந்ததியும் வாழையடி வாழையாக இந்த போராட்டங்களை தொடரும் என்பது ஐயத்திற்கு இடமில்லை.


கடந்த ஏப்ரல் ஐந்தாம் நாள் வந்தாறுமூலை பல்கலைக்கழக வளாகத்தில் இடம்பெற்ற158 அப்பாவித்தமிழர்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட நிகழ்வை ஊடகங்கள் வாயிலாக பார்த்திருந்த ஒவ்வொரு மனிதனது உணர்வும் பெரும்பான்மை சிங்கள சமுதாயத்தை முதன்மைப்படுத்தியிருக்கின்ற அரச படைகள்மீதும் இன்று வரை தமிழ்மக்கள் தொடர்பான ஒவ்வொரு விடயத்திலும் ஓர வஞ்சகமாக செயற்படுகின்ற சிங்களத்தலைமைகள் மீதும் ஒரு வித எரிச்சலையுமே ஏற்படுத்தியிருக்கின்றது. மீண்டும் மீண்டும் கொண்டு சென்றவர்களிடத்தில் மண்டியிட்டு தமது உறவுகளை திருப்பி ஒப்படைக்குமாறு கோருவது கானல் நீரைத்தேடி ஓடியலையும் ஒரு பாலைவனத்து பாதசாரியின் தவிப்பு அவர்களின் மனங்களில் ஏக்கமாக படர்ந்திருக்கின்றது.இதனை கடந்த முப்பது வருடமாக ஆட்சி செய்யும் சிங்களத்தலைமைகள் ஒரு பொருட்டாகவே எடுத்திருக்கவில்லை.


மாறாக இந்த அரசுகள்  வலிந்து காணமல் ஆக்கப்பட்டவரகளின் உறவுகளையும் அவர்களது போராட்டத்தினையும் தீண்டத்தகாத ஒன்றாகவே பார்ப்பதும் தேசத்துரோக குற்ங்களாகவே சித்தரிப்பதும் வேதனையளிக்கின்றது. என்ட கண்ணீர் இவங்களை சும்மாவிடாது, இந்தப்பிள்ளைகளை நான் எப்படி காப்பாத்துறது?என்று அழுது சாபமிடும் உறவுகளின் வார்த்தைகள் ஒவ்வொன்றும்   ஆட்சி செய்யும் சிங்கள பெரும்பாண்மைகள் மீதும் அந்த  அரசுகள் மீதும் சாபங்களாகவே விழுகின்றன.


ஒவ்வொரு ஆண்டும் செப்ரெம்பர் 05ஆம் நாள் ஈழத்தமிழர் வரலாற்றில் இன்னொரு கறுப்பு ஜூலையின் நினைவுகளை பதிந்துவிட்டுச்செலகின்றது காலம். வந்தாறுமூலை அகதிகள் முகாம் சம்பவம். ஜூலை மாதத்தின் கலையாத துயர வரலாறுகளை அறிந்துகொள்ளும் ஒவ்வொரு இளையோரும் செப்ரெம்பர் 05ஆம் நாள் வந்தாறுமூலை பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்திருந்த அகதிகள் முகாமில் இருந்து இனவெறி இராணுவத்தினராலும் இஸ்லாமிய சமூக விரோதிகளாலும் பலவந்தமாக கடத்திச்செல்லப்பட்ட158அப்பாவித்தமிழர்கள், மற்றும் அதே காலத்தில் 06ஆம் திகதிய சுற்றிவளைப்பில் காவுகொள்ளப்பட்ட பதினாறு அப்பாவித்தமிழர்கள் பற்றிய வரலாறுகளையும் அறிந்து கொள்வார்கள்.

கடந்த 1990ஆம் ஆண்டு காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் சிறிலங்கா அரசிற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் முறிவடைந்து இரு பகுதியினருக்கும் இடையில்  கிழக்கில் பரவலான முற்றுகை யுத்தங்கள் இடம்பெற்றுக்கொண்டிருந்தது. குறிப்பாக வாழைச்சேனை, கொம்மாதுறை முகாம்களில் நிலை கொண்டிருந்த இராணுவத்தினர் வந்தாறுமூலை,சுங்கான் கேணி, கழுவங்கேணி தமிழ் மக்கள் குடியிருப்புக்கள் மீது பெரும் சுற்றிவளைப்பினை மேறகொண்டிருந்தனர். அதன் நோக்கம் தமிழீழ விடுதலைப்புலிகளின் உக்கிரமான தாக்குதல்களால் படையினருக்கு ஏற்பட்ட உயிரிழப்புக்களுக்கு பழி வாங்கும் விதமாக அப்பாவித்தமிழர்களை இனவழிப்பு செய்வதே நோக்கமாக இருந்தது. இந்த நோக்கத்தினை அறிந்து கொண்ட மக்கள் படையினரிடம் இருந்து தங்கள் உயிர்களை பாதுகாக்கும் நோக்கில் வந்தாறுமூலை பல்கலைக்கழக வளாகத்தையும் அதனை அண்டியுள்ள பிரதேசங்களையும் ஒன்றாக்கி வந்தாறுமூலை பல்கலைக்கழக அகதிகள் முகாமை உருவாக்கியிருந்தனர். 

சுமார் 45000 தமிழ் மக்களைக்கொண்ட இந்த அகதிகள் முகாமின் நிர்வாகத்திற்குப்பொறுப்பாக இருந்த சமூக சேவையாளர்களான வைத்திய கலாநிதி தங்கமுத்து ஜயசிங்கன்;,பேராசிரியர் மனோ சபாரத்தின ,ஆகியோருடன்  சமூக சேவையாளர் வேலுப்போடி சிவலிங்கம் ஆகியோரும்  கடமையில் இருந்தனர்.இந்த முகாமுக்கான வாழ்வாதார உதவிகளை மட்டக்களப்பு மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியம் பொறுப்பேற்றிருந்தது.

1990 செப்ரம்பர் 05ஆம் நாள் காலை ஆறுமணி. விடிகாலையின் முகத்திரையை மூடிக்கொண்டிருந்த மூடுபனி படுவான் கரை நோக்கி உறைந்திருந்தது. இரவுமுழுக்க முகாமில் இருந்துவிட்டு பிழைப்புத்தேடி படுவான்கரைநோக்கிச்சென்ற ஒரு அப்பாவி குடும்பத்தாரை நோக்கி 'அடேய் தெமல வல்லா'என உரத்து சத்தமிட்ட ஒரு சிங்களச்சிப்பாயின் பலத்த சத்தத்தில் முகாமில் இருந்தவர்கள் அச்சத்துடன்  கலவரமடைந்திருக்க ஒவ்வொரு குடும்பத்தினரும் தங்கள் ஆண் உறவுகளை இராணுவத்திடம் இருந்து பாதுகாக்கும் நோக்கில் அவரவரை தேடிப்பிடித்து தங்கள் அருகில் வைத்திருந்தனர்.அனைத்தும் நடைபெற்று சிறிது நேரங்களுக்குள்ளேயே அகதிகள் முகாமை முழுவதுமாக முற்றைகையிட்ட இராணுவத்தினர். இராணுவச்சந்தைக்குள் இறைச்சிகளுக்காய் அடிக்கப்பட காத்திருக்கும் வெள்ளாடுகளைப்போல அனைத்து மக்களையும் ஆண்கள்,பெணகள்,இளையோர் எனதெரிவு செய்து வரிசையில் நிற்குமாறு இராணுவத்தினர் கட்டளையிட்டனர்.அதன்பின்னர் இராணுவச்சீருடைகளில் முகமூடி அணிந்த ஐந்து 'தலையாட்டிகள்'(நபர்கள்)அழைத்துவரப்பட்டு வரிசையில் நின்ற மக்களின் முன்பாக கதிரைகளில் இருக்கச்செய்தன்னர்.அதன்பின்னர் சுமார் ஏழு இஸ்லாமிய சமூக விரோத குழுக்களை சேர்ந்தவரகளையும்  அழைத்துவந்து நிறுத்தியிருந்தனர். இந்த இராணுவ ஒட்டுக்குழுக்களின் சைகைகளுக்கமைவாக சுமார் 158 அப்பாவி ஆண்களை அவர்களின் உறவினர்கள்  கதறக்கதற அழைத்துச்சென்று இரண்டு பேருந்துகளில் இராணுவத்தினர் ஏற்றிச்சென்றனர். தனது சாட்சியத்தை பதிவு செயதுள்ள ஒரு பெண் இறுதிப்பிரியாவிடையாக கைசைத்துச்சென்ற தன் கணவணின் மரணம் தோய்ந்த இறுதிப்பார்வை இன்றும் தன்னை வதைத்துக்கொண்டிருப்பதாக கூறுகின்றார்.இன்னொரு தாய் தன் மகனின் மாற்றுத்திறனாளிகளான பிள்ளைகளின் எதிர்காலம் தனக்குப்பின் என்னவாகும்  என கண்ணீர்மல்க வரலாற்றை பதிவு செய்கின்றார். ஒவ்வொரு உறவுகளின் வார்த்தை களையும் உற்று கேட்கும் போது ஒரு கோடி யுகங்களின் துயர மூட்டைகளை முப்பது ஆண்டுகளாக அவர்கள் ஒட்டுமோத்த இலங்கை அரச நிறுவனங்கள் மீது வெறுப்பையே ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது. அவர்கள் இந்த அரசுகளிடம்  தங்களுக்கான ஒரு முடிவை எதிர்பார்த்தே உயிர் வாழ்கின்றனர் எனபதை வேதனைகளுடன் பதிவு செய்ய வேண்டியுள்ளது.இத்தனை சம்பவங்களையும் நேரில் பார்த்த செஞ்சிலுவைச்சங்கத்தினர் படையினருக்கு நற்சான்றிதழ் வழங்கிவிட்டு சென்றிருந்தனர். இது ஒரு பொது நிறுவனத்தின் கொள்கைகளுக்கு அவமானத்தின் வர்ணங்களை அப்பிவிட்டுச்சென்ற, கடந்தகால சறுக்கல்களாகவே பார்க்கப்பட வேண்டும்.

அதன் பின்னர் மறுநாள் 06ஆம் திகதி மீண்டும் ஒரு சுற்றிவளப்பை மேற்கொண்டு எச்ச சொச்சமும் இருந்த 16 ஆண்களை கைது செய்து காவு கொண்டு சென்றிருந்தன சிங்களப்படைகள்.

இராணுவத்தினரால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட இந்தச்சம்பவத்தில் அப்போதைய கட்டளையிடும் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் ஜெரி.டீ சில்வா தான் நேரடியாக இந்த நடவடிக்கை முழுவதற்குமான பொறுப்பாக இருந்தார் என்பதனை உறுதிப்படுத்தும் விதமாக செப்ரொம்பர் 08 ஆம் நாள்  அகதிமுகாமிற்கு வந்த மேஜர் ஜெனரல் ஜெரி.டீ.சில்வா அகதிமுகாம் நிருவாக செயற்பாட்டாளரகளிடம் பின்வருமாறு கூறியிருந்தார் 'கைது செய்யப்பட்டவர்கள் எனது கட்டளையின்படிதன் கைது செய்யப்பட்டனர்.அனைவரும் குற்றவாளிகள்'என எடுத்த எடுப்பிலேயே கூறி முடித்தார்.கைது செய்யப்பட்டவரகள் எங்கு உள்ளனரா,அவரகளை எவ்வாறு பார்க்கலாம்?என அகதிமுகாம் நிருவாகிகள் வினவியபோதும் அவர் எவ்வித பதிலையும் தரமறுத்துவிட்டார். குறைந்த பட்சம் கைது செயதவர்கள் தொடர்பான ஒரு பட்டியலையாவது தருமாறு கோரியபோதும் மௌனமாக கடந்து சென்றுவிட்டார் ஜெரி.டீ.சில்வா.

அடுத்ததாக இந்த சம்பவங்களை அகதி முகாமில் நேரடியாக கையாண்டவர்கள்;வடக்கு கிழக்கு தமிழர் தாயகப்பகுதியில் அதிகமான ஆட்கடத்தல்கள் மற்றும் கொலைகள்,பாலியல் வல்லுறவுகள் என்பவற்றில் ஈடுபட்டதாக தமிழ் மக்களால் பரவலாகப்பேசப்பட்டுவரும் கப்டன் முனாஸ்,கப்டன் பாலித்த,கப்டன் குணவர்த்தன,மேஜர் மஜீத்,மேஜர் மொகான் ஆகிய அதிகாரிகளும் அடங்குகின்றனர்.இதில் இன்றுவரை உயிருள்ள சாட்சிகளாக இருப்பவரகள் தங்கள் சாட்சியங்களை சரியாக பதிவு செய்து சென்றுள்ளனர்.ஆனால் இன வழிப்பு ஒன்றையே காரணமாக கொண்டு செயற்படும் சிங்களப்பெரும்பானண்மை அரசுகள் தங்களது மனித உரிமைச்செயற்பாடுகளில் உலகின் தலைகளில் மிளகாய் அரைத்தே பழக்கப்பட்டவர்கள். அதற்காக காலத்திற்கு காலம் மனிதாபிமானச்சட்டங்களை உருவாக்கி பின் குப்பைத்தொட்டியில் கசக்கி வீசுவதை வழக்கமாவைத்திருக்கின்றது இலங்கை அரசு.

குறிப்பாக இலங்கை அரசு உள்நாட்டில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக நிறைவேற்றியிருந்த 2016ஆம் ஆண்டின் 14ஆம் இலக்க காணாமல் ஆக்கப்பட்டோர் பற்றிய சட்டம். இது தொடர்பாக நியமிக்கப்பட்ட ஆணையம் அதனது அறிக்கையின் பிரவு1.1இல் பின்வருமாறு விபரிக்கின்றது: இதன் பிரதான நோக்கம் காணாமல் போனவர்களை  தேடுதல் மற்றும் கண்டறிதல்,இத்தகைய சம்பவங்கள் மேலும் நிகழாதவாறு பரிந்துரைகளை முன்வைத்தல்,காணமல் போனவர்களின் உறவினர்களின் உரிமைகளுக்கு உத்தரவாதமளித்தல்,நிவாரணங்களை வழங்குவதற்கு உசிதமான நடவடிக்கைகளை எடுத்தல்.

மேலும் அதன் பிரிவு2.உட்பிரிவு-1இல் காணாமல் போனோரின் நிலை பேறான நீதி பற்றிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு வரலாற்று ரீதியான இயலாமை மற்றும் அரசாங்கத்தின் மிக குறைந்த அர்ப்பணிப்பு, காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் கடினமான சூழ்நிலைகளை ஏற்படுத்தியுள்ளது எனவும் அவர்களது அறிக்கை தொடர்கின்றது.மேலும் விசாரணைகளில் பங்குபெறும் பெண்களுக்கு அச்சுறுத்தல்களும் பாலியல் ரீதியான தொல்லைகளும் ஏற்படுவதாகவும் ,சாட்சியமளிக்க முன்வரும் அரச அதிகாரிகளுக்கே அச்சுறுத்தல் ,பணிநீக்கம்கூட இடம்பெறுவதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இவ்விடத்தில் ஒன்றை எமது மக்களும் அரசியல் தலைமைகளும் புரிந்து கொள்ளவேண்டும். எமக்கான நீதி ஒருபோதும் இலங்கை அரசிடம் இல்லை என்பதே அதுவாகும்.அதே நேரத்தில் குற்றம் இளைத்தவர்களை நீதியின் முன்நிறுத்த இந்த சட்டம் கூடுதலாக வாய்ப்பளிக்கவில்லை எமது மக்களின் தேவை எனபது நீதி,பரிகாரம், பாதுகாப்பு.இது இலங்கை அரசிடம் இருந்து ஒருபோதும் எமது மக்களுக்கு கிடைக்கப்போவதில்லை. எனவே எமது மக்களின் அனைத்து போராட்டங்களையும் சர்வதேசம் நோக்கி நகர்த்தி; அதனூடாக எமது உறவுகளுக்கு தீர்வினை பெற்றுக்கொடுக்க அல்லது இலங்கை அரசை பன்னாட்டுப்பொறிக்குள் சிக்கவைக்க எமக்கான தமிழ் தலைமைகள் கட்சி பேதமின்றி முன்வரவேண்டும்.

ஏனெனில் அதறகான வாய்ப்பு தற்போதைய கொரோணா கால நிலவரங்களுக்குப்பின்னர் தமிழ் மக்களுக்கு

சாதகமான சூழ்நிலைகளை தோற்று வித்துள்ளது. ஏனெனில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் சிங்களரசு தமிழ்மக்களையும் உலகையும் ஏமாற்ற முனையும் போதெல்லாம் காணாமல் ஆக்கப்பட்ட உயிர்களின் உறவுகள் வழங்கிய சாட்சியங்களும் அந்த அந்த காலங்களில் அவற்றை விசாரணை செய்த ஆணையங்களும் வழங்கியுள்ள அறிக்கைகளும் ஒரு பிரதான சாட்சியாக எமது கையில் உள்ளது.கடந்த 1994ஆம் வருடம்நவம்பர் 30ஆம் நாள் சந்திரிகா அம்மையார் நியமித்த வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவரகள் தொடர்பான விசாரணை அணையத்தில் அதன் தலைவராக திருவாளரகள், ஓய்வு பெற்ற நீதிபதி  பாலகிட்ணன் தலைமையில் டு.று.சு.வித்தியாரத்ன,று.N.விலசன் ஆகியோர் நடாத்திய விசாரணைகளின் அறிக்கை முடிவுகள்; மற்றும் அதில் பங்கு பற்றிய அனைத்து சாட்சியங்கள் எனபவற்றின் இறுதி முடிவுகள் யாவும், அரசபடைகளும் அதன் அப்போதிருந்த பொறுப்புக்கூறும் அதிகாரிகளும் இணைந்தே வந்தாறு மூலை அகதிமுகாம் அப்பாவி உயிர்களை வலிந்து காணாமல் செய்தனர் எனபதை வெளிக்கொண்டு வந்திருந்தனர்.இருப்பினும் ஆடசிக்குவரும் எந்த அரசும் குற்றவாளிகளுக்கு எந்த நடவடிக்கைகளையும் எடுக்காது. இதற்கான காரணம் இரண்டுதான். ஒன்று தங்களின் படைகள் தமிழரை வென்ற புத்தனின் பிள்ளைகள் எனும் மன நிலை. மற்றொன்று படையினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கமுனைந்தால் ஆட்சியளர்கள் அடுத்த தேர்தலில் தங்கள் பெரும்பாண்மையை இழக்க நேரிடும் எனும் அச்சம்.ஆனால் தமிழ் மக்கள் சார்பில் இந்த ஆவணங்கள் அசைக்க முடியாத சாட்சியங்களாக உலகின் மேசைக்கு எடுத்துச்செல்வதற்கான நல்லதோர் வாய்ப்பை இந்த அரசுகளே விட்டத்தருகின்றன. இதை அரசியல் வாதிகள் மறுவளமாக பார்க்கவேண்டும்.

இலங்கை அரசு காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான ஐ.நா. சமவாயத்தில் ஒப்பமிட்டுள்ளது. வலிந்து காணமல் ஆக்கப்பட்ட உறவுகளின் ஆகஸ்ற் 30ஆம் நாள் நினைவு நாளை அரசும் ஆதர்ச ரீதியாக அனுஸ்ரிக்கவேண்டும் என்பது அதன் கடப்பாடாக இருக்கின்றது.ஆனால் அந்த அரசே காணமல் ஆக்கப்பட்டுறவுகளின் ஒவ்வொரு போராட்டங்களையும் தடுப்பதுவும் அவர்களை தேசத்துரோகம் செய்தவரகளைப்பார்ப்பதுபோல் நோக்குவதும் வேதனைக்குரிய விடயமாக தென்படுகின்றது.இந்தமக்கள் ஜன நாயகத்திற்கு எதிராக என்னதான் செய்துவிட்டார்கள் என்பதை இந்தரசு அல்லது அரசுசார்ந்த அதிகாரிகள் பகிரங்கப்படுத்துவார்களா?உண்மையில் தமிழர்களைப் பொறத்தவரை இலங்கை தேசத்தின் ஜனநாயகம் எனபது தமிழ் மக்கள், சிங்களப்பெரும்பாண்மைகளுக்கும் அதன் ஆட்சி அதிகார பீடத்திற்கும் முன்னால் வாய் பொத்தி நிற்பது என்பதுபோன்றே தென்படுகின்றது. ஏனெனில் பெரும்பான்மையான சிங்களத்தலைமைகள் தமிழ்மக்களை தோற்கடிக்கப்பட்டவரகளாகவே உணர்கின்றனர்.இந்த மனநிலையில் இருந்து கொண்டு எந்த தீர்வினையும் நோக்கி அவர்களால் நகர முடியாது என்பதே உண்மை நிலை .செப்ரெம்பர் ஐந்தாம் நாள் வந்தாறுமூலை அகதி முகாம் வளாகத்தில்  உணரவுபூரவமாக இடம்பெற்ற வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவரகளின் நினைவுநாளில்கூட வெளித்தோற்றத்தல் பாரப்பதற்கு சுமுகமாக இருந்தாலும், ஒட்டுக்குழுக்களினதும் அரசபுலனாய்வாளர்களினதும் கழுகுப்பாரவைகளுக்கும், எச்சரிக்கைகளுக்கும் வழமைபோல் அந்த உறவுகள் ஆட்பட்டிருந்தனர்.இதனை அந்த இடத்தில் நின்ற உறவுகள் நேரடியாக கூறியிருந்தனர்.மேலும் பல உயிருள்ள சாட்சிகள் அரச புலனாய்வாளர்களுக்கு அஞ்சியபடி இரகசியமான முறையில் தங்கள் சாட்சியங்களை பதிவிட்டிருந்தனர்.

கண்ணதிரே தங்கள் உறவுகளை தொலைத்த சொந்தங்கள் தங்கள் நெஞ்சில் அடித்து கத்தி அழுதுகொண்டே அவர்கள் தங்கள் காலங்களை கடத்திக்கொண்டுள்ளனர். அவர்கள் இந்த அரசை கோருவது ஒன்றுதான். எங்கள் உறவுகள் இருக்கின்றனரா இல்லையா?இல்லையென்றால் அவர்களுக்கு என்ன ஆனது?இருக்கிறார்களெனின் எமது உறவுகளை எங்களிடத்தில் ஒப்படையுங்கள். எனபதே அவரகளின் நிலைப்பாடாகும்.கண்ணெதிரே இழுத்துச்சென்று காணாமலாக்கிவிட்டு அவர்கள் என்ன ஆனார்கள் என்று பதில்சொல்ல முடியாமல் இருப்பதுதான் இலங்கை அரசினதும் படையினரதும் அரசியல் ,இராணுவ ஒழுக்கமா?இதுதான் இலங்கை அரச இயந்திரத்தின் நீதி நியாயமா.?காணமல் ஆக்கப்பட்ட சொந்தங்கள் முன்னெடுக்கும் போராட்டங்களை பாராமுகத்துடன் நடத்தும் இலங்கை அரசு தமிழ்மக்களுக்கும் உலகுக்கும் சொல்லவரும் செய்திதான் என்ன எனபதையாவது இந்த அரசு தெளிவு படுத்தவேண்டும்.

ஒரு நாட்டை ஆளும் அரசு அதன் குடிகள் அனைவருக்கும் பொறுப்புக்கூறவேண்டி நிலையில் இருந்து ஒருபோதும் வழுவலாகாது ஆனால் இலங்கை அரசு எனபது சிங்கள இனத்திற்குமட்டுமே ஏகபோகம் எனக்கருதி சிறுபாண்மை இனத்தின்மீது ஓர வஞ்சகமாக நடக்குமானால் அது கிட்லரின் நாஜிகள் சாம்ராஜ்யமாகவே இலங்கை ஆட்சியும் அமையும்.இப்போதுவரை அதன் புறத்தோற்றம் அவ்வாறான ஒரு தோற்றப்பாட்டையே தமிழ் மக்களிடத்திலும் உலகிலும் ஏற்படுத்தியுள்ளது. எனவே எமக்கான தமிழ் அரசியல் தலைமைகள் அனைவரும் செத்தைக்குள் ஒரு பகுதியும் பற்றைக்குள் ஒருபகுதியுமாக பிரிந்து நிற்காது காணமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டங்களில் உணர்வுரீதியாக ஈடுபடவேண்டும். அதன் மூலமாக சர்வதேச முன்றலில் இப்பிரச்சனைகளை முன் நிறுத்தி அதனூடாக எமக்கான தீர்வை பெறக்கூடிய ஒரேஒரு சாத்தியப்பாட்டை நோக்கி நகரக்கூடியவிதத்தில் கட்சிகள் அனைத்தும் தேசிய ஒருமைப்பாட்டிற்குள் ஓரணியில் நின்று மக்களிடம் இழந்து விட்ட நம்பிக்கைகளை மீளக்கட்டயெழுப்பி மக்களை ஒணறு திரட்டி போராடும் நிலைக்கு அரசியல் தலைமைகள்மாறவேண்டும்.இல்லையெனில் எமக்கான எந்தத்தீரவும் எந்த ஆண்டிலும் கிடைக்காது என்பதே நிதர்சனம்.


No comments