எங்களிடம் தப்பில்லை:சிறீதரன்,சம்பந்தன்!


தமிழ் மக்களின் அபிலாசைகளை யார் நிறைவேற்றக்கூடியவர் எனும் அடிப்படையில் தமிழ் மக்கள் தமது வாக்குகளை வழங்கியிருந்தனர். கோத்தாபய ராஜபக்சவிற்கு வாக்களிக்காமை இனரீதியான செயற்பாடு அல்ல என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் இலங்கை அரசியலில் பாரிய மாற்றம் ஏற்பட்டுள்து. தங்களுக்கான தலைவரை தெரிவு செய்யும் தேர்தலில் சிங்கள மக்கள் மிகத் தெளிவான முடிவை அறிவித்துள்ளனர்.

அதேபோல தமிழ் மக்களும் தங்களது நிலைப்பாட்டை மிகத் தெளிவாக அறிவித்துள்ளனர். போரை வழிநடத்திய ஒருவர் ஜனாதிபதியாக வரக்கூடாது என்பதாலேயே அவரை தமிழ் மக்கள் ஏற்று வாக்களிக்கவில்லை.

இதில் இனரீதியான செயற்பாடு இருக்கவில்லை. நாட்டின் ஜனாதிபதி சிங்களவர் என்பதற்கு அப்பால் எந்த ஜனாதிபதி தமிழர்களுக்கு தேவையானதை செய்வார் என்பதன் அடிப்படையிலேயே அவர்கள் வாக்களித்தனர் எனவும் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

இதனிடையே புதிய ஜனாதிபதி தமிழ் மக்களது கருத்து வெளிப்பாட்டுக்கு மதிப்பளித்து செயற்படுவார் என தான் நம்புவதாக, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

புதிய ஜனாதிபதி தமிழ் மக்களது கருத்து வெளிப்பாட்டுக்கு மதிப்பளித்துச்செயற்பட வேண்டுமென விரும்புவதாகவும், அவர், அவ்வாறு செயற்படுவார் என தான் நம்புவதாகவும்; இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு செயற்படுவதன் மூலம், அனைவரும் இலங்கை நாட்டின் சமமான குடிமக்கள் எனும் உணர்வு ஏற்படும் என்பதையும், நாடு பிளவுபடாது பாதுகாக்கப்படும் என்பதையும், அதன்மூலம் நாடும் நாட்டில் வாழும் அனைத்து மக்களும் பாரிய முன்னேற்றத்தையும், அபிவிருத்தியையும் அடைவர் என்பதையும் புதிய ஜனாதிபதிக்கும், அவர் சார்ந்தோருக்கும் தமிழ் மக்கள் சார்பில் தெரிவித்துக் கொள்வதாகவும் சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.

No comments