பனங்காட்டான் எழுதிய ''அடுத்த காலடிக்கான வழித்தடம் ஈருருளியா? மீனாட்சியா? காளியா?''


அடுத்த மாதத் தேர்தலில் தமிழர் தாயகத்தில் - முக்கியமாக வடக்கில் மும்முனைப் போட்டி இடம்பெறுகிறது. மீனாட்சி அம்மனை வாலாயமாகக் கொண்ட விக்னேஸ்வரன் அணி ஒருபுறம். காளி அம்மனே தனது குலதெய்வம் எனக்கூறி வரும் சம்பந்தன் அணி மறுபுறம். விட்டுக்கொடாத கொள்கைப் பற்றுடன் ஈருருளியில் சவாரி செய்யும் கஜேந்திரகுமார் இன்னொரு புறம். மண்ணின் பிரதிநிதிகளாக நாடாளுமன்றம் சென்றால் இவர்கள் இனநலன்சார் விடயங்களில் இணைந்து செயற்படுவார்களா? அல்லது ஒட்டாத மண்ணாகவே பிரிந்து நிற்பார்களா?

இலங்கைத் தேர்தல் திருவிழா இந்த வாரம் அதன் உச்சத்தில் களை கட்டியுள்ளது. அடுத்த மாதம் 5ம் திகதி தேர்த்திருவிழா. ஆட்டக்காவடிகள், தொங்கு காவடிகள், பறவைக் காவடிகள், அன்னக் காவடிகள் என்று வேட்பாளர்களும் அவர்களின் வால்பிடிகளும் கால்கள் நிலத்தில் படாமல் அன்று ஓடிக் கொண்டிருப்பார்கள். 

மறுநாள் 6ம் திகதி தீர்த்தத் திருவிழா. இலங்கை நேரப்படி மாலைத் தேநீர் அருந்தும் வேளையில் முதலாவது தேர்தல் முடிவு வெளிவர ஆரம்பிக்குமென தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அன்றிரவு கொடியிறக்கத்துடன் சிலர் உறங்கி விடுவர். வேடிக்கை மனிதர்களாக பலர் காட்சியளிப்பர். 

அதற்கு அடுத்தநாள் 7ம் திகதி பூங்காவனமும் வைரவர் சாந்தியும். வென்றவர்களுக்குப் பூங்காவனம், மற்றவர்களுக்கு வைரவர் சாந்தி. 

மொத்தம் 225 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 196 பேர் விருப்பு வாக்குகளினாலும், மிகுதி 29 பேர் தேசியப் பட்டியலூடாகவும் தெரிவாவர். கூடிய வாக்குகள் பெறும் கட்சிகளுக்கு தேசியப் பட்டியலில் அதிக இடம் கிடைக்கும். 

இந்த வருடத் தேர்தலில் 16,263,885 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 1.2 மில்லியன் ஆட்கள் முதன்முறையாக இத்தேர்தலில் வாக்களிக்கவுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் 2009ல் முள்ளிவாய்க்கால் மௌனிக்கப்பட்டபோது சுமார் 10 - 12 வயதுக்காரராக இருந்திருப்பர். அன்று இடம்பெற்ற இனப்படுகொலையை இவர்களுள் அநேகர் அறிந்திருக்க மாட்டார். அல்லது மறந்திருக்க வாய்ப்புண்டு. 

18 - 25 வயதுக்குட்பட்டோர் இந்தத் தேர்தலில் வாக்களிப்பவர்களில் 31.95 வீதமானோர். இவர்களுள் 1.67 வீதத்தினர் முதன்முறையாக வாக்களிக்கத் தகுதி பெற்றவர்கள். இதனால் இந்தத் தேர்தலின் வெற்றியில் இவர்களின் வகிபாகம் முக்கியமானதாக அமையும். இளைஞர்களின் வேலைவாய்ப்பு அவர்களின் தொழில் வசதி போன்றவை முக்கியமான வாக்குகளாக மாற்றம் பெறும்.

இந்தத் தேர்தலிலுள்ள இன்னொரு விடயம் முன்னாள் ஜனாதிபதிகள் இருவர் - மகிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன ஆகியோர் எம்.பி. பதவிக்குப் போட்டியிடுவது. அத்துடன், ஜனாதிபதி தேர்தல்களில் போட்டியிட்டுத் தோல்வி கண்ட சஜித் பிரேமதாச, சரத் பொன்சேக, ரணில் விக்கிரமசிங்க, அனுர குமார திசநாயக்க, எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோரும் எம்.பி.யாவதற்குப் போட்டியிடுகின்றனர். 

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனே வயதால் மூத்த வேட்பாளராக இருக்கிறார். இவருக்கு வயது 89. சுயமாக நடமாட முடியாத இவரை எப்போதும் இருவர் கைத்தாங்கலாக பிடித்துச் செல்கின்றனர். 

முதன்முறையாக இந்தத் தேர்தலிலேயே அதிகூடியதாக 7452 பேர் போட்டியிடுகின்றனர் இவர்களுள் 3652 பேர் அரசியல் கட்சிகள் சார்ந்தோர். மிகுதி 3800 பேர் சுயஇச்சைக் குழுக்களைச் சார்ந்தோர். ஆகக்கூடிய வேட்பாளர்களாக 924 பேர் பத்தொன்பது எம்.பி.களை தெரிவு செய்யும் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுகின்றனர். அடுத்து, பதினெட்டு பேரைத் தெரிவதற்கான கம்பகா மாவட்டத்தில் 693 பேரும், 7 பேரைத் தெரிவதற்கான அம்பாறை மாவட்டத்தில் 540 பேரும் போட்டியிடுகின்றனர். 

22 தேர்தல் மாவட்டங்களிலிருந்தும் 225 பேரைத் தெரிவதற்கு 7452 பேர் போட்டியிடுவதைப் பார்க்கையில், ஒருவரைத் தெரிவு செய்ய 29 பேர் வீதம் போட்டியிடுவதைக் காணக்கூடியதாகவுள்ளது. 

தமிழர் தாயகமான வடக்கு கிழக்கை நோக்கினால் மூவினங்களையும் சேர்ந்த 29 பேரே இங்குள்ள 5 தேர்தல் மாவட்டங்களிலிருந்தும் தெரிவாவர். இதற்காக இங்கு 1700 பேர் போட்டியிடுவது ஒரு வரலாற்று அதிசயம். ஓர் உறுப்பினர் பதவிக்கு 58 பேர் வீதம் இங்கு போட்டியிடுகின்றனர். 

இலங்கையில் முதலாவது சட்டசபைத் தேர்தல் 1931ல் நடைபெற்றபோதே எந்தப் பாகுபாடுமின்றி பெண்களுக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டது. அந்தத் தேர்தலில் கொழும்பு வடக்கு சட்டசபைக்குத் தெரிவான நேசம் சரவணமுத்து 1937ல் மீண்டும் தெரிவாகி 1947வரை இப்பதவியை வகித்தார். இலங்கைச் சரித்திரத்தில் முதன்முதலாகத் தெரிவான தமிழ்ப் பெண் அரசியல்வாதி இவரே. 

எனினும், இலங்கையின் சனத்தொகையில் பெண்கள் 52வீதமாக இருப்பதுடன் ஒப்பிடுகையில் பெண்களின் பிரதிநிதித்துவம் மிகக்குறைவு. 2015ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் 13 பெண்களே (5.3 வீதம்) தெரிவாகினர்.

1947க்கும் 2020க்கும் இடையில் மொத்தம் 6 தமிழ்ப் பெண்கள் மட்டுமே நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்துள்ளனர். கடைசி நாடாளுமன்றில் விஜயகலா மகேஸ்வரன் ஒரேயொருவராக இருந்தார். இதுவரை நாற்பதுக்கும் அதிகமான சிங்களப் பெண்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்துள்ளனர். 

அடுத்த மாதத் தேர்தலில் வடக்கு கிழக்கில் அநேகமாக சகல கட்சிகளும் அணிகளும் இயலுமானவரை ஒரு பெண்ணுக்காவது வேட்பாளர் பட்டியலில் இடம் கொடுத்துள்ளனர். இதனை அரசியல் கொள்கை அடிப்படையில் என்று பார்ப்பதா, அல்லது அனுதாப அலையூடாக வாக்கு வங்கியை நிரப்புவதற்கு என்று பார்ப்பதா என்ற கேள்வி எழுகிறது. 

முக்கியமாக யாழ். மாவட்டத்தில் போட்டியிடும் மூன்று பெண் வேட்பாளர்கள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவர்கள். விடுதலைப் புலிகளின் திருமலை மாவட்ட அரசியல் பொறுப்பாளராகவிருந்து ராணுவத்தால் கொண்டு செல்லப்பட்டபின் காணாமலாக்கப்பட்ட எழிலனின் மனைவி அனந்தி சசிதரன் ஒருவர். ஐக்கிய தேசிய கட்சி அமைச்சராகவிருந்து கொல்லப்பட்ட மகேஸ்வரனின் மனைவி விஜயகலா அடுத்தவர். இந்தத் தேர்தலுக்கென களமிறக்கப்பட்டுள்ள சசிகலா, பத்தாண்டுகளுக்கு முன்னர் கொழும்பில் கொலை செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜின் மனைவி. 

இவர்கள் நாடாளுமன்றத் தேர்தலில் பங்கேற்க கொண்டு வரப்பட்டுள்ள தேவை, 1960ல் சிறிமாவோ பண்டாரநாயக்க முதன்முறையாக அரசியல் மேடையேற்றம் செய்யப்பட்டதை நினைவூட்டுகிறது. தூய வெண்ணிற ஆடையில், விதவைக் கோலத்தில் ஒவ்வொரு மேடையிலும் ஏறும்போது தமது கணவரின் கொலையைக் குறிப்பிட்டு கண்ணீர் சிந்தி அழுதவாறு உரையாற்றுவார். கொழும்பின் ஓர் ஆங்கிலப் பத்திரிகை இவரை அழுகின்ற விதவை (றுநநிiபெ றுனைழற) என்று நையாண்டித்தனமாகக் குறிப்பிட்டது. ஆனால், அந்த அழுகை அனுதாப அலையாக மாறி அவரையும் அவரது கட்சியையும் ஆட்சிபீடமேற்றியது. 

மேற்சொன்ன மூன்று தமிழ் வேட்பாளர்களின் களம், அவர்களுக்குக் கிடைக்கும் அனுதாப வாக்குகள் வாயிலாக அவர்கள் சார்ந்த அணியின் வாக்கு எண்ணிக்கையை அதிகரித்து ஆண் வேட்பாளர்களின் வெற்றியை நிர்ணயிக்குமா அல்லது இவர்களுக்குரிய வெற்றியை பெற்றுக் கொடுக்குமா? 

தங்களை கறிவேப்பிலையாக பாவிக்கின்றனர் என்று அனந்தி சசிதரன் சொன்னதையும், ஆணாதிக்கம் தலைதூக்கி நிற்கிறதென சசிகலா ரவிராஜ் நோக்கின் ஓரளவுக்கு இவர்களின் எதிர்காலத்தை அனுமானித்துக் கொள்ளலாம். ஐக்கிய தேசிய கட்சி சரிவு நிலையில் இருப்பதால் விஜயகலா மகேஸ்வரனின் வெற்றி வாய்ப்பு இம்முறை கேள்விக்குறியாகியுள்ளதை இங்கு முக்கியமாகக் குறிப்பிட வேண்டும்.

நம்பிக்கை, எதிர்பார்ப்பு, வெற்றிவாகை என்பவற்றுக்கான பதிலை எதிர்பார்த்திருக்கும் அடுத்த மாத தேர்தல் தொடர்பான தாயகத்தின் தேர்தல் நிலைவரத்தை முற்கூட்டிப் பார்க்கும் இறுதிப் பத்தி இதுதான். 

சிங்களத் தலைமையிலான பெரும்பான்மைக் கட்சிகள் அனைத்தும், அவர்களின் பினாமிகளும் (சுயஇச்சைகள்) தாராளமாக இங்கு இறக்கப்பட்டுள்ளன. முன்பின் தெரியாத பலர் பத்திரிகை விளம்பரங்களில் வியாக்கியானங்களுடன் காட்சி கொடுக்கின்றனர். இவர்கள் எந்தத் தேர்தல் மாவட்டத்திலும் வெற்றி பெறும் வாய்ப்பு காணப்படவில்லை. 

வடக்கில் மும்முனைப் போட்டி இடம்பெறுகிறது. விக்னேஸ்வரனின் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி, கஜேந்திரகுமாரின் தமிழ் தேசிய மக்கள் முன்னணி, சம்பந்தனின் தமிழர் தேசிய கூட்டமைப்பு ஆகியவையே இந்த மூன்றும். இவர்களுக்குள் இருக்கும் ஒரேயொரு ஒற்றுமை இவர்களின் கட்சிப் பெயரிலுள்ள தேசியம் என்பதுதான். மற்றப்படி நீயா நானா போட்டிதான். 

சுமந்திரனின் தன்னிலைப் போக்கும், எங்கிருந்தோ வரையப்படும் திட்டத்தை நிறைவேற்றி கூட்டமைப்பை சின்னாபின்னமாக்கும் அவரது நிகழ்ச்சி நிரலும், வெளிநாடொன்றின் கிளிப்பிள்ளையாக இடம்பெறும் அவரது பேச்சும் செயலும் கூட்டமைப்புக்குள்ளேயே விமர்சிக்கப்படுகிறது. இதனால் சில முக்கிய தலைகள் தேர்தல் முடிவையிட்டு கலக்கமடைகின்றன. 

கஜேந்திரகுமாரின் விட்டுக்கொடுக்காத கொள்கைப் பற்றும், சமரசத்துக்கு அப்பாற்பட்ட தமிழ்த் தேசிய தன்னாட்சிக் குறிக்கோளும் நீண்ட பத்தாண்டின் அறுவடையாக இம்முறை சிந்திக்கத் தெரிந்த இளைஞர் படையை அவருடன் இணைத்துள்ளது. 

அரசியலில் ஏற்கனவே களங்கண்ட பல அணிகளை தம்மோடு இணைத்துக் கொண்டு அறாத்தொடரான வரலாற்றுச் சாட்சிகளை தமது உரைகள் அறிக்கைகள் வாயிலாக வெளிப்படுத்தி மக்கள் நம்பிக்கையை தம்மோடு அணைத்து வருகிறார் விக்னேஸ்வரன். இக்கருத்துகள் பல்வேறு அரசியல் நோக்கர்களால் வெவ்வேறு கட்டுரைகளில் தெரிவிக்கப்பட்டவை. 

கூட்டமைப்பின் கடந்த கால செயற்பாடுகளில் விரக்தியடைந்துள்ள அப்பாவிப் பொதுமக்களுக்கு கஜேந்திரகுமாரும் விக்னேஸ்வரனும் நம்பிக்கை நட்சத்திரங்களாகக் காணப்படுகின்றனர். 

ஆனால், கிழக்கின் நிலைமை வேறு. கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளாக வெற்றி கொண்ட இருவர் இப்போது உள்ளும் புறமும் வெவ்வேறு அணிகளில் போட்டியிடுகின்றனர். கூட்டமைப்பின் உட்கட்சி மோதல் அங்கு தலைவிரித்தாடுகிறது. நம்பிக்கையிழந்த மக்கள் எதுவுமே தெரியாது திண்டாடுகின்றனர். இதற்குள் பிரதேசவாதமும் முன்கதவால் புகுந்துள்ளது.

தமிழர் அரசியல் தீர்வு விடயத்தில் கொள்கை வடிவில் ஓர்மமாகச் செயற்படக்கூடிய மாற்று அணிகளை மக்கள் நாடிச் செல்வது பரவலாகக் காணக்கூடியதாகவுள்ளது. 

மீனாட்சி அம்மனை வாலயம் செய்யும் விக்னேஸ்வரன், காளி அம்மனைத் துதிக்கும் சம்பந்தன் ஆகியோருடன் கஜேந்திரகுமார் ஈருருளிச் சவாரி செய்கிறார். 

இவர்கள் வெற்றியில் தோல்வியும், தோல்வியில் வெற்றியும் காணலாம். மும்முனைப் போட்டியில் மூன்று அணிகளில் இருந்தும் நாடாளுமன்றம் செல்பவர்கள் இப்போதைய போட்டிகளை மறந்து ஒரே குரலில் அங்கு ஒலிப்பார்களா? அல்லது பச்சை மண்ணும் சுட்ட மண்ணுமாக ஒட்டாத மண்களாகவே இருப்பார்களா? 

No comments