சஜித் - ரணில் மோதல் உக்கிரம்

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சஜித் பிரேமதாச தலைமையிலான கூட்டணி யானை சின்னத்தின் கீழ் போட்டியிடாத பட்சத்தில் அந்தக் கூட்டணியில் இணையாது தனித்து யானைச் சின்னத்தில் ஐக்கிய தேசியக் கட்சியை போட்டியிட வைப்பதென அக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார் என்று அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று (10) கூடிய ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு சஜித் பிரேமதாசவின் புதிய அரசியல் கூட்டணிக்கு அங்கீகாரம் வழங்கி அதற்கு ரஞ்சித் மத்துமபண்டார எம்பியை செயலாளராக நியமிக்க அனுமதியளித்தது. அதேசமயம் வரும் நாடாளுமன்ற தேர்தலில் யானை சின்னத்தின் கீழ் தான் இந்த அரசியல் கூட்டணி தேர்தலில் இறங்கவேண்டுமென ரணில் தரப்பு வலியுறுத்தியிருந்தது.

ஆனால் புதிய அரசியல் கூட்டணி இதயம் சின்னத்தில் போட்டியிட முன்னதாக உத்தேசித்திருந்ததால் நேற்றைய கூட்டத்தில் இருந்து எந்த பதிலையும் கூறாது சஜித் தரப்பு வெளியேறியிருந்தது.

இதனையடுத்து கட்சியின் முக்கியமான உறுப்பினர்களுடன் நேற்றிரவு நீண்ட மந்திராலோசனை நடத்திய ரணில், வரும் தேர்தலில் யானைச் சின்னத்தில் மட்டுமே ஐக்கிய தேசியக் கட்சி போட்டியிடுமென திட்டவட்டமாக தெரிவித்தார் என அறிய முடிகிறது.

கடந்த காலங்களில் கூட்டணி அமைத்து வெளியாரின் சின்னத்தில் போட்டியிட இடமளித்தபோதும் இம்முறை கட்சியின் சொந்த சின்னத்தில் போட்டியிடுவதே நல்லதெனவும், புதிய அரசியல் கூட்டணி இதனை விரும்பாத பட்சத்தில் அவர்களுடன் ஐக்கிய தேசியக் கட்சி சேராதெனவும் ரணில் திட்டவட்டமாக அங்கு தெரிவித்தார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

No comments