ஹாங்காங் மீதான புதிய பாதுகாப்புச் சட்டத்திற்கு சீனப் பாராளுமன்றம் ஒப்புதல்!

ஹாங்காங் மீதான புதிய பாதுகாப்புச் சட்டத்திற்கு  சீனாவின் பாராளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. இச்சட்டம் ஹாங்காங்கின் தனித்துவமான அந்தஸ்தை முடிவுக்குக் கொண்டுவரக்கூடும் என எதிர்பாக்கப்படுகிறது.

ஹாங்காங்கில் கிரிமினல் வழக்குகளில் சிக்கும் கைதிகளை சீனாவுக்கு நாடு கடத்தி விசாரிக்க வகை செய்யும் சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து, கடந்த ஆண்டு மிகப்பெரிய அளவில் போராட்டம் வெடித்தது.  

சீனாவின் ஆளுகையின் கீழ் உள்ள ஹாங்காங்கில் 70 லட்சம் மக்கள் வாழ்கின்றனர். ஹாங்காங் ஒரு தன்னாட்சிப் பிரதேசம். வெளியுறவு, இராணுவம் ஆகிய இரு துறைகளில், ஹாங்காங்கை சீனா கட்டுப்படுத்தும். மற்ற அனைத்துத் துறைகளையும் ஹாங்காங் அரசே நிர்வகிக்கும்.

ஒட்டுமொத்த ஹாங்காங்கையும் உலுக்கிய இந்த போராட்டத்துக்கு அடிபணிந்த ஹாங்காங் நிர்வாகம் கைதிகள் பரிமாற்ற சட்டத்திருத்த மசோதாவை கைவிட்டது. ஆனாலும் சீனாவிடம் இருந்து கூடுதல் ஜனநாயக உரிமைகள் கோரி ஜனநாயக ஆர்வலர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். இது சீனாவுக்கு பெரும் தலைவலியாக அமைந்தது.
 
1997-ம் ஆண்டு ஹாங்காங்கை, இங்கிலாந்து சீனாவிடம் ஒப்படைத்தது. அப்போது தொடங்கி தற்போது வரை ஹாங்காங், சீனாவின் காட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. சீனாவின் அடக்குமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஜனநாயக உரிமைகள் கோரியும் பல ஆண்டுகளாக ஹாங்காங் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

No comments