வடமராட்சியில் காவல்துறையினரின் தாக்குதல்! மூவர் மருத்துவமனையில் அனுமதி!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கில் குடத்தனையில் உள்ள மாளிகைக் கிரமாத்தில் அமைந்துள்ள வீடு ஒன்றில் புகுந்த காவல்துறையினர் மற்றும்
சிறப்பு அதிரடிபடையினர் கண்மூடித்தனமாக நடத்திய தாக்குதலை நடத்தியுள்ளனர்.

தாக்குதலில் காயமடைந்த மூவர் காவு வண்டி மூலம் மந்திகை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமைந்தவர்கள் மூவரும் பெண்கள் எனத் தெரிய வருகிறது.

மாளிகைத்திடல் அம்மன் கோவிலுக்கு அருகில் உள்ள குறித்த வீட்டுக்கு நேற்று வியாழக்கிழமை வீட்டு வளவினுள் நின்ற வாகனத்தை அத்துமீறி எடுத்து செல்ல முற்பட்டுள்ளனர்.

அதற்கு வீட்டார் எதிர்ப்பு வெளியிட்ட நிலையில், வீட்டாருக்கும் காவல்துறையினருக்கும் இடையில் வாய் தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த வாகனத்தில் மணல் கடத்தப்படுவதாக தங்களுக்கு முறைப்பாடு கிடைத்ததாக காவல்துறையினர் கூறியுள்ளனர். இதனால் பிரச்சினை முற்றியது.

இச்சம்பவத்தை வீட்டில் இருந்த சிறுவன் திறன்பேசியில் காணொளி எடுத்துள்ளார். அதனையடுத்து, திறன்பேசியை பறித்த காவல்றையினர் காணொளியை அழித்ததுடன் சிறுவனை தாக்கவும் முற்பட்டுள்ளனர்.

வீட்டாரின் அபய குரல் கேட்டு அயலவர்கள் கூடியதனால் காவல்துறையினர் காணொளியை வெளியிட வேண்டாம் என்றும், சம்பவம் தொடர்பில் எங்கேயும் முறைப்பாடு செய்ய கூடாது என அச்சுறுத்திவிட்டு சென்றுள்ளனர்.

இந்நிலையில் மீண்டும் காவல்துறையினரும் சிறப்பு அதிரடிப் படையினரும் குறித்த வீட்டுக்குள் சென்று திறன்பேசியில் காணொளி எடுத்த சிறுவனைத் தாக்கியுள்ளனர்.

வீட்டிலிருந்தவர்கள் அபாயக்குரலை எழுப்ப அருகில் இருந்தவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். அவர்களையும் காவல்துறையினர்   கண்மூடித்தனமாக தாக்கியதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கஞ்சா மற்றும் கசிப்பு போன்ற பிரிவுகளில் அனைவரையும் கைது செய்வோம் என மிரட்டியுள்ளனர்.

இதனால் அப்பகுதி பதற்றத்தில் உள்ளது என அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

No comments