திலீபன் விவகாரம்: பச்சை பொய்?

இலங்கை ஜனாதிபதி கோத்தபாயவின் கீழுள்ள பாதுகாப்பு அமைச்சின் செயலர் பொய் சொல்வதாக வடமாகாண அவை தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ன கூறுவது போல் திலீபன் நோயாளியாக எப்போதுமே இருக்கவில்லை. உண்ணாவிரதம் இருப்பதற்கு முதல் நாள் தான் சந்தித்து பேசியதாகவும் வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

திலீபன் உண்ணாவிரதத்தால் மரணமடையவில்லை, நோயின் காரணமாகவே மரணமடைந்ததாக பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ட அண்மையில் தெரிவித்த கருத்து உளறல் பேச்சு என்பதை, இன்று யாழ்ப்ப்பாணத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சீ.வி.கே.சிவஞானம்  வெளிப்படுத்தினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த கருத்து ஒரு ஆச்சரியமான கருத்து.  திலீபன் போராட்ட வேள்வியிலே ஆகுதியாகி 32 வருடத்திற்கு பிறகு கமால் குணரட்ன அவர்கள் பெரிய கண்டுபிடிப்பை கண்டுபிடித்தது போல் சொல்லியது ஆச்சரியமானது.

துரதிஸ்ட வசமாக எங்கள் மத்தியிலும், திலீபனை தெரியாதவர்கள், அவருடைய வாழ்க்கை வரலாறு நேரடியாக தெரியாதவர்கள் பல கருத்துக்களை சொல்லுவதை துன்பியலாகவே நான் பார்க்கின்றேன்.

1987 செப்டம்பர் மாதம் 14 ஆம் திகதி இந்த பிரச்சினைகள் தீவிரமடைந்த நாளில் காலையில் சென்று உயர்ஸ்தானிகர் திக்சிட்டை சந்தித்த பிறகு, யாழ் தேவியிலே வந்து என்னுடைய நண்பனாக இருக்கக் கூடிய சிவசுப்ரமணியத்தை அழைத்துக்கொண்டு திலீபனது அலுவலகத்திற்கு சென்று அவருடன் நள்ளிரவு வரை பேசியவன் நான்.

அவன் மிக தெளிவான சுகதேகியாக இருந்தான். தன்னுடைய தீர்மானத்திலே மிக தெளிவானவனாக இருந்தான்.

இந்த உண்ணாவிரதம் தொடர்பாக இன்னும் பேசலாம் என்ற போது, இல்லை நான் தெளிவாக இருக்கின்றேன் என்று சொல்லி அடுத்தநாள் உண்ணாவிரதம் இருந்தவன் அவன்.

தீர்மானமாக இருந்தவன். அவர் நோயாளியாக எப்போதுமே இருக்கவில்லை. ஏன் என்றால் அவனுடைய அரசியல் செயல்பாடு முழுமையாக ஓர் அளவுக்கு எனக்கு தெரிந்திருந்தது.

அவன் மக்களோடு பழகிய விதம் தெரிந்திருந்து, ஆகவே நோய்வாய்பட்ட அவனை தேசியத்தலைவர் உண்ணாவிரம் இருக்க சொன்னார் என்று சொல்வது தவறானது.

இயக்க வரலாற்றிலே எத்தனையோ பேர் தாங்கள் இந்த போராட்டத்திலே, விடுதலை வேள்வியிலே ஆகுதியாக ஆயத்தமாக இருக்கின்றவர்களிலே இவனும் ஒருத்தனாக இருந்தான்.

ஆகவேதான் அவன் தெரிவுசெய்யப்பட்டான். அவன் நோய்வாய் பட்டதாலேதான் தலைவர் தெரிவு செய்ததாக அர்த்தமில்லை.

அப்படியானால் கரும்புலிகள். அப்படியான வாய்ப்பே இல்லை. ஆகவே இது தவறான ஒரு கருத்து. அதிலும் கமால் குணரட்ன போன்ற பொறுப்பான பதவிகளிலே, இருப்பவர்கள் 32 வருடத்திற்கு பிறகு இப்படியான ஒரு கருத்தை சொல்வது மிகவும் கவலைக்குரியது.

அவருடைய தரத்துக்கும், அவர் இருக்கின்ற நிலைக்கும் இவ்வாறாக பேசுவது பொருத்தமில்லை என தெரிவித்துள்ளார்.

No comments