வைகோவின் கோரிக்கைக்கு பாராளுமன்றமே ஒத்துப்போனது!

பொதுவாக மதிமுக பொதுச்செயலர் வைகோ ஒரு கோரிக்கைய முன்னிறுத்துகிறார் என்றால் அதில் உண்மை நியாயம் இருப்பதென்பதே பொதுவான கருத்து அதுபோலவே இன்று நாடாளுமன்றத்தில் பேசும்போது மாநில வானூர்தி நிலையங்களில் மாநில மொழியில் அறிவிப்புக்களும்  மற்றும் முன்னுரிமைவழங்கவேண்டும் என்று  வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்ற மேலவையின் இன்று நடைபெற்ற ஜீரோ நேரத்தின்போது பேசிய  மதிமுக பொதுச்செயலாளர் வை,கோ, இன்றைய காலகட்டத்தில், வானூர்திகளில் பறப்பது  நேர சேமிப்பைக் கருதித்தான். சமீப காலமாக  நடுத்தர மக்கள், மாத ஊதியம் பெறுவோர், விவசாயிகள் வானூர்திப் பயணங்கள் மேற்கொள்கின்றனர்.
தமிழகத்தை சேர்ந்த கிராமப்புறங்களில் உள்ள இளைஞர்கள் பல்வேறு வேலைகளுக்காக வளைகுடா உள்பட பல  நாடுகளுக்கு விமானங்களில் பயணமாகின்றனர்.  இன்று விமானப் பயணம் சர்வ சாதாரணமாகிவிட்டது. ஆனால், அந்த விமானங்களில் பயணம் செய்யும் பயணிகள் அறிந்துகொள்ள வேண்டிய முக்கிய பாதுகாப்பு வழிமுறைகள் குறித்த விளக்கங்கள், இந்தி, ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளில் மட்டுமே அறிவிக்கப்படுகின்றன.
இதனால் தமிழகம் உள்பட பல மாநிலங்களைச் சேர்ந்த பயணிகளால் அதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. கோலாலம்பூர்,  சிங்கப்பூர்  மற்றும்  வளைகுடா நாடுகளின் விமானங்களில் தமிழில் அறிவிப்பு செய்யப்படுகிறது. அதுபோல, இந்திய விமானங்களிலும், விமானம் தொடர்பான அறிவிப்புகளை அந்தந்த மாநில மொழிகளிலேயே சொல்ல வேண்டும்.
குறைந்த பட்சம், அந்தந்த  மாநிலத்துக்கு உள்ளேயே பறக்கின்ற வானூர்திகளில் அந்தந்த மாநில மொழிகளிலேயே அறிவிக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, சென்னையில் இருந்து தமிழ்நாட்டுக்கு உள்ளேயே திருச்சி, மதுரை, கோவை, தூத்துக்குடி, சேலம் ஆகிய ஊர்களுக்குப் பறக்கின்ற வானூர்திகளின் அறிவிப்புகள் முதலில் தமிழில் சொல்லப்பட வேண்டும், அதுபோல பயணிகள் தங்கள் உடைமைகளை எந்த இடத்தில் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என்பதையும், மாநில மொழிகளிலேயே அறிவிக்க வேண்டும். என்று வலியுறுத்தியவர், அவையில் உள்ள மற்ற உறுப்பினர்களைப் பார்த்து, எனது  இந்த வேண்டுகோளை, இந்த அவையின் அனைத்து உறுப்பினர்களும் ஆதரிப்பார்கள் என நம்புகின்றேன் என்று கூறினார்.
இதையடுத்து மாநிலங்களவையில் இருந்த அனைத்து உறுப்பினர்களும்,  வைகோவின் கோரிக்கை நியாயமானது  அதை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என குரல் கொடுத்தனர். உடனே  அவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, நாடாளுமன்றத் துறை அமைச்சரைப் பார்த்து, இந்த கோரிக்கையை விமான போக்குவரத்துத்துறை அமைச்சருக்கு உடனே தெரிவித்து செயல்படுத்த முயற்சி செய்யுங்கள் என்றார்.

No comments