ரோசமிருந்தால் வெளியே போகட்டும் சுமந்திரன்?

தேசிய தலைவரால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பினை கைவிட்டு தேர்தலை எதிர்கொள்ள தயாராவென சவால் விடுத்துள்ளார்
முன்னணி சமூக செயற்பாட்டளர் வரதராசா பார்த்தீபன்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள சவாலில்
(கௌரவ ?) சுமந்திரன் அவர்களே உங்களை விட ஒரு விடயத்தில் உயர்ந்தவன் என்ற ரீதியில் உரைக்கின்றேன்......

தமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் அரசியல் நடவடிக்கைகளை அல்லது அவர் ஆயுதம் ஏந்தியதை நீங்கள் ஆதரிக்கின்றீர்களா என்று ஒரு ஊடகவியலாளர் கேட்ட கேள்விக்கு சற்றும் தயக்கம் கட்டாமல் இல்லை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை அனுமதிக்கப்போவும் இல்லை என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்கள் தெரிவித்திருந்தார்.

என்னைப்பொறுத்தவரை இது ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் அல்ல. ஏன் எனனில் இற்றைக்கு 10 வருடங்களுக்கு முன்னர் இதே காலப்பகுதியில் திருமறைக் கலா மன்றத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றிலே இதே சுமந்திரன் அவர்கள் இந்த மண்ணிலே இடம் பெற்ற போராட்டம் ஒரு அதர்மம் நிறைந்த போராட்டம் என்று வெளிப்படையாகவே கூறியிருந்தார். அன்று அதனை கேட்டு அதிர்ச்சியடைந்த எனக்கு இன்று இவருடைய இக்கூற்று அதிர்ச்சியைத் தரவில்லை.

கௌரவ சுமந்திரன் அவர்களிடமும் அவரினை ஆராதிப்பவர்களிடமும் நான் கேட்டுக் கொள்வது.

யார் மறுத்தாலும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் இறைமைக்காக அதன் தனித்துவமான இருப்புக்காக காலத்தின் தேவை கருதி ஒரு நியாயமான ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்த தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களால் உருவாக்கப்பட்டது. கௌரவ சுமந்திரன் அவர்கள் எமது தலைவரின் அரசியல் மற்றும் ஆயுத போராட்டம் தொடர்பான எந்த நடவடிக்கைகளையும் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் என்ன காரணத்திற்காக தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உருவாக்கிய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளராக தொடந்தும் போட்டியிடுகின்றீர்கள்.

அத்துடன் அதே தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ பேச்சாளராக எப்படி தங்களால் கருத்து தெரிவிக்க முடியும்?

தமிழீழத் தேசியதலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களால் தமிழ்மக்களின் நலன்களுக்காக முன்னெடுக்கப்பட்ட ஆயுத போராட்டத்தினை பரிபூரணமாக நேசித்து 'எம் மக்கள் மீண்டும் ஒரு தடவை அடக்கப்பட்டால் நாம் மீண்டும் ஒரு தடவை ஆயுதம் ஏந்திப்போராட தயங்க மாட்டோம்' என்று யாழ்.கோட்டை வாசலில் முழக்கமிட்ட திலீபன் அண்ணாவின் திருவுருவ படத்திற்கு மலர்மாலையை அவர் நினைவு நாளில் எந்த அடிப்படையில் நீங்கள் சூட்டீனீர்கள்.?

அது சரி அதற்கான பதிலையும் நீங்கள் தராமல் இருக்கவில்லை. கொழும்பில் 5 வயது முதல் சிங்களவர்களுடன் வாழ்வது அதிஸ்டம் என்று உரைக்கின்ற உங்களுக்கு எங்கே தெரிய போகின்றது இந்த விடயங்கள் எல்லாம்

நீங்கள் 'விருப்பவில்லை அனுமதிக்க மாட்டேன்' என்று கூறிய ஆயுதப்போரட்டத்தை நேசித்த யாசித்த அதில் வலிகளையும் அவயங்களையும் இழந்த வலிசுமந்த மக்கள் எம் தலைவன் கைகாட்டிய கூட்டமைப்பு என்று வாக்களித்தன் காரணமாகத்தான் தாங்கள் பாராளுமன்றம் சென்றதை மறந்து விட்டீர்களா?

5 வயது முதல் சிங்களவர்களுடன் வாழக்கிடைத்தத்தை அதிஸ்டம் என்று கூறுகின்ற நீங்கள் என்ன சொல்லுவது எங்களுடைய நியாயமான தியாகம் நிறைந்த ஆயுதப் போராட்டத்தை விரும்பவில்லை அனுமதிக்க மாட்டேன் என்று இந்த போராட்டத்தோடு இந்த மண்ணிலேயே வாழ்ந்து எல்லாவற்றையும் இழந்து வலிகளை மட்டும் சுமந்து நிற்கின்ற நாங்கள் சொல்ல வேண்டும் தலைவர் பிரபாகரனின் ஆயுதம் போராட்டம் சரியா பிழையா என்று.

ஐயா நீங்கள் தானே ஒன்றை மிகவும் வெளிப்படையாக சொல்லு கின்றீர்கள் 'தேசிய கீதத்தை ஏற்கின்றேன் தேசிய கொடியை ஏற்கின்றேன் சிங்கள மக்களுடன் வாழ கிடைத்தது மிகப்பெரிய அதிஸ்ரடம் என்று நினைக்கின்றேன்' என்று அவ்வாறு இருக்கையில் நீங்கள் ஏன் ஐயா ஆயுதப்போராட்டத்தை ஏற்றுக்கொண்ட உங்களுக்கு அதிஸ்டம் இல்லாத தமிழர்கள் வாழுகின்ற தமிழ் பகுதியில் வந்து வாக்குகேட்கின்றீர்கள் இது எவ்வகையில் நியாயமானது?

உங்களுக்குதானே அதிஸ்டம் நிறைந்த சிங்கள பெருமக்கள் இருக்கின்றார்கள் அவர்களிடம் உங்களுக்கான வாக்குகளை கேட்க வேண்டியது தானே?

எங்களுடைய நியாயமான போராட்டத்தை தொடர்ந்தும் களங்கப்படுத்துகின்ற சிங்கள மக்களுடன் வாழக்கிடைத்து பெரும் அதிஸ்டம் என்று உரைக்கின்ற உங்களை தமிழ் மக்களாகிய நாங்கள் எங்களுடைய வாக்கு பலத்தினால் பாராளுமன்றம் அனுப்பியது எங்களுடைய துர்அதிஸ்டம் தான்.


வெட்கித் தலைகுனிகின்றேன் வலிகள் நிறைந்த எங்கள் தேசத்து ஒரு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் ஆகிய உங்களை நினைத்து.

உங்களைப் போன்றோர் இனியும் தொடந்து பயணிப்பீர்களேயானால் உங்களுடைய நிகழ்ச்சி நிரலின் படி தமிழ்த்தேசிய வாதம் சிங்கள தேசிய வாத்தினுள் கரைக்கப்பட்டு விடும்.

கௌரவ சுமந்திரன் அவர்களே வயதில் அனுபவத்தில் அரசியல் சணக்கியத்தில், புலமையில் , பணத்தில், அதிகாரத்தில், பதவியில் அனைத்திலும் என்னை விட உயர்ந்தவராக இருக்கலாம் ஆனால் தமிழ்த்தேசிய உணர்வு என்பதில் மட்டும் உங்களை விட நான் உயர்ந்தவன் என்ற வகையிலும் எத்தனை இடர்களையும் இழப்புக்களையும் சந்தித்தும் இந்த மண்ணிலே இறுதிவரை இந்த மண்ணையும் மக்களையும் விட்டு ஓடிப்போகாமல் தமிழ்மக்களின் விடிவிற்காக முன்னெடுக்கப்பட்ட ஆயுதப் போராட்டத்தினை யாசித்து வாழ்ந்தவன் என்ற ரீதியில் ஒன்று உரைக்கின்றேன்.

நான் ஒரு அரசியல் கட்சியை பரிபாலனம் செய்கின்ற போதும் அவ் அரசியல் கட்சி வெல்ல வேண்டும் என்று பணிபுரிவதனை விட பல மடங்கு நீங்கள் தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதற்காக பணி புரிவேன். இதுவே தற்போதைய காலத்தின் தேவையும் ஆகும்

வரதராஜன் பார்த்திபன்

No comments