பிரான்சில் இடம்பெற்ற ‘சிறீலங்காவின் சுதந்திரநாள் தமிழரின் கரிநாள்” கண்டன கவனயீர்ப்பு!

சிறீலங்காவின் சுதந்திரநாள் தமிழரின் கரிநாளாக பிரகடனப்படுத்தப்பட்டு தமிழர் தாயகம் உட்பட
தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் அனைத்து நாடுகளிலும் கண்டன கவனயீர்ப்பு நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன.

பிரான்சு பாரிசு மாநகரத்தில் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை ஆகியவற்றின் ஏற்பாட்டில் சிறீலங்கா தூதரத்துக்கு முன்னால் இன்று (04.02.2020) செவ்வாய்க்கிழமை பிற்பகல் 15.00 மணிமுதல் கண்டன ஒன்று கூடல் நடாத்தப்பட்டது.

அகவணக்கத்துடன் ஆரம்பமான இக்கவனயீர்ப்பு நிகழ்வில், சிறீலங்காவில் இடம்பெறும் இன அழிப்பையும், தமிழ் மக்களுக்கு சிறீலங்கா அரசால் ஏற்படுத்தப்படும் அநீதியையும் வெளிப்படுத்தி தமிழ், பிரெஞ்சு, சிங்கள மொழிகளில் உரைகள் இடம் பெற்றிருந்தன. 

உரைகளை பிரான்சு தமிழீழ மக்கள் பேரவைப் பொறுப்பாளர் திரு.திருச்சோதி அவர்களும், தமிழின உணர்வாளர் திரு.கிருபை நடராஜா அவர்களும் ஆற்றியிருந்தினர்.

சுதந்திர நாளில் தங்கள் தேசியக் கொடிகளை ஏற்றி அதற்கான மதிப்பளிப்பை மக்கள் செய்வது வழக்கம், ஆனால், இம்முறையும் சிறீலங்காத் தூதரகத்தின் முன் பறக்கும் சிறீலங்காவின் தேசியக்கொடி அகற்றப்பட்டு கம்பம் மட்டும் இருந்ததைக் காணமுடிந்தது.
நிறைவாக மாலை 17.00 மணிக்கு தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரகமந்திரத்துடன் கவனயீர்ப்பு நிகழ்வு நிறைவடைந்தது.

No comments