நவம்பர் 20?

 

எதிர்வரும் ஒக்டோபர் 01 ஆம் திகதி சிறிலங்காவின்  குழந்தைகள் நாள் அனுஸ்டிக்கப்படுகின்றது. இத்தினத்தை எமது அமைப்பு  கடைப்பிடிக்க தயார் இல்லை. எதிர் வரும் நவம்பர் 20 ஆம் திகதி பன்னாட்டு குழந்தைகள் தினத்தையே கடைப்பிடிக்க தயார் நிலையில் உள்ளோம் என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பின் வடக்கு மாகாணத்திற்கான இணைப்பாளர் திருமதி பத்மநாதன் கருணாவதி தெரிவித்துள்ளார்


வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளது அமைப்பின் ஊடக சந்திப்பு இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. குறித்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று காலை 10.30 மணியளவில் இடம்பெற்றது அதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்


வடக்கு கிழக்கு தமிழர்  தாயகப் பிரதேசங்களில் சிங்கள அரச படைகளாலும் துணை இராணுவ குழுக்களாலும் கடத்தப்பட்டும், கொடூரமாக சுட்டு கொலை செய்யப்பட்ட  சிறுவர்களுக்கு சர்வதேச குற்றவியல் நீதி விசாரணையை வலியுறுத்தி மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் எமது அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பன்னாட்டு குழந்தைகள் நாளை டிசம்பர் 14-1954 ஆம் ஆண்டில் இருந்து, ஐக்கிய நாடுகள் மற்றும் யுனிசெஃப் அமைப்புகள் ஆண்டு தோறும் நவம்பர் 20 ஆம் திகதி அன்று கொண்டாடுகின்றன. உலகெங்கணும் உள்ள குழந்தைகளுக்கிடையே புரிந்துணர்வையும் பொது நிலைப்பாட்டையும் ஏற்படுத்துவதற்காக இந்நாள் ஐக்கிய நாடுகள் சபையினால் பிரகடனப்படுத்தப்பட்டது. அத்துடன் குழந்தைகளின் நலன்களைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கான பல பொது நல திட்டங்களை உலகெங்கும் நடாத்துவதற்கும் இந்நாள் தேர்ந்தெடுக்கப்பட்டது.1954இல் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் தீர்மானப்படி சர்வதேச சிறுவர் தினத்தை அமுல்படுத்தும் பொறுப்பு யுனிசெஃப் இடம் ஒப்படைக்கப்பட்டது. யுனிசெஃப், யுனெஸ்கோ, சேவ் த சைல்ட் (SAVE THE CHILD) போன்ற அமைப்புக்கள் பல செயற்றிட்டங்களை முன்வைத்துச் செயற்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 

பெரும்பாலான நாடுகள் முன்பு  வெவ் வேறு நாட்களில் இதனை கொண்டாடினாலும் பின்னாளில் 1954இல் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் தீர்மானப்படி சர்வதேச சிறுவர் தினத்தை நம்பர் 20 அன்று மாற்றி கொண்டாடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக மாறி மாறி ஆட்சிப் பீடமேறிய சிங்கள பௌத்த பேரினவாத ஆட்சியாளர்கள் தமிழ் மக்கள் மீது கலவரங்கள் என்ற போர்வையில் திட்டமிட்டு மேற்கொண்ட இனவழிப்பு நடவடிக்கைகள் காரணமாக ஆயிரக்கணக்கான சிறுவர்கள் கடத்தப்பட்டும், படுகொலை செய்யப்பட்டும், அங்கவீனர்கள் ஆக்கப்பட்டுள்ளதுடன், பல்லாயிரக் கணக்கானோர் அனாதைகளாகவும் ஆக்கப்பட்டுள்ளதுடன் மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளனர்.

14 வயதுக்குக் கீழ் சிறுவர்களை வேலைக்கமர்த்தலுக்கு எதிராக இலங்கையில் பல சட்டங்கள் இருந்தபோதிலும், 10 இலட்சம் சிறுவர், உழைப்பில் ஈடுபடுத்தப்படுகின்றனர்- ஒரு இலட்சம் சிறுவர் தெருவில் நிர்க்கதிக்குள்ளாகின்றனர்.இவர்கள் ஒடுக்கப்படுவதன் காரணமாக இளங் குற்றவாளிகளாகவும் மாறுகிறார்கள்.

இறுதி யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் தமிழர் தாயக நிலப்பரப்பில் கிளைமோர்த் தாக்குதல்கள் மூலம் பெருமளவு பாடசாலை மாணவர்கள் படு கொலை செய்யப்பட்டுள்ளனர்,செஞ்சோலை சிறார் இல்லம், மருத்துவ மனைகள் தேவாலயங்களில் தஞ்சம் புகுந்த  சிறுவர்கள் ,பொது மக்களை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட விமானத் தாக்குதல்களிலும், தரை மற்றும் கடல் வழித் தாக்குதல்களிலும் பெருமளவான சிறார்கள் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டனர். 

அது மட்டுமின்றி யுத்த முடிவில் இராணுவத்தினரிடம் சரணடைந்த போராளிகளுடன் சென்ற அவர்களது பச்சிளம் குழந்தைகள் நூற்றுக் கணக்கானோர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். 

பாலச்சந்திரன் உட்பட பல சிறார்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இவ்வாறு பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நீதியை பெற சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணையை துரிதமாக வலியுறுத்தும்  மாபெரும் மக்கள் எழுச்சி பேரணிக்கு எமது அமைப்பால் ஐநாவின் பன்னாட்டு குழந்தைகள் நாளன்று  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பதனை  அன்புரிமையுடன் தெரிவித்து கொள்கின்றோம் 

No comments