இலங்கை இராணுவத்தை ஐநா தடை செய்தது இயல்பான விடயமே

ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிகாக்கும் படையணியிலிருந்து இலங்கை இராணுவம் நீக்கப்பட்டமை, இயல்பான ஒரு நடவடிக்கையே என இலங்கை இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அநுராதபுரத்தில் இன்று (01) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “நாம் இராணுவத்தினர் என்ற வகையில், தற்போதைய நிலைமைகள் மட்டுமன்றி, எதிர்காலத்திற்கும் தேவையான அனைத்து தயார்படுத்தல்களையும் மேற்கொண்டு வருகிறோம்.
நாட்டின் இராணுவம் என்பது பயங்கரவாதத்திற்கு எதிராக மட்டுமன்றி, அனைத்து விடயங்களிலும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றே மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
மக்களின் எதிர்பார்ப்புக்கு இணங்க, தேசிய பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக மேற்கொள்ள வேண்டிய அனைத்து செயற்பாடுகளையும் நாம் மேற்கொள்வோம்.
ஐக்கிய நாடுகள் சபை அமைதிகாக்கும் படையணியிலிருந்து இலங்கை இராணுவம், வெளியேற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக நாம் கலந்துரையாடியுள்ளோம். இதனை தீர்க்க முடியும் என்றே நாம் கருதுகிறோம்.
பொதுவாக அமைதிப்படையணியிலிருந்து ஒரு நாட்டின் இராணுவத்தின் காலம் முடிவடைந்துவிட்டால், அது தங்கியிருக்கும் நாட்டிலிருந்து திருப்பி அனுப்பப்படுவதே வழக்கமான ஒன்றாக இருக்கிறது.
பின்னர், ஐக்கிய நாடுகள் சபையின் தேவைக்கு இணங்க, மீண்டுமொரு அதே நாட்டுக்கோ அல்லது இன்னொரு நாட்டுக்கோ ஒரு இராணுவம் அனுப்பப்படும். சிலவேளை அவ்வாறு இடம்பெறாத சந்தர்ப்பங்களும் இருக்கின்றன.
இலங்கை இராணுவமும் பல்வேறு நாடுகளில் பணியாற்றியதை அடுத்து, தேவை நிமித்தமாக இராணுவத்தினரின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்ட வரலாறுகள் காணப்படுகின்றன.
எனவே, இதற்கு முன்னரும் இவ்வாறான செயற்பாடுகளுக்கு இலங்கை இராணுவம் முகம் கொடுத்துள்ளது என்றுதான் நாம் கூறவேண்டும்” என மேலும் தெரிவித்துள்ளார்.

No comments