குஜராத் கலவரத்தில் மோடிக்கு தொடர்பு இல்லை!

குஜராத்தில் கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து நடந்த கலவரம் திட்டமிட்டு நடந்தது அல்ல என நானாவதி குழுவின் இறுதி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கலவரத்தில், அப்போது முதல்வராக இருந்த நரேந்திர மோடிக்கு தொடர்பு ஏதுமில்லை எனவும் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நானாவதி குழுவின் இறுதி அறிக்கை குஜராத் சட்டப் பேரவையில் இன்று (11) தாக்கல் செய்யப்பட்டது.

குஜராத்தில் கடந்த 2002ம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவமும் (இதில் 59 பேர் கொல்லப்பட்டனர்) அதனைத் தொடர்ந்து நடந்த கலவரமும் (இதில் 750 முஸ்லிம்கள், 250 இந்துக்கள் உட்பட 1000 பேர் கொல்லப்பட்டனர்) நாடுமுழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி நானாவதி, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அக்‌ஷய் மேத்தா ஆகியோர் தலைமையிலான குழு விசாரணை நடத்தியது.

இதுதொடர்பாக, அப்போதைய முதல்வர் நரேந்திர மோடி, அமைச்சர்கள், மூத்த அரசு, பொலிஸ் அதிகாரிகள் மற்றும் சில அமைப்புகளின் தொடர்பு என்னவென்பது பற்றி இந்த குழு விசாரணை மேற்கொண்டது.

பல ஆண்டுகளாக நடந்த இந்த விசாரணைக்கு 24 முறை காலநீடிப்பு அளிக்கப்பட்டது. குறித்த குழுவின் அறிக்கை ஏற்கெனவே குஜராத் முதல்வராக ஆனந்தி பென் படேல் இருந்துபோது தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் குழுவின் இறுதி அறிக்கை குஜராத் சட்டப் பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments