தமிழர் அழிவை தடுக்க தவறியது ஏன்? கண்டுபிடித்தார் சங்கரி

சர்வதேச சமூகம் தமிழ் தேசிய கூட்டமைப்பை ஜனநாயகரீதியிலான அமைப்பு என ஏற்றுக்கொள்ளாததாலேயே இறுதி யுத்த அழிவில் சர்வதேசம் தலையிடவில்லையென தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

ஆனந்தசங்கரி இன்று (22) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அதில் மேலும் கூறியுள்ளதாவது,

சுயநலம் கொண்டு பதவிகளுக்காக சோரம்போகும் கட்சிகளின் வார்த்தைகளை நம்பாது, மக்கள் அனைவரும் சிந்தித்துச் செயற்பட வேண்டும். அத்துடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஜனநாயகரீதியிலான அமைப்பு என சர்வதேச சமூகம் ஏற்றுக்கொள்ளாததாலேயே இறுதி யுத்த அழிவில் சர்வதேசம் தலையிடவில்லை.

மேலும் நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தல், தமிழ் மக்களுக்கு ஒரு படிப்பினையைத் தந்துள்ளது. 30 வருடகால யுத்தம் ஏற்படுத்திய வடுக்கள், இறுதி யுத்தம் நடந்த நேரத்தில் நடந்தேறிய அவலங்கள், தொடர்ந்து யுத்தம் நடந்து முடிந்து 10வருடங்ளுக்கு மேலாகியும் எமது மக்களின் அபிலாசைகள், எதிர்பார்ப்புகள் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வாழ்வாதார உதவிகள் போன்றவற்றில் நாம் கண்ட பலாபலன்கள் என்ன? ஏன் எதுவும் முறைப்படி நடக்கவில்லை! இனியாவது சிந்திப்போமா?

எமது மக்களின் நியாயமான கோரிக்கைகள் கூட மாறிமாறி வந்த அரசுகளால் தட்டிக் கழிக்கப்பட்டன. சர்வதேச சமூகம் கண்டு கொள்ளவேயில்லை. ஏன்? இவைகளை முறைப்படி தட்டிக்கேட்பதற்கு மக்களால் தெரிவுசெய்யப்பட்ட ஒரு ஜனநாயக அமைப்பு கிடையாது என்பதே முக்கியமான காரணமாகும் - என்றுள்ளது.

No comments