புலிகளின் புதையல் தேடும் இராணுவம்?


தமிழீழ விடுதலைப் புலிகளினால் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாக நம்பப்படும் புதையல்கள் தோண்டும் நடவடிக்கைகள் படைகளது ஆசீர்வாதத்துடன் வன்னியில் அவ்வப்போது இடம்பெற்று வருகின்றன.
கிளிநொச்சி 55 ஆம் கட்டைப்பகுதியில் முன்னர் இராணுவ முகாம் இருந்த பாழடைந்த வீடொன்றின் வளாகத்தில் புதையல் தேடிய குற்றச்சாட்டில் 5 இராணுவத்தினர் மற்றும் ஒரு பொதுமகனும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் நேற்று சனிக்கிழமை மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றது.
அக்கராயன் இராணுவ முகாமைச் சேர்ந்த 5 இராணுவத்தினரையுதம் இராணுவ பொலிஸார் கைது செய்து மேலதிக நடவடிக்கைக்காக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
“கிளிநொச்சி 55ஆம் கட்டைப்பகுதியில் குடிமனைகளுக்குள் முன்னர் அமைந்திருந்த இராணுவ முகாம் அகற்றப்பட்டு அக்கராயன் இராணுவ முகாமுடன் இணைக்கப்பட்டது. இராணுவ முகாம் அமைக்கப்பட்டிருந்த பாழடைந்த வீட்டு வளாகத்துக்குள் நேற்று பக்கோ இயந்திரம் கொண்டு புதையல் தோண்டுவதாக கிளிநொச்சி இராணுவ பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்துக்கு விரைந்த இராணுவப் பொலிஸார் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த 5 இராணுவத்தினரைக் கைது செய்தனர். அவர்கள் 5 பேரும் மேலதிக நடவடிக்கைக்காக கிளிநொச்சி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
மேலும் இந்த நடவடிக்கைக்கு உதவினார் என்ற குற்றச்சாட்டில் பக்கோ இயந்திரத்தின் சாரதி கிளிநொச்சி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். அவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
“சந்தேகநபர்கள் 6 பேரும் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்” என்று பொலிஸார் தெரிவி்த்தனர்.
இதேவேளை, இந்தப் புதையல் தோண்டும் நடவடிக்கைக்கு கிளிநொச்சி பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரியும் உடந்தையாகவிருந்தார் என்று இராணுவப் பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், தம் மீதான குற்றச்சாட்டை இராணுவத்தினர் ஐவரும் ஏற்றுக்கொண்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

No comments