பாதுகாப்பான கொரோனா தடுப்பூசியை உருவாக்கியுள்ளோம் - ரஷ்யா

கொரோனா வைரஸ் தடுப்பூசி பாதுகாப்பானது எனவும் மருத்துவ பரிசோதனைகள் ஜூலை இறுதிக்குள் முடிக்கப்படும் என ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

ரஷ்யா பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

18 பேர் ஆராய்ச்சியில் பங்கேற்றனர் மற்றும் "கடுமையான பாதகமான நிகழ்வுகள், சுகாதார புகார்கள், சிக்கல்கள் அல்லது பக்க விளைவுகள்" எதுவும் இல்லாமல் பாதுகாப்பாக மீண்டனர்.

சோதனைகளின் முடிவுகள் "தடுப்பூசியின் பாதுகாப்பு மற்றும் நல்ல சகிப்புத்தன்மை குறித்து நம்பிக்கையை அளித்துள்ளது என கூறி உள்ளது.

"தடுப்பூசியின் நோய் எதிர்ப்பு சக்தி சிறப்பாக செயல்படுகிறது, ஆன்டிபாடிகள் உருவாக்கப்படுகின்றன. அது நம்மை கொரோனா வைரஸிலிருந்து பாதுகாக்கின்றன" என்று ஆராய்ச்சியாளர் ஸ்வெட்லானா வோல்ச்சிகினா பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட வீடியோவில் தெரிவித்துள்ளார். ஜூலை இறுதிக்குள் மருத்துவ பரிசோதனைகள் முழுமையாக நிறைவடையும் என்று எதிர்பார்ப்பதாக அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.

மேலும், சோதனை முடிவில் எதிர்பார்த்த பலன் கிடைத்துள்ள நிலையில், வரும் ஆகஸ்ட் மாதத்தின் மத்தியில் தடுப்பு மருந்தைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவர உள்ளது. ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள கமாலேயே தொற்று நோய் மற்றும் நுண்ணுயிரியல் நிறுவனம் இந்த தடுப்பு மருந்தை உருவாக்கியுள்ளது. தடுப்பு மருந்து தொடர்பான பரிசோதனைகளை செச்சினோவ் பர்ஸ்ட் மாஸ்கோ மெடிக்கல் யுனிவர்சிட்டி மேற்கொண்டுள்ளது.

கொரோனா தொற்றுநோயைக் கட்டுப்படுத்த உதவும் ஒரு தடுப்பூசியை உருவாக்கும் போட்டியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரமாக செயல்பாடு வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

No comments