தொடங்கியது மணலாறு வேட்டை?


முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் கமநலசேவைநிலையப் பிரிவுக்குட்பட்ட, சூரியன் ஆற்றுக்கு அப்பால் உள்ள வயல் நிலங்களைச் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தமிழ் விவசாயிகள் கைதுசெய்யப்பட்டதுடன், சீரமைப்புப் பணிக்காக பயன்படுத்திய உபகரணங்கள் மற்றும், வாகனங்களும் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.


அதேவேளை சூரியன் ஆற்றுக்கு அப்பாலுள்ள பகுதிகளில் இனி, தமிழ் மக்கள் விவசாயம் செய்யக்கூடாதென வனவளத் திணைக்களத்தினரும், வனஜீவராசிகள் திணைக்களத்தினரும் மற்றும், இராணுவத்தினரும் மிரட்டியதாகவும் அப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர். 


சூரியன் ஆற்றுக்கு அப்பால் தமிழ் மக்களுக்குச் சொந்தமான பெரியவெளி, பனிக்கவயல், மாரியாமுனை, கன்னாட்டி, அக்கரைவெளி ஆகிய வயல் நிலங்கள் காணப்படுகின்றன. இவை அனைத்தும் உறுதிக் காணிகளாகும்.இப் பகுதிகளில் கடந்த 1984ஆம் ஆண்டுக்கு முன்னர், அதாவது எமது இடங்களை விட்டு இடம்பெயர்வதற்கு முன்னரும், மீள் குடியேற்றத்தின் பின்னரும் குறித்த பகுதிகளில் நாம் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்தோம்.இந் நிலையில் இவ்வருட பெரும்போக நெற்பயிர்ச் செய்கைக்காக, வயல் நிலங்களைச் சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்தோம். அப்போது அங்கு வருகைதந்த இராணுவத்தினர் மற்றும், வனஜீவராசிகள், வனவளத் திணைக்களத்தினர் ஆகியோர் குறித்த பகுதிகளில் இனிமேல் பயிர்ச்செய்கை செய்யமுடியாது எனக் கூறியதுடன், அங்கு சீரமைப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த விவசாயிகளைக் கைதுசெய்தனர். அத்தோடு சீரமைப்பிற்காக பயன்படுத்திய வாகனங்கள் மற்றும் உபகரணங்களும் அவர்களால்கைப்பற்றப்பட்டது. 


மேலும் சூரியனாற்றுக்கு அப்பாலுள்ள வயல் நிலங்களுக்கு செல்வதற்காக, சூரியனாற்றுப்பாலமும் தற்போது நிர்மாணிக்கப்பட்டுவருகின்றது. அப் பாலமானது முல்லைத்தீவு மாவட்டசெயலகத்தின் நிதி ஒதுக்கீட்டிலேயே நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது. இந் நிலையில் குறித்த பால நிர்மாணிப்பினையும் உடன் இடைநிறுத்துமாறும், அங்கு பால நிர்மாணப்பணிகளில் ஈடுபடுபவர்கள் அங்கிருந்து வெளியேறவேண்டும் எனவும் இராணுவத்தினரும், அரச அதிகாரிகளும் மிரட்டியிருந்தனர்.அதேவேளை அங்கிருந்த ஏனைய விவசாயிகளிடம் இராணுவத்தினர் அடையாள அட்டைகளைப் பெற்று பார்வையிட்டதுடன் அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்திருந்தனர்.

No comments