அன்னம் பாலை மட்டுமே குடிக்கும்:சிவாஜி


இலங்கை தமிழரசுக் கட்சி ஐந்து கட்சிகள் மற்றும் யாழ் பல்கலைக்கழகத்திற்கு மாத்திரமல்ல தமிழ் மக்களிற்கும் பச்சைத்துரோகத்தினைச் செய்துள்ளது என ஜனாதிபதி வேட்பாளர் சிவாஜிலிங்கம் இன்று தெரிவித்தார். கிளிநொச்சியில் இன்று திங்கட்கிழமை 04.11.2019 இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதென நேற்றைய தினம் அறிவித்த விடயமானது தமிழரசு கட்சி இவ்வாறு துரோகத்தனமாக செயற்படும் என்பது ஏற்கனவே அறியப்பட்டதேயாகும். 6 கட்சிகள் இணைந்து கூட்டு முயற்சி எடுத்த போது ஒரு கட்சி தவிர்ந்து ஏனைய ஐந்து கட்சிகள் ஓப்பந்தம் ஒன்றை செய்திருந்தனர். அதில் 13 அம்சங்களை முன்னிலைப்படுத்தி ஜனாதிபதி வேட்பாளர்களிடம் முன்வைப்பதாக தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில், சுமந்திரன் துரோகமான செயற்பாடு ஒன்றை மேற்கொண்டிருந்தார். குறித்த கட்சிகள் ஏற்கனவே கூடிய போது தமிழரசுக் கட்சி இவ்வாறு செயற்படுவார்கள் என்பதை அன்றே அறிந்திருந்தோம். இந்த நிலையில் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் என்ன விடயத்தை கண்டு அவர்களிற்கு தமிழரசுக் கட்சி ஆதரவு வழங்கியிருந்தது என அவர் கேள்வி எழுப்பினார்.
இரண்டு தடவை அன்னம் கவிழந்துவிட்டது. முதல் தடவை சரத் பொன்சேகாவிற்கு ஆதரவாக வாக்களித்தோம். அதில் பயன் கிடைக்கவில்லை. இரண்டாவது தடவையாக நல்லாட்சி அரசிற்காக அன்னத்திற்கு வாக்களித்தோம். இரு தடவையும் தமிழ் மக்களிற்கு எவையும் கிடைக்கவில்லை. தேர்தல் விஞ்ஞாபனத்தில் போர் குற்றம் இழைத்தவர்களைப் பாதுகாப்பதாகவே கூறப்பட்டுள்ளது. சரத் பொன்சேகா தான் தான் இந்த யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தேன் என்கின்றார். அப்போ யார் கொலைகாரன். இந்த சரத் பொன்சேகாவும் கொலைகாரனே. இவர்களைப் போன்றவர்களைப் பாதுகாப்பதற்கா தமிழரசு கட்சி சஜித்திற்கு ஆதரவு வழங்கியிருந்தது?
காலத்திற்கு காலம் நாம் ஆட்சி மாற்றத்தை செய்யவில்லை. ஆட்களைத் தான் மாற்றியுள்ளோம். நாம் ஆட்சியை மாற்றியதாக எண்ணிக் கொண்டு இதுவரை இருந்துள்ளோம். உண்மை அதுவல்ல. சந்திரிக்கா அதன் பின்னர் மகிந்த ராஜபக்ச, அதன் பின்னர் மைத்திரிபால சிறிசேன அடுத்தது யாராகவோ இருக்கலாம். அதனால் தமிழ் மக்களிற்கு எதுவும் கிடைக்காது. அன்னம் பாலுடன் கலக்கப்பட்ட தண்ணீரிலிருந்து பாலை மட்டும் குடித்துவிட்டு தண்ணீராக தமிழர்களை கைவிட்டு விடும் என்பதே உண்மை எனவும் அவர் இன்றைய ஊடக சந்திப்பில் மேலும் தெரிவித்தார்.

No comments