யாழ்.வருகின்றார் கமல்?


இலங்கையின் புதிய பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் போர்க்குற்றவாளியுமான மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன யாழ்ப்பாண பாதுகாப்பு தலைமையகத்தில் இடம்பெறவுள்ள யாழ்ப்பாண மாவட்டத்தின் பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு நடைமுறைகள் தொடர்பிலான உயர்மட்டக் கலந்துரையாடலில் கலந்துகொள்வதற்காக நாளை வியாழக்கிழமை வருகை தரவுள்ளார்.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன நாளை (டிசெ.12) வியாழக்கிழமை யாழ்ப்பாணத்துக்கு வருகை தரவுள்ளதனை பலாலி இராணுவ தலைமையகம் உறுதிப்படுத்தியுள்ளது. 

அவர் பங்கெடுக்கும் கலந்துரையாடலுக்கு வடக்கு மற்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த முப்படைகளின் அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் அழைக்கப்பட்டுள்ளனர.

இதனிடையே மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தொடர்பில் சர்வதேச மனித உரிமைகள் தினத்தில் 100 பக்க ஆவணம் வெளியிடப்பட்டுள்ளது.இறுதிப் போரின்போது அவர் போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களைச் செய்தார் என்பதற்கு நிரூபணமான சான்றுகள் உள்ளன என்று அதில் கூறப்பட்டுள்ளது.

கமல் குணரத்னாவிற்கு எதிராகவும், தற்போது சவேந்திர சில்வாவுக்கு எதிராகவும் ஒரு வலுவான வழக்கு உள்ளது என்று யாஸ்மின் சூகா ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

ஜோசப் முகாம் என்று பிரபலமாக அறியப்படும் வவுனியாவில் உள்ள வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தை பராமரிப்பதில் குணரத்னாவின் பங்கையும் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

No comments