பிரித்தானியாவில் தாயகத்தை நேசித்த குறொய்டன் பாலா சாவடைந்தார்

குறொய்டன்  பாலா என்று அழைக்கப்படும் நடராஜா பாலசுப்பிரமணியம் அவர்கள் நேற்று முன்தினம் சனிக்கிழமை 25-04-2020 அன்று வயது முதிர்வு
காரணமாக காலமானார்.  இவர் வடமராட்சி துன்னாலை வடக்கைக் பிறப்பிடமாகவும் லண்டன் குறொய்டனை வதிவிடமாகவும் கொண்டவர்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் கொள்கையில் இருந்து விலகாது இறுதிவரை உறுதியுடன் இருந்தவர். கணக்காளரான குறொய்டன் பாலா அண்ணா நிதித் செயற்பாடுகளில் அதிக பங்களிப்புச் செய்துள்ளார். கட்டமைப்பில் ஆரம்ப காலம் முதல் குறிப்பாக பிரிகேடியர் தமிழேந்தி (ரஞ்சித்தப்பா) உடன் தொடர்புகளை ஏற்படுத்தி பின்னர் தமிழீழ விடுலைப் புலிகளின் பிரித்தானியக் கிளையில் இருந்த குகன், சத்தியநாதன், கேணல் கிட்டு, சாந்தன், தனம் என அவரது பணி 2009 வரை நீடித்தது.

மத்திய கிழக்கு நாடுகளில் விடுதலைப் புலிகளின் கிளைகள் இல்லாத காலத்தில் மத்திய கிழக்கு நாடுகள் ஒவ்வொன்றுக்கும் சென்று தனி மனிதனாக தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு நிதி சேகரிப்பில் ஈடுபட்ட ஒரு தாயகச் செயற்பாட்டாளர். பிரித்தானியாவில் 30 வருடத்திற்கு மேலாக தமிழீழப் போராட்டத்திற்கு தன்னால் இயன்ற செயற்பாடுகளை செய்திருக்கின்றார்.

பிரித்தானியாவில் வெளிவந்த விடுதலைப்புலிகளின் ஆங்கில சஞ்சிசையான கொட்பிறிங் (Hotspring) பணியாற்றியிருந்தார். அனைத்து போராட்டங்களிலும் முழு மனதோடு குறிப்பாக முள்ளிவாய்க்காலுக்கு முன்னரும் பின்னரும் பங்கெடுத்து தனது ஆதரவை வழங்கியவர்.

சமாதான காலகட்டத்திலும் தயாகத்திற்குச் சென்று அனைத்துலகத் தொடர்பகப் பொறுப்பாளர் வீ.மணிவண்ணன் (கஸ்ரோ) அவர்கள் வழங்கிய செயற்பாடுகளை அனைத்துலகத் தொடர்பகத்தில் இருந்தவாறே செய்திருந்தார்.

தாயகத்தில் பற்றுக்கொண்ட குறொய்டன் பாலா அண்ணா 2009 மே மாதம் தமிழீழ போராட்டம் தோற்கடிக்கப்பட்ட பின்னர் அதனால் நாளாந்தம் போராட்டத்தை யோசித்து மன உழைச்சலுக்கு ஆளாகியிருந்தார். அரசியல் செயற்பாடுகளை சுயமாக செய்யத் தொடங்கியிருந்தார்.

இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் கட்சியான மக்கள் முன்னணியை பிரித்தானியாவில் கட்சியாக பதிவு செய்து பேர்லி நகரில் கட்சிக்கான தலைமையகம் ஒன்றையும் அமைத்திருந்தார். அதற்கான கைது செய்யப்பட்டிருந்தார். பின்னர் பதிவு செய்யப்பட்ட கட்சி தடைசெய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் அமைப்புடன் தொடர்பு பட்டதால் அக்கட்சி பதிவேட்டிலிருந்து அரசாங்கத்தால் நீக்கப்பட்டது.

தமிழீழ விடுதலைப் புலிகள் ஒரு போராட்ட அமைப்பு அதனை பயங்கரவாத முத்திரை குத்தி தடை செய்தமை தவறு என இறுதிவரை விளக்கம் கொடுத்த வந்தவர் குறைடன் பாலா அண்ணா.

தமிழீழத் தேசியத் தலைவரையும், தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும் இறுதிவரை நேசித்த மனிதர்களுள் குறொய்டன் பாலா அண்ணாவும் ஒருவர் என்பதை தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாறு உள்வாங்குகின்றது.

லண்டன் குறொய்டன் பகுதியில் வசித்து வந்த அன்னாரின் பிரிவால் துயருறும் அவரின் குடும்பத்தாரின் துயரில் நாமும் பங்கெடுத்துக் கொள்கின்றோம்.

No comments