வடக்கு கருணாவிற்கு நாக்கை பிடுங்கும் கேள்விகள்?சிங்கள தேசத்திற்கு நல்லிணக்கம் காண்பிக்க முற்பட்டு வரும் வெளிச்சம் கருணாகரன் தொடர்பில் தமிழ் தரப்புக்கள் கேள்விகளை எழுப்பிவருகின்றன.

கடந்த சில வாரங்களாக நீதியரசர் விக்னேஸ்வரனை அரச ஒட்டுக்குழு இணையதளங்களில் கருணாகரன் வசை பாடி வருகிறார்.

நீதியரசர் விக்னேஸ்வரன் தனது பாராளமன்ற உரைகளில் இனவாதம் பேசுவதாக அவதூறு பரப்பி வருகிறீர்கள். பாராளமன்றத்தில் வரலாற்று ரீதியான உண்மைகளை பதிவு செய்வது இனவாதமா என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

யுத்தம் முடிவடைந்து 11 ஆண்டுகள் கடந்து விட்டது. இந்த 11 ஆண்டுகளில் சிங்கள ஆட்சியாளர்களின் மனவுலகில் எதாவது மாற்றம் நிகழ்ந்து இருக்கிறதா ? தமிழரின் நீதியான நியாயமான கோரிக்கைகள் எவையும் நிறைவேற்றப்பட்டனவா? அப்பாவி மக்களை நாளாந்தம் அழுத்திவரும் அன்றாட அவசியப் பிரச்சினைகள் தானும் தீர்த்துவைக்கப்பட்டனவா? எதுவுமே நடக்கவில்லையே..


மாறாக மாகாவம்சம் உட்பட்ட சிங்கள இதிகாசங்கள் புனைந்து விட்ட புரளிகளாற் உருவான சிங்களப் பௌத்தப் பேரினவாதம் தேசியச் சித்தாந்தமாகச் பாடசாலைகள், பல்கலைக்கழகங்களிலிருந்து பத்திரிகைத்துறை ஊடுருவி இருக்கிறது . மாணவர்களோ புத்திஜீவிகளோ எழுத்தாளர்களோ அரசியல்வாதிகளோ சுயமாகச் சிந்திக்கமுடியாதவாறு சிங்கள மூளையத்தை இந்தக் கருத்தாதிக்கம் சிறைப்பிடித்துவைத்திருக்கிறது.


இந்த சித்தாந்தத்தின் விளைவாக வடக்கு கிழக்கு பௌத்த பூமி என்றும் சிங்கள மக்களுக்கு உரிய தேசம் என்றும் சிங்கள ஆட்சியாளர்கள் உரிமை கோருகிறார்கள் . பௌத்த மதமே இந்த நாட்டின் முதன்மை மதம் என வீராப்பு பேசுகிறார்கள். தமிழ் பேசும் மக்களின் பாரம்பரிய வரலாற்று தாயகமான கிழக்கு மாகாணத்தை முழுமையாக சிதைத்து விட பௌத்த தேரர்கள் அடங்கலான தனி சிங்கள செயலணியை நிறுவி 2000 இற்கு மேற்பட்ட பௌத்த மத அடையாளங்கள் கிழக்கில் இருப்பதாக அறிவித்து இருக்கிறார்கள் . இந்த செயலணியில் அங்கம் வகிக்கும் பௌத்த பிக்கு திருகோணமலையில் விவசாய காணிகளை அபகரித்து விவசாயம் செய்ய விடாமல் அடாவடித்தனம் செய்கிறார்.

முல்லைத்தீவில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் சிங்கள குடும்பங்கள் குடியேற்றப்பட்டு இருக்கின்றன . வவுனியா வடக்கில் சத்தமின்றி சிங்கள மக்கள் குடியேற்றப்படுகிறார்கள். மணலாற்று சிங்கள குடியேற்றங்கள் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகின்றன. மட்டக்களப்பு மற்றும் அம்பாறை எல்லை கிராமங்களை முழுமையாக சிங்கள மயப்படுத்தி வருகிறார்கள் . திருகோணமலையில் சைவ சமய வழிபாட்டு இடங்களை வழிபாட்டுக்கு தடை செய்கிறார்கள். திருகோணமலையில் அரிசிமலை உட்பட்ட சிறுபான்மை சமூகங்களுக்குரிய இடங்களை பௌத்த மத பிக்குகளுக்கு உரிய இடங்கள் என அடையப்படுத்துகிறார்கள்


இதுமட்டும் இன்றி வடமராட்சி கிழக்கு முதல் முல்லைத்தீவு வரையான கடல் பகுதி முழுவதையும் பருவ காலங்களில் சிங்கள மீனவர்கள் ஆக்கிரமித்து வருகிறார்கள். வடக்கு கிழக்கு எங்கும் பௌத்த மத அடையாளங்களை நிறுவி வருகிறார்கள். குறிப்பாக சைவ சமய ஆலய வளாகங்களை சிதைத்து திருகோணேஸ்வரம் முதல் நல்லூர் முருகன் ஆலயம் வரை உரிமை கோருகிறார்கள். தேசிய மட்ட பரீட்சைகளில் சிறுபான்மை மாணவர்களுக்கு அநீதி இழைக்கிறார்கள். சிறு குழந்தைகள, பெண்கள் உட்பட்ட அப்பாவிகளை கழுத்தை திருகி கொலை செய்த இராணுவ வீரர்களை தேசிய வீரர்களாக அறிவித்து மரண தண்டனையில் இருந்து விலக்களிக்கிறார்கள்

இதற்க்கு முடிவு என்ன ? மகாவம்ச மனநிலையில் தமிழ் பேசும் சமூகங்களின் வரலாற்று வாழ்விடங்களை , பண்பாட்டு விழுமியங்களை சிதைக்கும் சிங்கள அரசின் திட்டங்களை எதிர்கொள்ளுவது எப்படி ?

அறிவுசார் தளத்தில் வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்களின் வரலாற்று ரீதியான தாயகம் என்பதை பல்வேறு மட்டங்களில் ஆதாரங்களோடு நிறுவுவதை தவிர வேறு வழியில்லை. ஒரு தேசிய இனத்தின் பூர்விகத்தை அறிவுபூர்வமாக பதிவு செய்வதன் மூலமாக மட்டுமே சிங்கள மகாவம்ச மனநிலையை வெல்ல முடியும். நீதியரசர் விக்னேஸ்வரன் பேராசிரியர் பத்மநாதன் உட்பட்ட அறிஞர்களின் ஆய்வுகளை அடிப்படையாக கொண்டு இந்த தேசத்தில் வரலாற்று ரீதியாக வாழ்ந்து வரும் தமிழ் மக்களை பற்றி பதிவு செய்கிறார். இந்த நாட்டின் பூர்விக குடிகளாக தமிழ் மக்கள் வாழ்ந்தததை மட்டுமின்றி இங்கே பூர்விக மொழியாக தமிழ் மொழி இருந்ததையும் அடையாளம் செய்கிறார். அம்பாந்தோட்டையில் இருந்து வந்த பிக்கு திருகோணமலை தமிழ் விவசாயிகளை விவசாயம் செய்வதில் இருந்து தடுப்பதை அம்பலப்படுத்துகிறார் . சிங்கள மக்கள வாழ்விடங்களாக இல்லாத இடங்களில் பௌத்த மத அடையாளங்கள் நிறுவபடுவதை நிராகரிக்கிறார் . இதில் எங்கே இனவாதம் இருக்கிறது ?


பாராளமன்ற உறுப்பினர்கள் தங்களது பாராளமன்ற பதிவுகளுக்கு மேலாக பௌத்த சிங்கள ஆக்கிரமிப்புகளை எதிராக மக்களை அணிதிரட்ட வேண்டும் என்பது உண்மை . இந்த அநீதிகளுக்கு எதிரான களத்தில் முன் நிற்க வேண்டும் என்பது சத்தியம்.

ஆனால் பாராளமன்றத்தில் பௌத்த சிங்கள ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக அறிவுபூர்வமான தளத்தில் ஆதாரங்களை முன்வைத்து நிரூபிப்பதை இனவாதம் என சொல்ல முடியுமா? ஏன கேள்வி எழுப்பப்பட்டுள்ளது


No comments