மீன்: போராட்டத்தின் அடையாளம்: சி.வி


திடீர் தேர்தல் அறிவிப்பு காரணமாக சி.வி.விக்கினேஸ்வரன் தலைமையிலான கூட்டணி பானையினை கைவிட்டு மீன் சின்னத்தில் போட்டியிட முடிவு செய்துள்ளது.

அவ்வகையில் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் சின்னமாக ஜனாதிபதித் தேர்தலில் கே.சிவாஜிலிங்கம் பயன் படுத்திய மீன் சின்னம் தேர்தல் ஆணைக் குழுவினால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக கே.சுரேஸ்பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணைக் குழுவிற்கு புதிய கட்சிகள் மற்றும் ஏற்கனவே உள்ள கட்சிகளின் பெயர் மாற்றம் தொடர்பில் முன்கூட்டியே விண்ணப்பிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதிய கட்சிகளின் பதிவுகளை ஏற்றுக்கொள்ள தற்போதைய சூழலில் சந்தர்ப்பம் கிடையாது என தெரிவிக்கப்பட்ட போதும் கட்சிகளின் பெயர் மாற்றம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இந்த வகையில் ஈ.பீ.ஆர்.எல்.எவ் இன் பெயரை தமிழ் மக்கள் தேசிய கூட்டணி என பெயர் மாற்றம் செய்ய சுரேஸ் பிறேமச்சந்திரன் செய்த விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டபோதும் அவர்கள் கோரிய நிறைகுடம் சின்னம் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் சின்னம் என்ன வகையில் நிராகரிக்கப்பட்டது.
இந்த நிலையில் குறித்த கட்சியின் இணக்கத்துடன் தற்போது மீன் சின்னம் ஆணைக் குழுவினால் வழங்கப்பட்டுள்ளதாக சுரேஸ்பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இதனிடையே பாண்டியரின் சின்னம் மீன். வடக்கு கிழக்கிற்கு தென்னிந்தியாவிலிருந்து முதலில் படையெடுத்து வந்தவர்கள் பாண்டியர்கள். பாண்டியரின் வாரிசுகள் பலர் இங்குள்ளார்கள். முக்கியமாக கிழக்கு மாகாணத்தின் தென் கோடியில் இருப்பவர்கள் அவர்களின் வம்சாவழியினரே என விளக்கமளித்துள்ளார் சி.வி.விக்கினேஸ்வரன்.

தேர்தல் ஆணைக்குழு தந்த மீன் சின்னத்தை தேர்ந்தெடுத்ததற்கு காரணங்களை கற்பித்துள்ளார் அவர்.

தமிழர் தாயகமாம் வடக்கு கிழக்கில் மட்டக்களப்பை நாங்கள் அழைப்பது “மீன்பாடும் நாடு” என அவ்வகையில் “மீன்பாடும் நாடு” எமது தமிழர் தாயகம்.
வட கிழக்கு கடலோடு தொடர்புடையது. நீண்ட கரையோரம் கொண்டது. அதனையே ஒரு காரணமாக வைத்து மத்திய அரசாங்கம் வடகிழக்கை ஆக்கிரமித்து வருகின்றது. கரையோரம் மீன் வாழும் கடலின் ஓரம். எமது நீண்ட கரைசார் நெய்தல் நிலங்களை நினைவுறுத்துவது மீன்

தமிழர் தம் உரிமைப் போராட்டத்திற்கு உயிர் கொடுத்த பலர் மீனை நம்பி வாழ்ந்து வந்த எம் முன்னோர்களின் வழித்தோன்றல்கள்.

எமது வடக்கு கிழக்கு மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவேண்டுமென்றால் கடலுக்கு மேலதிகமாக உள்;ர் நீர்நிலைகளை மேம்படுத்தி உள்;ர் மீன் வளத்தை விருத்தி செய்ய வேண்டும். எமது பொருளாதாரத்தை மீட்டெடுக்க மீள வருவது மீனே எனவும் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

No comments