வடக்கில் கொரோனா கட்டுப்பாட்டில்!


வடமாகாணத்தில் கொரோனா பரம்பல் தற்போது பூரண கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு இந்நோய் பரவாது இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.


கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் சிகிச்சை பெற்றுவந்த யாழ்மாவட்டத்தை சார்ந்த 2 பேரை கடந்த ஜூலை மாதம் 4ம் திகதி சந்திப்பதற்காக 3 குடும்பங்களைச்சார்ந்த உறவினர்கள் கந்தக்காடு முகாமிற்கு சென்றிருந்தனர்.

கந்தக்காடு சிகிச்சை நிலையத்தில் பலருக்கு கொரோனோ தொற்று உறுதிப்படுத்தப்படுத்தப்பட்ட பின்னர் இந்த 3 குடும்பங்களையும் சேர்ந்த 9 பேர் கட்டாய தனிமைப்படுத்தல் முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கான பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ள நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இவர்களில் 9 மாத குழந்தை ஒன்றிற்கு காய்ச்சல், இருமல் போன்ற நோய் அறிகுறிகள் ஏற்பட்டதனால் அக்குழந்தை யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு அக்குழந்தைக்கு தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கந்தக்காடு சிகிச்சை நிலையத்தில் பணிபுரியும் வவுனியா மாவட்டத்தைச்சேர்ந்த இராணுவ வீரர் ஒருவருக்கு கொரோனோ தொற்று உறுதிப்படுத்தப்படுத்தப்பட்ட பின்னர் அவரது குடும்பத்தைச்சேர்ந்த 4 பேர் கட்டாய தனிமைப்படுத்தல் முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அவரது வீட்டுச் சுற்றாடலில் 4 வீடுகளைச் சேர்ந்தவர்கள் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக நெடுந்தீவில் கடந்த ஜூலை மாதம் 2ம் திகதி தரையிறங்கிய அகதி ஒருவர் தற்போது கட்டாய தனிமைப்படுத்தல் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளார். அவர் வருகை தந்ததிலிருந்து 2ம் ,9ம் நாட்களில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளில் அவருக்கு தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக காங்கேசன்துறையில்; கடந்த ஜூலை மாதம் 11ம் திகதி வருகைதந்த 4 பேர் கட்டாய தனிமைப்படுத்தல் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளார். இவர்களில் ஒருவருக்கு நோய் அறிகுறிகள் ஏற்பட்டு யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு அவருக்கு தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஏனையவர்களுக்கும் இன்று பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

யாழ் மாவட்டம் கோப்பாயைச் சேர்ந்த ஒருவர் அண்மையில் வெலிக்கடைச் சிறைச்சாலையிலிருந்து விடுதலையாகி வந்திருந்தார்.

வெலிக்கடைச்சிறைச்சாலையில் சில கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதனால் அவர் மீண்டும் வெலிக்கடைச் சிறைச்சாலைக்கே தனிமைப்படுத்தலுக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அவரது குடும்பத்தைச் சேர்ந்த 7பேர் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இதேபோன்று மன்னார் மாவட்டத்தைச்சேர்ந்த ஒருவரும் வெலிக்கடைச் சிறைச்சாலையிலிருந்து அண்மையில் விடுதலையாகி வந்திருந்தார். அவரும் வெலிக்கடைச்சிறைச்சாலைக்கு மீள அழைத்துச் செல்லப்பட்டதுடன் அவருடன் தொடர்பில் இருந்த 3 குடும்பங்களைச் சேர்ந்த 14பேர் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

தற்போது இந்தியாவில் கொரோனோ பரம்பல் தீவிரமாக இருப்பதனால் பலர் இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு வர முயற்சிக்கின்றனர். இவ்வாறு அடையாளம் காணப்பட்ட சிலர் கட்டாய தனிமைப்படுத்தல் முகாம்களிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

எனவே வட மாகாணத்தின் கரையோரப் பிரதேசங்களில் வசிக்கும் மக்கள் இந்தியாவிலிருந்து உங்கள் பிரதேசத்திற்கு சட்டவிரோதமாக யாராவது வருகை தந்தால் உடனடியாக உங்கள் பிரதேசத்திற்குரிய பொதுச்சுகாதார பரிசோதகர், சுகாதார வைத்திய அதிகாரி, கிராம சேவையாளர் அல்லது பொலிஸ் உத்தியோகத்தர் ஆகியோருக்கு தகவல்களை வழங்கி கொரோனா பரம்பலைக் கட்டுப்படுத்த உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம என தெரிவித்துள்ளார்.

No comments