இன்றைய கொரொனாவும் பேரிடர் முகாமைத்துவத்தில் வெற்றி பெற்ற அன்றை தமிழீழ கருநிலை அரசும் - ஓதுவோன்

கொரொனா பேரிடரால் அமெரிக்கா போன்ற வல்லாதிக்க தேசங்கள் தள்ளாடுகின்றன. இலங்கை போன்ற இனப்படுகொலைத் தேசங்கள்
மார்தட்டுகின்றன.

கொலரா (வாந்திபேதி), மலேரியா போன்ற இடர் காலங்களையும் சுனாமி போன்ற பேரிடர் காலங்களையும் புலிகளின் தலைமையில் இயங்கிய கருநிலைத் தமிழீழ அரசும் மக்களும் எப்படி எதிர்கொண்டார்கள் என்பதைப் பார்த்தால் அது அமெரிக்கா உட்பட ஒவ்வொரு நாடும் கற்றுக்கொள்ள வேண்டிய வரலாற்றுப் பாடமாக அமைவதோடு அத்தகைய தமிழீழ நிழல் அரசை அழித்த இலங்கை போன்ற இனப்படுகொலை அரசுகள் மார்தட்டுவதற்கு பெரிதாக ஒன்றும் இல்லை என்ற உண்மையும் புலப்படும். 

1995, 1996  ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட யாழ் இடப்பெயர்வைத் தொடர்ந்து வன்னியில் மக்கள் செறிவாக குடியேறியிருந்த 1996 இற்கும் 2000 இற்கும்; இடைப்பட்ட யுத்தகாலத்தில் வந்த  கொலரா (வாந்திபேதி), மலேரியா போன்ற இடர்காலத்திலும் சரி சமாதான காலமான 2004 இல் ஏற்பட்ட சுனாமி பேரிடர் காலத்திலும் சரி கருநிலைத் தமிழீழ அரசின் நடவடிக்கைகளை இன்றைய காலத்தோடு ஒப்பிடும்போது வியப்பாகவும் பெருமையாகவும் இருக்கிறது.

1998 காலப்பகுதியில் கொலரா (வாந்திபேதி)

வன்னியெங்கும் கொலரா நோய் செய்தி பரவியது, அக்கராயன் மல்லாவி புதுக்குடியிருப்பு ஆஸ்பத்திரிகளில் சிறப்பு நோயாளர் பகுதிகள் உருவாக்கப்பட்டன. ஒலி பெருக்கியில் நோய்பற்றி காடு கரப்பை எல்லாம் புலிகள் அறிவித்தார்கள். படைக்கு ஆள் சேர்க்கும் கொள்கை முன்னெடுப்புப் பிரிவின் வாகனங்கள் ஒலி பெருக்கி கட்டி ஊர்களில் அலைந்தன. நோய் அறிகுறி பற்றியும் தடுக்கும் வழிகள் பற்றியும் துண்டுப்பிரசுரங்கள் விநியோகித்தார்கள்.

தெருக்கூத்து கலைஞர்கள் போர்பற்றிய கூத்துக்குப் பதிலாக நோயின் தாக்கம் அலட்சியத்தின் விளைவு மற்றும் தடுப்புமுறைகள் பற்றி கூத்து தயாரித்து சந்தையிலும் கோயில் முன்றலிலும் பள்ளிகளிலும் பஸ்தரிப்பு நிலையங்களிலும் கூத்துப்போட்டார்கள். வன்னியே கலங்கியது.

பிரச்சாரம் படைக்கு ஆள் சேர்ப்பதை விடவும் உக்கிரமாக இருந்தது. பிரச்சாரத்தைப் பார்த்தே மக்கள் பயம் கொள்ளும் அளவுக்கு காடு மேடெல்லாம் நோய் பற்றிய பிரச்சாரம். மருத்துவப்பிரிவில் இருந்து பொறுப்பாளர் ஒருவரை புலிகளின் மருத்துவப்பிரிவு கொலராநோயைக் கட்டுப்படுத்துவதற்கான சிறப்பு நடவடிக்கைப் பொறுப்பாளராக நியமித்தது. அவரிற்கு சகல அதிகாரங்களும் வழங்கி ஆளணிகளையும் பொருளுதவிகளையும் வாகனங்களையும் வழங்கியது.

புலிகளின் நிர்வாகப் பிரிவுகள் அத்தனையும் நோயை அடக்கும் பொருட்டு திருப்பி விடப்பட்டன. மூன்றாவது மரணமும் நிகழ்ந்துவிட்டது. நோயளர்கள் தொகை அறுபதை தொட்டுவிட்டது. பொறுப்பாளர் முதலில் இட்ட கட்டளை வருகிற நோயளர்களிற்கு சேலைன் ஏற்றி அவர்களைக் கதைக்க வைத்து விசாரணை செய்து தகவல்களைப் பெறவேண்டும்.

விடுதலைப் புலிகளின் மருத்துவப்பிரிவு மாணவர்களும் சில வைத்தியர்களும் கூட இருந்தார்கள். நோயாளர்கள் எங்கே மலம் கழித்தார்கள்? வழிதெருவில் எங்கெல்லாம் கழுவினார்கள்? எங்கே உடையை மாற்றினார்கள்? எங்கு எங்கு போனார்கள்? எங்கு சாப்பிட்டார்கள்? என முழுவதுமாமய் விசாரணையில் துல்லியமாக திரட்டப்படவேண்டும். நோயாளர்கள் இராணுவ விசாரணைபோல விசாரிக்கப்பட்டார்கள்.

விசாரணைத் தகவல்களைக் கொண்டு செயல்படை செயலில் இறங்கியது. நோய்த்தாக்கம் கண்ட ஊர்களை முற்றுகையிட்டது (Lockdown) புலிகளின் மருத்துவச்சேவை. (கவனிக்க: ஊர்களை முற்றுகையிட்டு கட்டுப் படுத்தியதால் முழுத் தேசத்தையும் முற்றுகையிடவேண்டிய தேவை ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது) அவசியம் இன்றி வெளியே இருந்து ஊருக்குள்ளேயோ ஊரில் இருந்து வெளியேயோ யாரும் போவதை தடுத்துவிட்டார்கள்.

ஊரில் மலசல கூடம் எல்லா வீடுகளிற்கும் இருக்கிறதா என்று கவனித்தார்கள். யாரும் வெளியே மலம் கழிக்கக் கூடாது குழந்தைகளைக்கூட அனுமதிக்கக்கூடாது. முறையான மல சல கூடம் இல்லாதவர்களுக்கு உடனடியாக தமிழீழ நிர்வாக சேவை மலசலகூடம் அமைத்துக்கொடுத்தது.

போராளிகளும் ஊர்மக்களும் ஊரைச்சுத்தப்படுத்தும் வேலையில் ஈடுபட்டார்கள். நோயாளி பாவித்த உடைகள் எரிக்கப்பட்டன. நோயாளிபோய் உணவருந்திய உணவுக்கடைகள் மூடப்பட்டன. நோயாளிகள் போய்வந்த பாதைகளில் எச்சரிக்கைப் பலகைகள் இடப்பட்டன. நோயாளிகள் மலம் கழுவிய வாய்க்கால்கள் குளங்கள் உடனடியாக தடைசெய்யப்பட்டன.

நீர் வழங்கலிற்கு தமிழீழ நிர்வாக சேவை நீர் வழங்கல் தாங்கிகளை பயன்படுத்தியது. அரச அதிபரை அரசிடம் மருந்துக்கு விண்ணப்பிக்குமாறு அவசரமாக கொழும்புக்கு அனுப்பிவைத்தார்கள்.

அரச அதிபர் வெறும் கையோடு திரும்பிவந்தார். குறைந்தபட்சம் அன்ரிபக்ரீரியா மருந்துகளை கூட தர மறுத்தது அரசு. சேலைன் கூட தர மறுத்துவிட்டார்கள்.

பெருகும் நோயாளர்களிற்கு ஏற்றுவதற்கு சேலைன் இல்லை. இயக்கம் தன் மருத்துவப்பிரிவில் இருந்து அரச ஆஸ்பத்திரிகளிற்கு சேலைன் கொடுத்தார்கள். மிகுதிக்கு ஊர்மனைகள் எங்கும் அரசியல் போராளிகள் செவ்விளநீர் சேர்த்துவந்து ஆஸ்பத்திரிக்கு கொடுத்தார்கள்.

வன்னி நோய்ச்சூறாவளிக்கு அஞ்சும் நிலமாகியது, போரை அஞ்சிய காடுகள் கொள்ளை நோயை அஞ்சின. அரசாங்க அதிபர் வெறும் கையோடு வந்ததும் புலிகள் இதனை வேறு கோணத்தில் பார்த்தார்கள்.

காரணம் சர்வதேச தொண்டு நிறுவனங்களும் நோய்க்குச் சாட்சியாக உலக மனச்சாட்சியை உலுப்பும் இந்தச் செய்தியை வெளியிட அதிகம் விரும்பவில்லை. அரசாங்கத்தை உதவச் சம்மதிக்க வைக்கவும் அவற்றால் முடியவில்லை. புலிகள் இதனை அரசாங்கம் தொடுக்கும் இன்னொரு போர் என்று கருதினார்கள். கிருமிப்போர். போரை வெல்ல முடியாத அரசு கிருமித்தொற்றுப் போரை நடத்தும் அயோக்கியத் தனத்தில் இறங்கிவிட்டதா?

நோய்வந்த திசையை பொறுப்பாளர் கண்டுபிடித்து புலிகளின் புலனாய்வுத் துறையை உசுப்பிவிட்டார். நோய் அரச கட்டுப்பாட்டில் இருந்து உள்வந்த பயணிகளுடன்தான் வன்னிக்கு வந்திருக்கிறது. அது பண்டிவிரிச்சான் பாதையூடாக உள்வந்ததை பொறுப்பாளர் உறுதிப்படுத்தினார்.

நோயாளிகளைப் பராமரிக்க ஆஸ்பத்திரி தாதியர்கள் சிற்றூளியர்கள் அஞ்சினார்கள். உயிரைப் பணயம் வைக்கும் வேலை. சிலர் சவாலாக முன்வந்தார்கள். புலிகள் தங்கள் மருத்துவப் போராளிகளை ஆஸ்பத்திரி சிறப்பு விடுதிகளிற்கு நோயாளர்களை பராமரிக்க அனுப்பிவைத்தார்கள்.

என்று அன்றைய கருநிலை தமிழீழ அரசு தனது மக்களை நோக்கி வரும் இடரை எதிர்கொண்டவிதத்தையும் அதன் தாக்கம் ஏற்படுத்தக்கூடிய ஆபத்துக்களை விளங்கிவைத்திருந்த விதத்தையும் போருழல் காதை நாவலில் விபரிக்கிறார் போராளியும் எழுத்தாளருமான குணா கவியழகன்.

இவ்வாறே மலேரியா தொற்று ஆசியாவின் பெரும்பாலான நாடுகளை ஆட்டிப்படைத்த காலத்தில் வன்னிக் காட்டுப்பிரதேசத்திற்குள் சென்ற புலிகளையும் மக்களையும் நுழம்புகள் கவனித்துக்கொள்ளும் என்று சந்திரிக்கா அம்மையாரின் மாமனாரான அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் அனுருத்த ரத்வத்த  எக்காளமிட்ட காலத்தில் பொருளாதாரத்தடை போட்டு மலேரியாவிற்கான மருந்தான குலோரோகுயினையும் பிறீமாக்குயினையும் தடைசெய்த காலத்தில் புலிகளும் மக்களும் இயற்கை மருத்துவத்தையும் இறுக்கமான சுகாதார நடைமுறைகளையும் கடைப்பிடித்து அதில் இருந்து மீண்டு வந்தார்கள்.

உணவு, உரம் மற்றும் பூச்சிகொல்லி போன்ற தடைகளை எதிர்கொள்ள மூன்று மாத மரவள்ளி, சோழப் பயிர்ச் செய்கை உட்பட பொருத்தமான விவசாய நடவடிக்கைகளையும் இயற்கை உரம் மற்றும் இயற்கை பூச்சிகொல்லி வழிமுறைகளையும் தமிழீழ பொருண்மிய மேம்பாட்டு நிறுவனம் நடைமுறைக்கு கொண்டு வந்து மண்ணையும் மக்களையும் பஞ்சத்தில் இருந்தும் நோயில் இருந்தும் காத்தது. 

2004 சுனாமி ஆழிப்பேரலை

ஆழிப்பேரலைத் தாக்கம் ஒரு அதிர்ச்சியாகவும் பேரிடராகவும் இருந்தபோதிலும் அரசியல் துறைப்பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் அவர்களின் ஒருங்கிணைப்பின் கீழ் வடக்கு கிழக்கு என்று தமிழீழ நிலப்பரப்பு எங்கும் வாழ்ந்த தமிழ் சிங்கள முஸ்லிம் மக்களிற்கான பேரிடர் முகாமைத்துவம் நெறிப்படுத்தப்பட்டது.

ஒவ்வொரு பிரதேசத்திற்கும் ஒவ்வொரு தளபதிகள் நியமிக்கப்பட்டு அனைத்து வளங்களும் ஒருங்கிணைக்கப்பட்டு பகிரப்பட்டு இனபேதம் பாராது நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டன. வெறும் மூன்று மாதத்தில் சுனாமியின் சுவடுகள் அழிக்கப்பட்டு இயல்பு வாழ்வு மீட்டுக்கொடுக்கப்பட்டது. (இக்காலத்தில் அதிகம் பாதிக்கப்பட்டது தமிழீழ பிரதேசங்களே ஆகும் ஆனாலும் ஒப்பீட்டளவில் குறைந்தளவில் பாதிக்கப்பட்ட தமது பிரதேசங்களை மீட்க இலங்கை அரசு தள்ளாடியது வரலாறு.)

மிகப்பெரும் நாடுகளிற்கு பல மாதங்களும் பல வருடங்களும் எடுத்த ஒரு விடயத்தை தன் சொந்தக்காலில் நிற்கும் ஒரு சிறிய தேசம் குறுகிய காலத்தில் வென்றுகாட்டியது என்பது சாதாரண விடயம் அல்ல.

அது அவர்களின் பலமும் திறமையும் என்பதோடு மிகவும் தொண்மையான நாகரிகமடைந்த தேசிய இனமொன்றின் பொது மனத்தில் பொது நலன் பேணும் பண்பாட்டின் வெளிப்பாடுமாகும். கூடவே பேரிடர் காலத்தை தனிமனிதராகவும் சமூகமாகவும் எதிர்கொள்ளும் தமிழ் மக்களுடன் தொன்றுதொட்டு தொடர்ந்துவரும் இயல்புமாகும்.

பேரிடர் முகாமைத்துவ கட்டமைப்பின் அடிப்படையில் பேரிடர் ஏற்பட்டவுடன் அல்லது அபாயம் எச்சரிக்கப்பட்டவுடன் எடுக்கப்படுகின்ற நடவடிக்கைகளும் அடுத்து மீட்பு மற்றும் புனர்வாழ்வு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டதோடு தடுப்பு மற்றும் தணிக்கும் அல்லது இல்லாமல் போகச்செய்யும் நடவடிக்கைகளிற்கான முற்னேற்பாடுகளும் பின்னர் இன்னொரு பேரிடரிற்கான தயார்நிலையில் இருத்தல் அல்லது தயார்ப்படுத்துதலிற்கு தேவையான நவீன அவதானிப்பு மற்றும் எச்சரிக்கை நிலையங்களை அமைக்கும் பணிகளும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டன.

இன்றை கொரொன பேரிடரையும் உலகம் அதை எதிர்கொண்டு நிற்கும் பின்னணியையும் மேற்படி தமிழீழ நிர்வாகத்தோடு ஒப்பிட்டுப்பார்க்கும்போது அது முன்னேற்றத்துக்கு வழிசொல்லும்.

உலகம் முழுவதும் கோரத்தாண்டவம் ஆடிவரும் கொரொனா வைரஸ் தாக்கம் ஏற்படுத்தியிருக்கும் பேரிடர் நிலையானது ஒவ்வொரு நாடுகளினதும் பேரிடர் முகாமைத்துவத்தை கேள்விக்கு உள்ளாக்கியிருக்கிறது.

அணுவைத் துளைத்து சக்தி பெறவும் அண்ட வெளியை ஆய்வு செய்து பயணம் தொடரவும் வல்லமை வழங்கும் நவீன விஞ்ஞான தொழில் நுட்பத்தால் சிகரம் தொட்டு நிற்கும் உலக நாடுகள் பேரிடர் முகாமைத்துவத்தில் கோட்டை விட்டிருப்பது என்பது கட்டிய கோட்டைகள் எல்லாம் வானத்தில் கட்டிய கற்பனைக் கோட்டைகள் என்ற நிலையை ஏற்படுத்தியிருக்கிறது.

உற்பத்தியை ஏற்றுமதியை பங்குச்சந்தையை என்று நவீன உலகின் இயங்கு மார்க்கமான நவதாரள வாதத்தின் தூண்களை ஆட்டம் காண வைத்திருக்கிறது.

வைரஸ் பரவலின் தாக்கம் ஒவ்வொரு நாடும் கட்டிவைத்திருக்கும் இராணுவ பொருளாதார தொழில்நுட்ட புலனாய்வு கோட்டைச் சுவரில் உள்ள கற்களை ஒவ்வொன்றாக பிடுங்கி எறிவது போன்ற நிலையை ஏற்படுத்தியிருக்கிறது.

வைரஸ் பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதன் வெற்றியே பொருளாதரத்தை காப்பாற்றும், பொருளாதாரமே இருக்கும் இராணுவ தொழில்நுட்ப வல்லமையை தக்கவைக்கவும் மேலும் வலுவூட்டவும் உதவும்.

சுருங்கச் சொல்லின் பேரிடர் கால முகாமைத்துவத்தில் யார் வல்லவர்களோ அவர்களே தாம் கட்டி வைத்திருக்கும் கோட்டைச்சுவர்களை காக்கவும் மேலும் பலப்படுத்தவும் தகுதியானவர்கள் என்ற நிலை காணப்படுகிறது.

இராணுவ பொருளாதார மேலான்மை நிலைக்கும் அப்பால் ஒரு நாடு வல்லரசா இல்லையா என்பதையும் அது தனது மக்களுக்கான நல்லரசா இல்லையா என்பதையும் தீர்மானிக்கும் அடிப்படை விடயமாக அளக்கும் கூடுதல் கருவியாக அந்த நாட்டினது இடர் முகாமைத்துவ ஆற்றல் என்ற ஒன்று உண்டு என்ற பேருண்மையை கொரொனா வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது.

பேரிடர் முகாமைத்துவம் என்பது ஒரு பேரிடர் ஏற்பட்டவுடன் அல்லது அபாயம் எச்சரிக்கப்பட்டவுடன் எடுக்கப்படுகின்ற நடவடிக்கைகள் (Response) அடுத்து மீட்பு மற்றும் புனர்வாழ்வு நடவடிக்கைகள் (Rehabilitation and Recovery) அடுத்து தடுப்பு மற்றும் தணிக்கும் அல்லது இல்லாமல் போகச்செய்யும் நடவடிக்கைகள் (Prevention and Mitigation) பின்னர் இன்னொரு பேரிடரிற்கான தயார்நிலையில் இருத்தல் அல்லது தயார்ப்படுத்துதல் (Preparedness)   என்ற நான்கு அடிப்படைக் கட்டங்களைக் கொண்ட ஒரு முகாமைத்துவம்.

இவ்வாறு பேரிடர் ஒரு நோய்த் தாக்கமாக உருவெடுத்துத் தாக்கும் போது நோயைக் கண்டறிதல்(Trace) நோயாளியை தனிமைப்படுத்துததல் (Test) சிகிச்சையளித்தல் (Treat)  என்ற படிமுறைகளை பின்பற்றுதலே அதனை வெல்வதற்கான சரியான வழிமுறை என்று உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

இந்ந நோயை வெற்றிகரமாக எதிர்கொள்ளும் நாடுகளில் சீனா முதலிடத்தில் நிற்கின்றது. சீனாவையும் தென்கொரியாவையும் முன் மாதிரியாகக் கொண்டுதான் உலக சுகாதார நிறுவனம் மேற்படி அறிவுறுத்தலை வெளியிட்டிருக்கிறது என்பது கவனத்திற்குரியது.

சீனா இத்தாலி ஸ்பெயின் ஈரான் மற்றும் அமெரிக்க ஐரோப்பிய நாடுகள் என இந்நோய் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் நாடுகளில் ஒப்பீட்டளவில் சீனாவால் எவ்வாறு அதை துரிதமாக கட்டுப் படுத்தவும் பாதிக்கப்பட்டவர்களை சுகப்படுத்தவும் முடிகிறது என்ற கேள்விக்கான பதிலில் ஆழமாக சிந்திக்கக்கூடிய பல விடயங்கள் உள்ளடங்கியிருக்கின்றன.

மேற்சொன்னபடி இடர் முகாமைத்துவ வல்லமை, தொற்று நோய் முகாமைத்துவ பொறிமுறை போன்றவற்றுடன் 80 வீதமான வைத்திய சாலைகள் அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதும் பாரம்பரிய மருத்துவ முறைகளும் கலந்து பயன்படுத்தப்பட்டுவருவதும் காரணமாக சொல்லப்படுகிறது.

மருத்துவச்செலவிற்காக தனி நபர் ஒருவரிற்கு இத்தாலி 2700 டொலர், ஸபெயின் 2354 டொலர், பிரிட்டன் 4356 டொலர், ஜேர்மனி 4592 டொலர், அமெரிக்கா 9536 டொலர், என செலவு செய்தாலும் அவற்றின் மருத்துவக் கட்டமைப்புக்கள் அனைத்தும் தனியார் வசம் இருப்பதால் அவசரகாலத்தில் அது மக்களுக்கு முழுவதுமாக பயன்படும்நிலையில் இல்லாததால் அந்த அரசுகள் இன்று பல்லாயிரக்கணக்காண மக்களைப் பலிகொடுத்தும், அதைக் கட்டுப்படுத்துவதற்கான வழி தெரியாமலும் சிக்கித் திணறி வருகின்றன என்று சொல்லப்படுகிறது.

ஆனால் வெறும் 426 டொலர்களையே ஒரு தனி நபரிற்கான மருத்துவச்செலவாக கொண்டிருக்கும் சீன   அரசிடம் 80 வீதமான மருத்துவமனைகள் இருப்பதும் பாரம்பரிய மருத்துவ முறைகளையும் கலந்து பாவிப்பதும் முன்னேற்றத்துக்கான காரணங்கள் வரிசையில் அடுக்கப்படுகின்றன.

மருத்துவத்தை முழுமையாக தனியார் மயப்படுத்தியிருக்கும் அமெரிக்கா முற்று முழுதாக காப்புறுதி நிறுவனங்களில் தங்கியிருக்கும் நிலையில் உலகின் அதிகமான தொற்றுக்கு ஆளானோரின் நாடாகவும் இறப்புவிகிதம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருப்பதையும் காணமுடிகிறது.

இவ்வாறு பேரிடர் முகாமைத்துவம், தொற்றுநோய் முகாமைத்துவ பொறிமுறை, மருத்துவமனைகளை இயக்குவது உட்பட்ட அரசின் பிடி, எத்தகையை வைத்தியத்தை மேற்கொள்வது என்ற வைத்திய முறை மற்றும் பலம் போன்ற விடயங்களே பொருளாதாரத்திற்கும் இராணுவ வல்லமைக்கும் மேலான நல்லரசிற்கும் வல்லரசிற்குமான உண்மையான தகுதியென கொரொனா இனம் காட்டியிருக்கிறது.

இந்தச் சந்தர்ப்பத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகத்தில் இயங்கிவந்த கருநிலைத் தமிழீழ அரசின் இடர்கால மற்றும் பேரிடர்கால வரலாறு சொல்லும் பாடம் ஆச்சரியங்களும் வரப்பிரசாதங்களும் நிறைந்தது. மேலோட்டமாக பார்த்தால் சீனா போன்ற நாடுகளின் பேரிடர்கால நடவடிக்கைகள் இன்று முன் மாதிரியாக தோன்றும் ஆனால் வரலாற்றை ஆழமாக பார்த்தால் சீனாவிற்கும் முன்னோடியாக தமிழீழம் வெளித்தெரியும். இன்றைய பேரிடர் கால சவால்கள் அனைத்திற்கும் விடுதலைப்புலிகளின் தமிழீழ வரலாற்றில் செல்வழி உள்ளது.

17.04.2020

No comments