தீர்வுதான் எமக்கில்லை வாக்களித்துத்தான் பார்க்கணும்

இலங்கை சுதந்திரம் பெற்றது முதல் சிங்கள பௌத்த மேலாதிக்க அரசாங்கம் சிறுபான்மையினரை குறிப்பாக தமிழ் மக்கள் ஆகிய எம்மை ஏமாற்றிக் கொண்டு இக்கின்றது. 2015ம் ஆண்டில் சிறுபான்மை மக்களினால் ஆட்சிப்பீடம் ஏற்றப்பட்ட மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கம் கூட "நன்றிக்கடன் மறவோம்" என்று சொல்லியே தமிழர்களை ஏமாற்றியது.

இந்நிலையில் தான் மீண்டுமொரு ஜனாதிபதித் தேர்தல் வந்திருக்கின்றது. இந்த தேர்தலில் சஜித், கோத்தாபய, அநுர, மஹேஸ் ஆகியோர் போட்டியிடுவதால் இது சவால் மிகுந்த தேர்தலாக மாறியிருக்கின்றது. ஆனால் தமிழர்களில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி உட்பட ஒரு பகுதியினர் தேர்தல் பகிஷ்கரிப்பு என்ற மாயச் சிந்தனையில் சிந்திக்க ஆரம்பித்திருக்கின்றனர்.

உண்மையில் தேர்தலை பகிஷ்கரிப்பதில் தமிழருக்கு நன்மை இருக்கின்றதா? அல்லது ஜனாதிபதித் தேர்தலுக்கும் எமக்கும் தொடர்பு கிடையாதா? என்பது பற்றி நாம் முதன்மையாக சிந்திக்க வேண்டும். அண்மையில் யாழில் உரையாற்றிய அநுரகுமார "இது தெற்கு கட்சிகளின் பலத்துக்கான போட்டி என்று வடக்கு மக்கள் பார்க்கின்றனர். ஆனால் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறும் தலைமை தான் உங்களதும், எங்களதும் தலைவிதியைத் தீர்மானிக்கப் போகின்றது" என்று குறிப்பிட்டார்.

அவரது கருத்து வெளிப்படையாக உண்மையை கூறியிருக்கின்றது. இந்தத் தேர்தலை த.தே.ம.மு கூறுவது போல் தமிழ் மக்கள் பகிஷ்கரித்தால் தமிழினப் படுகொலைகள், கடத்தல்கள், காணாமல் ஆக்கல் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களை செய்த, செய்ய கட்டளையிட்ட, செய்விக்க காரணமாக இருந்த கோத்தாபயவே தமிழர்களையும் ஆளும் நிலை ஏற்படும் என்பது தான் நிதர்சனம்.

இதனை உணர மறுக்கும் சிலர், கோத்தா வந்து தமிழர்களை அடக்கி ஆளும் போது தமிழர்களின் குரல் சர்வதேசத்திற்கு கேட்கும் அல்லது சர்வதேசம் திரும்பிப் பார்க்கும் என்று நினைக்கின்றனர். எனது பார்வையில் அந்நினைப்பும், தேர்தல் புறக்கணிப்பு என்ற கோஷமும் பிற்போக்குத்தனமான நிலைப்பாடாகும். 

தமிழ் மக்களுக்கு தீர்வு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு பெரும்பான்மையின அரசியல் தலைவர்கள் ஒரு போதும் செவிசாய்க்கவில்லை. அது தீர்வை தரமாட்டோம் என்ற நிலைப்பாட்டையே ஒத்துநிக்கின்றது. அப்படியிருக்கும் போது அதனை உணர்ந்து கொண்டுள்ள நாம் யார் ஆட்சிக்கும் வந்தால் என்ன? வரவிட்டால் தான் என்ன? என்றுவிட்டு இருந்துவிட முடியாது. எமக்கு தீர்வு கிடைக்காவிட்டாலும் குறைந்த பட்சம் கிடைக்கக்கூடிய உரிமைகளை, ஜனநாயகத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டுமாயின் வாக்களிப்பு எனும் எமது ஜனநாயகக் கடமையைச் செய்ய நாமும் கடமைப்பட்டுள்ளோம்.

இந்தத் தேர்தலில் தமிழ் மக்களுக்கு ஒரேயொரு தெரிவு மட்டுமே இருக்கின்றது. 2015ம் ஆண்டில் யாரை வீழ்த்த நாம் எமது வாக்குகளை பயன்படுத்தினோமோ அதே நபர்கள் இன்று மீண்டும் ஆட்சிப்பீடம் ஏற முயற்சித்து வருகின்றனர். அவர்களை மீண்டும் தோற்கடித்து வேறு ஒருவரை ஜனாதிபதியாக தெரிவு செய்வதே மேற்சொன்ன ஒரேயொரு தெரிவாகும்.

கொடூர இனவழிப்பை செய்யவும், தமிழ் மக்களை கண்ணீருடன் தெருவில் போராட விடவும் காரணமாக இருந்த கோத்தாவை, அவர் இனிமேல் மோசமாக செய்பட மாட்டார். தமிழர்களுக்கு எதிராக இருக்க மாட்டார் என்று பலரும் பிரச்சாரம் செய்கின்றனர். ஆனால் அது போலி என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். ஆட்சிக்கு வர முன்னரே அவருக்கு எதிரான வழக்குகளுக்கு தடை விதிக்கப்படுகிறது. தீர்ப்புக்கள் சாதகமாக மாறுகின்றன. இது சாதாரணமாக நடக்கவில்லை. அதற்கு பின்னால் யார் இருக்கின்றனர் என்பது நாம் அறியாதது இல்லை.

இச்சவால் மிகுந்த தேர்தலில் கோத்தாவை தோற்கடிக்க கூடிய சக்தியாக இருப்பவர் சஜித் பிரேமதாச. இவர் என்னுடைய பார்வையில் தமிழ் மக்களின் தீராப் பிரச்சினைகளாக இருக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வை தரப்போவதில்லை. மாறாக குறைந்தது அடிப்படைச் பிரச்சினைகளுடன் வாழக்கூடிய இந்நாட்டின் மக்கள் அனைவருக்கும் அவர்களது அடிப்படை பிரச்சினைகளை தீர்த்து வைக்கும் அபிவிருத்தியை பெற்றுத் தருவார் என்ற நம்பிக்கை எனக்கிருக்கின்றது.

அந்தவகையில் சஜித் பிரேமதாசவை தமிழ் மக்கள் தெரிவு செய்வதே இக்காலத்தில் நாம் எடுக்கக் கூடிய சிறந்த முடிவாகும். தேர்தல் பகிஷ்கரிப்பு என்ற கோஷம் தம்மையும் அறியாமல் கோத்தாவை வெல்ல வைக்கும் மாயமே. தேர்தலை பகிஷ்கரிப்பதால் எமக்கு தீர்வு கிட்டிவிடாது. சர்வதேசம் அதனை கண்டுகொள்ளாது. எனவே யாரும் வேண்டாம் என்ற நிலைப்பாட்டில் இருக்கும் மக்கள் யார் வந்தால் குறைந்தபட்ச நன்மை கிடைக்கும் என்று நினைக்கின்றனரோ அவருக்கு நிச்சயம் வாக்களிக்க வேண்டும். எனது தெரிவு சஜித் பிரேமதாச என்பதால் தமிழ் மக்கள் அவருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதே எனது அவா. ஆனாலும் முடிவு உங்கள் கையில்.

யாரும் வேண்டாம்! என்பதை விட யார்? வர வேண்டும் என்ற முடிவை நிச்சயம் நாம் எடுக்க வேண்டும். "வாழ்க்கையே போர்க்களம் வாழ்ந்துதான் பார்க்கணும்" இது திரைப்படம் ஒன்றில் கூறப்படும் தத்துவம். இதுபோல் தமிழர்கள் ஆகிய நாம் "தீர்வுதான் எமக்கில்லை வாக்களித்துத்தான் பார்க்கணும்" என்ற நிலைப்பாட்டில் இருந்து சிந்திக்க வேண்டும்.

31/10/2019
ஞா.பிரகாஸ்

No comments