கலாநிதி குருபரன் விளக்கம்?

நேற்றைய தினம் உயர்நீதிமன்றில் நடந்தது என்ன என்பது தொடர்பில் கலாநிதி குருபரன் விளக்கமளித்துள்ளார்.

1. வழக்கு நீதியரசர்கள் பிரியந்த ஜெயவர்த்தன, பத்மன் சூரசேன மற்றும் யசந்த கோடாகொட ஆகியோரைக் கொண்டமைந்த அமர்வின் முன்னால் வந்தது.

வழக்கு நேற்று எடுத்துக் கொள்ளப்பட்டது இரண்டு விடயங்கள் தொடர்பில்: (1) வழக்கை உயர் நீதிமன்றம் எடுத்துக் கொள்ளுவதா இல்லையா என்பது தொடர்பிலும் (leave to proceed) (2) என்னைத் தடை செய்த தீர்மானத்திற்கு எதிராக இடைக்காலக் கட்டளை (interim order) வழங்குவதா இல்லையா என்பது தொடர்பிலானதாகும்.

2. முன்பதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கும் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவுக்கும் தாம் ஆஜராக மாட்டோம் என சட்ட மா அதிபர் திணைக்களம் அறிவித்திருந்த்தால் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவுக்கு ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வாவும் பல்கலைக்கழகத்திற்கு மூத்த சட்டத்தரணி இ. தம்பையா ஆகியோர் ஆஜராகினர். சட்டமா அதிபர் எல்லா அடிப்படை உரிமை மீறல் வழக்குகளிலும் ஓர் தரப்பு என்பதால் சட்டமா அதிபர் சார்பில் கலாநிதி அவந்தி பெரேரா ஆஜராகியிருந்தார்.

3. என் சார்பில் ஆஜராகும் ஜனாதிபதி சட்டத்தரணி க. கனகேஸ்வரன் அவர்கள் வாதத்தை ஆரம்பித்து சில நிமிடங்களில் அமர்வின் தலைமை நீதிபதி நீதியரசர் பிரியந்த ஜெயவர்த்தன தான் முன்னர் சில சந்தர்ப்பங்களில் பகிரங்க உரைகள் மூலமாகவும் கட்டுரைகள் மூலமாகவும் பல்கலைக்கழக சட்ட ஆசிரியர்கள் சட்டத் தொழிலில் ஈடுபட வேண்டும் என்று கூறியுள்ளதாகவும் ஆகவே தான் இந்த வழக்கை கேட்பதில் ஏதேனும் ஆட்சேபணை உள்ளதா என ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வாவிடம் கேட்க அவர் தனக்கு ஆட்சேபணை இல்லை என்றும் எனினும் நீதியரசர் தன்னை இந்த வழக்கில் இருந்து விடுவித்துக் கொள்ள தானாக முடிவு செய்தால் (recusal) அது அவரது சுயவிருப்பம் என்று குறிப்பிட்டார். அதனைத் தொடர்ந்து நீதியரசர் பிரியந்த ஜெயவர்த்தன தன்னை இந்த வழக்கில் இருந்து விடுவித்துக் கொண்டு வேறொரு நீதியரசர் குழாமிற்கு இவ்வழக்கை நியமிக்குமாறு குறிப்பிட்டு வழக்கை 16.07.2020 அன்று விவாதத்திற்கு நியமித்தார்.

No comments