அங்கஜனின் அடாவடி- களத்தில் குதித்த நெடுந்தீவு மக்கள்

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுத் தலைவரின் அடாவடியை எதிர்த்து போராட்டம்!

யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரின் தன்னிச்சையான செயற்பாடுகளை கண்டித்து நெடுந்தீவு மக்கள் இன்று (31) எதிர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

புதிய அரசாங்கத்தில் அமைச்சு பதவி ஏதும் வழங்கப்படாத நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் ஒருங்கிணைப்பு குழு தலைமை பொறுப்பை ஏற்றுக்கொண்டதன் பின்னர் ஒரு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சரை விட தனக்கு அதிக அதிகாரம் உள்ளதாக தெரிவித்து பிரதேச செயலக அதிகாரிகளுக்கு கடும் தொனியில் உத்தரவிட்டு மக்கள் விரும்பி தெரிவு செய்த திட்டங்களை எல்லாம் தமது சுயநலத்துக்காக மாற்றி அமைத்து திட்டமிட்ட வகையில் தங்களை பழி வாங்குகின்றார் என தெரிவித்தே இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம் நெடுந்தீவு பிரதேச செயலகம் முன்பாக நடைபெற்றது.

மேலும் கிராமத்துக்கு ஜனாதிபதியால் வழங்கப்பட்ட 2 மில்லியன் திட்டத்தை தாம் தமது பிரதேசத்தின் நலன்களை மையமாக கொண்டு பிரதேசத்தின் கிராம சேவகர், பொருளாதார உத்தியோகத்தர், சமுர்த்தி உத்தியோகத்தர், கிராமத்தின் பொது அமைப்புகள் மற்றும் மக்கள் பிரதி நிதிகள் ஆகியோர் முன்னிலையில் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட முன்மொழிவுகளை ஒருங்கிணைப்பு குழு தலைவர் தனது சுயநல அரசியலுக்காக மாற்றி தேவையற்ற திட்டங்களை தமக்கு திணிக்கின்றார்.

இது எமக்கு தேவையற்றது. நாம் முன்மொழிந்த திட்டங்களே எமக்கு தேவை என வலியுறுத்தி மக்கள் கண்டன ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். இதன்போது ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் பல்வேறு சுலோகங்களை ஏந்தி போராட்டத்தை முன்னெடுத்தனர்.No comments