மணியரசன் என்ன மர்ம மனிதரா?"

தஞ்சை பெருவுடையார் கோவிலில் தமிழில் குடமுழுக்கு பூசை நடத்த கடுமையான கள போராட்டத்தையும் சட்ட போராட்டத்தையும் நடத்திவரும் தமிழத்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் அவர்களை பாஜக தரப்பினர் இழிவாக தனிப்பட்ட தாக்குதல்களை தொடுத்துள்ளது வேளையில் , அவர் எழுதியுள்ள வரலாற்று மடல்


 "தஞ்சை மாவட்டம் - பூதலூர் வட்டம் - ஆச்சாம்பட்டி எனது ஊர். நான் யாரென்று, எங்கள் ஊருக்குப் போய் கேட்டுப் பாருங்கள். திருவரங்கம் நகராட்சியிலுள்ள வீரேசுவரத்தில் அமைந்துள்ள காமாட்சியம்மன் கோயில்தான் எங்கள் குலதெய்வம். எங்கள் குடும்பத்தில் குழந்தைகளுக்கு அங்குதான் நாங்கள் முதல் மொட்டை போட வேண்டும். வைகாசி மாதம் அங்கு ஆண்டுதோறும் விழா நடக்கும். அந்த விழாவுக்கு நாங்கள் செய்ய வேண்டிய காணிக்கை இருக்கிறது. பிராமணர் அல்லாதவர்கள் பூசை செய்யும் கோயில் அது! ஒவ்வொரு ஆண்டும் அந்தக் கோயிலிலிருந்து எங்கள் வீட்டுக்கு என் தந்தை பெரியசாமி பெயரிலும், இப்போது என் தம்பி ரெங்கராசு பெயரிலும் கடிதம் வரும். நாங்கள் விழாவில் கலந்து கொண்டு காணிக்கை செலுத்துவோம்.

நான் மார்க்சிஸ்ட்டுக் கம்யூனிஸ்ட்டுக் கட்சியில் செயல்பட்டுக் கொண்டிருந்தபோது, இந்திரா காந்தி அம்மையார் 1975இல் நெருக்கடிநிலைப் பிரகடனம் செய்து, சனநாயக உரிமைகளைப் பறித்தார். 1976 சனவரி 31-இல் தி.மு.க. ஆட்சியைக் கலைத்து, நெருக்கடி நிலையை தமிழ்நாட்டில் தீவிரப்படுத்தினார்.

அந்த நெருக்கடி நிலை காலத்தில், சி.பி.எம். கட்சியில் அனைத்திந்திய அளவில் ஒரு முடிவெடுக்கப்பட்டது. தலைமையிலிருந்து கீழ் வரை ஒரு குழுவினர் தலைமறைவாக இயங்கிக் கைதாகாமல் நெருக்கடி நிலைக்கு எதிராக மக்களைத் திரட்டிப் போராட வேண்டும் என்பதே அம்முடிவு.

அம்முடிவின்படி, சி.பி.எம். கட்சியின் தலைமைக் குழுவில் செயல்பட்ட பி.டி. இரணதிவே, பி. சுந்தரய்யா போன்றோர் தலைமறைவாக இருந்து இயக்கப் பணியாற்றினர்கள். அதுபோல், ஒவ்வொரு மாநிலத்திலும் - ஒவ்வொரு மாவட்டத்திலும் தலைமறைவாக இருந்து செயல்பட வேண்டிய தோழர்கள் முடிவு செய்யப்பட்டனர். ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தில் தலைமறைவாக இருந்து இயக்கப் பணியாற்றத் தேர்வு செய்யப்பட்டவர்களில் நானும் ஒருவன். எங்களுக்கு அப்போது தலைமறைவு இயக்கத்தின் மாவட்டச் செயலாளர் - அண்மையில் காலமான தோழர் கோ. வீரய்யன் அவர்கள்! அப்போது எனக்கு எதிராக பிடிவாரண்ட் போடப் பட்டிருந்தது. என்னைத் தேடிக் கொண்டிருந்தது காவல்துறை!

இப்போதைய சி.பி.எம். நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் டி.கே. ரங்கராசன் அவர்கள் அப்போது திருச்சி மாவட்டத்தில் பெட்டவாய்த்தலை சர்க்கரை ஆலையில் பணியாற்றிக் கொண்டிருந்தார். நான் தொடக்கத்தில் தலைமறைவாக இருந்தபோது, அவரது அரவணைப்பில் தான் இருந்தேன். எனது மீசை மழிக்கப்பட்டது. உருவத்தை மாற்றிக் கொண்டேன். “டேவிட்” என்றொரு கற்பனையான புனைப்பெயரை எனக்கு தோழர் டி.கே. ரங்கராசனும், அவர்களுடைய தோழர்களும் சூட்டினர். 1977இல் நெருக்கடி நிலை தளர்ந்த பிறகுதான் நான் மீண்டும் மணியரசனாக வெளிவந்தேன். இதையெல்லாம், இப்போது சி.பி.எம். மாநிலச் செயலாளர் தோழர் கே. பாலகிருஷ்ணன் அவர்களிடமும், சி.பி.எம். நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் டி.கே. ரங்கராசன் அவர்களிடமும் கேட்டால் சொல்லுவார்கள்.

நெருக்கடிநிலையும், சனநாயக உரிமை மறுப்பும் நீண்டகாலம் தொடரும் என்று அப்போது சி.பி.எம். மத்தியக்குழு முடிவு செய்து அறிவித்தது. சனநாயக உரிமை மீட்கப்படும் வரை தலைமறைக் கட்சி இயங்க வேண்டுமென்று சி.பி.எம். தலைமை முடிவு செய்தது. இப்பின்னணியில், தலைமறைவு காலத்தில் எனக்குத் திருமணமும நடைபெற்றது. தலைமறைவு மாவட்டச் செயலாளர் தோழர் கோ. வீரய்யன் அவர்கள் தலைமையில் என் திருமணம் தலைமறைவாக நடந்தது. இதுகுறித்து, என் மனைவியும், மகளிர் ஆயம் தலைவருமான தோழர் ம. இலட்சுமி தனது “லட்சுமி எனும் பயணி” என்ற நூலில் எழுதியுள்ளார். டேவிட் என்ற தலைமறைவுப் பெயருடன் செயல்பட்ட பெ. மணியரசனை திருமணம் செய்து கொண்டேன் என்று அந்நூலில் விரிவாக எழுதியுள்ளார். இதுகுறித்து, “ஆனந்த விகடன்” வார ஏட்டுக்கும் பேட்டி அளித்துள்ளார். கே.டி. இராகவன் - எச். இராசா - வகையறாக்கள் இதை ஏதோ ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்ததைப் போல பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

எனக்கு மட்டுமல்ல, பலருக்கும் இப்படி பிறப்புத்திரிபு செய்திருக்கிறார்கள். தோழர் சீமான், தோழர் திருமுருகன் காந்தி, இயக்குநர் கௌதமன் உள்ளிட்ட பலரையும் வெவ்வேறு மதப்பெயர் சொல்லி அழைப்பது அவர்களின் வழக்கமாக உள்ளது.

கிறித்துவராகவே இருந்தால் என்ன குற்றம்? அது என்ன இழிவான பிறப்பா? இவையெல்லாம் எவ்வளவு மலிவான - கேவலமான - அற்பத்தனமான உத்திகள்!

ஒருவேளை, ஒருவர் தனது பெயரை மாற்றிக் கொண்டவராகவே இருந்தால்கூட, அவர் மாற்றி வைத்துக் கொண்ட பெயரைத்தானே சொல்ல வேண்டும்! அது தானே நேர்மையும், நாகரிகமும் கொண்ட செயல்!

முதலில், இந்த ஆரியத்துவா வர்ணாசிரமவாதிகள் மனிதர்களை மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். அதன்பிறகு அரசியல் பேசலாம்! இவர்களின் முன்னோர்கள், அனைத்துத் தமிழர்களையும் சூத்திரர்கள் என்றும் பஞ்சமர்கள் என்றும்தானே அழைத்தார்கள். அனைத்துத் தமிழர்களுக்கும் எதிராகத் தீண்டாமை கடைபிடித்தவர்கள் அல்லவா இவர்கள்! இவர்களின் அசல் வாரிசுகளாக எச். இராசாவும் – கே.டி. இராகவனும் இன்றும் நவீன வடிவத்தில் செயல்படுகிறார்கள். அந்த வடிவத்தின் பெயர்தான் “இந்துத்துவா”!" -பெ.மணியரசன்-

No comments