ஷானி மீதான பழிவாங்கல்; கடும் கண்டனம்

குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அல்லது இரகசிய பொலிஸின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஷானி அபேசேகரவை, அந்த பதவியில் இருந்து அகற்றி, காலி பிரதிப் பொலிஸ் மா அதிபரின் தனிப்பட்ட உதவியாளராக நியமிக்க தேசிய பொலிஸ் ஆணைக் குழு எடுத்த முடிவுக்கு, இலங்கை இளம் ஊடகவியலாளர்கள் சங்கம் ​எதிர்ப்பை வௌியிட்டுள்ளது.

இளம் ஊடகவியலாளர்கள் சங்கத்தால் தேசியப் பொலிஸ் ஆணைக்குழுவுக்கு  அனுப்பி வைக்கப்பட்டுள்ளக் கடிதத்திலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

11 பேரைக் கடத்திச் சென்று காணாமல் ஆக்கியமை, பாரத லக்ஷ்மன் பிரேமசந்ர கொலை, ரத்துபஸ்வல துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட விசாரணைகளும் ஷானி அபேசேகரவின் மேற்பார்வையில் இடம்பெற்றவையாகும்.

அந்த குற்றங்கள் இடம்பெற்ற காலப்பகுதியில், இலங்கையில் அதிகாரத்தில் இருந்த அரசியல்வாதிகள், மீண்டும் அதிகாரத்துக்கு வந்து ஒரு வாரம் கூட ஆகாத நிலையில், ஷானி அபேசேகர குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்து மாற்றப்படுவது பாரிய சந்தேகத்தை ஏற்படுத்தும் விடயமாகும். இந்த விசாரணைகளை மழுங்கடிக்கச் செய்யவே ஷானி அபேசேகரவை இடமாற்றியுள்ளதாக நாம் உறுதியாக நம்புகின்றோம். அரசாங்கமொன்றுக்கு அவ்வாறான தேவை ஒன்று இருக்கலாம்.

அதனால், உங்கள் ஆணைக் குழு எடுத்துள்ள தீர்மானத்தை நீக்கி, ஷானி அபேசேகரவை மீளவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் பதவிக்கு நியமித்து விசாரணைகளை விரைவாக முடிக்க ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம். என்றுள்ளது.

No comments