கடலில் தத்தளிக்கும் ரோஹிங்கியா அகதிகளை பாதுகாக்க அமெரிக்க ஆணையம் கோரிக்கை

கடலில் தத்தளித்து வரும் ரோஹிங்கியா முஸ்லீம் அகதிகளின் படகுகளை தாய்லாந்து மற்றும் மலேசிய அரசுகள் அனுமதிக்க வேண்டும் என சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் கோரிக்கை விடுத்துள்ளது. 

“இன மற்றும் மத வன்முறைகளால் வெளியேறும் அகதிகளை சர்வதேச சட்டங்களுக்கு அமைய தாய்லாந்து மற்றும் மலேசிய அதிகாரிகள் அடையாளம் கண்டுகொள்ள வேண்டும்,” என ஆணையத்தின் தலைவர் Gayle Manchin. 

சமீப மாதங்களில், மியான்மர் மற்றும் வங்கதேசத்திலிருந்து படகு மூலம் வெளியேறிய ரோஹிங்கியா அகதிகள் சென்ற படகுகள் தாய்லாந்து மற்றும் மலேசிய அதிகாரிகளால் திருப்பி அனுப்பப்பட்டுள்ள நிலையில் இக்கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. 

“ரோஹிங்கியா மக்கள் தங்கள் தாய்நாடான மியான்மரில் எண்ணிப்பார்க்க முடியாத பல கொடுமைகளை எதிர்கொண்டிருக்கின்றனர்,” என ஆணையத்தின் ஆணையர் Johnnie Moore தெரிவித்துள்ளார். 

“ரோஹிங்கியா மக்களின் பாதுகாப்பை உறுதிச்செய்ய ஐ.நா., தாய்லாந்து மற்றும் மலேசிய தரப்புடன் இணைந்து செயல்பட அமெரிக்க அரசை வலியுறுத்துகிறோம்,” என அவர் குறிப்பிட்டுள்ளார். 

சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையத்தின் 2020 ஆண்டு அறிக்கையில், இன மற்றும் மத வன்முறை நிகழும் நாடாக மியான்மர் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே போல், சிறுபான்மையினரை கையாளும் விதத்திற்காக மலேசியாவை சிறப்பு கண்காணிப்புப் பட்டியலில் அமெரிக்கா சேர்க்க வேண்டும் எனப் பரிந்துரைத்துள்ளது. 

No comments