ஜனாதிபதி மாளிகையில் கொரோனா மையம்?


கீரிமலை ஜனாதிபதி மாளிகை அல்லது,மயிலிட்டி காசநோய் வைத்தியசாலையில் கொரோனா தடுப்பு மையம் அமைக்கலாமென ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தி பராமரிப்பதற்கு யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை அதிகாரிகளால் தீவகத்திலுள்ள சில வைத்தியசாலைகள் முன்மொழியப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து வெளிப்படையாக கூட்டம் கூட்டுமாறு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் நிலைய அதிகாரிகள் தங்களுக்குள் சில முடிவுகளை எடுத்துச் செயற்பட எத்தனிக்கிருக்கின்றார்கள் எனவும் கூறப்படுகின்றது.

உலகளாவிய ரீதியாக மக்களின் இயல்பு வாழ்க்கையை முடக்கி, அவர்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்திவரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு சிறிலங்கா அரச மற்றும் அரசியல் தரப்புக்கள் தயாராகி வருகின்றனர். தேசிய பேரிடராக இதை அறிவிக்கக்கூடிய நிலைமைகள் கூட ஏற்பட்டுள்ளன.

பாடசாலை மற்றும் பல்கலைக்கழகம் உள்ளிட்ட நிறுவனங்களின் கல்விச் செயற்பாடுகள் நிறுத்தப்பட்டு மக்கள் கூடும் நிகழ்வுகள் இடைநிறுத்தப்பட்டு முன்னேற்பாடுகள் துரிதப்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கொரோனா தொற்றுக்குள்ளானவர்களை அல்லது அது தொடர்பாக சந்தேகத்திற்குரியவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை வழங்குவதற்கு யாழ். போதனா வைத்தியசாலை பொருத்தமற்றது.

வடக்கில் இருக்கக்கூடிய ஒரேயொரு போதனா வைத்தியசாலை என்ற அடிப்படையில் லட்சக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெறுகின்ற இந்த வைத்தியசாலையில், வீரியம் மிக்க – விரைவில் தொற்றக்கூடிய – வைரஸ் தாக்கத்திற்கு உள்ளானவர்களுக்கு சிகிச்சை வழங்குவது என்பது ஆபத்தானது.

இந்நிலையிலேயே யாழ்ப்பாணத்தை சேர்ந்த மருத்துவ அதிகாரிகள் தீவகத்திலுள்ள சில வைத்தியசாலைகளை முன்மொழிந்திருப்பதாக செய்திகள் கசிந்துள்ளன.

மேற்படி வைத்தியசாலைகள் மக்கள் செறிவு அதிகமான இடங்களில் அமைந்திருக்கின்றன. இங்கு உள்ள மக்களுக்கே உரிய சிகிச்சை வசதிகள் இல்லை. இந்நிலையில், இந்த இடங்கள் எந்தளவு பொருத்தமானது என்பது கேள்விக்குரியது.

ஆனால், ஏற்கனவே, வலி.வடக்கு மயிலிட்டியில் உள்ள காசநோய் வைத்தியசாலை இதுவரை முழமையாக இயங்கவைக்கப்படவில்லை. இங்கு வசதிகளை ஏற்படுத்தி கொரோனா பாதிப்பிற்குள்ளானவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடுகளை மேற்கொள்ள முடியும். இந்தச் சந்தர்ப்பத்துடன் அந்த வைத்தியசாலையை இயங்கவைப்பதற்கான முயற்சிகளையும் எடுக்கலாம்.

மேலும், கிழக்கே ஹிஸ்புல்லாவில் பல்கலைக்கழகத்தை தெரிவுசெய்தமை போன்று, வடக்கே கீரிமலையில் அமைக்கப்பட்டிருக்கின்ற ஜனாதிபதி மாளிகையையும் தெரிவுசெய்யலாம். மக்களின் பெருந்தொகையான வரிப்பணத்தில் கட்டப்பட்ட குறித்த மாளிகையை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விடுவதற்கு என ஏற்கனவே கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு அது செயற்படுத்தப்படாமல் இருக்கின்றது.

தற்போதைய அவசரகால நிலையை சாதமாக பயன்படுத்தி அங்கு மருத்துவ வசதிகளை ஏற்படுத்தி கொரோனோ தொற்றுக்குள்ளானவர்களுக்கு சிகிச்சை வழங்கும் பட்சத்தில் எதிர்காலத்தில் யாழ்.போதனா வைத்தியசாலையின் சில பிரிவுகளைக்கூட இங்கு மாற்றக்கூடிய ஆரம்பமாக இது அமையும்.

எனவே, வடக்கு ஆளுநர், யாழ்.அரச அதிபர், வடக்கின் உயர் மருத்துவ அதிகாரிகள், யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை அதிகாரிகள் அனைவரும் இணைந்து பொதுக்கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்து அதில் எடுக்கப்படும் முடிவுகளுக்கு அமைய இதைச் செயற்படுத்துவது சிறந்தது என ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments