கத்தியால் வெட்டுவது கூட ஒரளவிற்கு தான் பாதிப்பு - ரகுராம்

"இணைய ஊடகத்தின் செயற்பாடுகள், அதன் சவால்கள் பற்றி நாம் சிந்திக்க வேண்டும். இதுவரை பெரும் முதலாளிகளின் கைகளில் இருந்த வெகுஜன ஊடகங்கள், அரசியல் கட்சிகளிடம் இருந்த ஊடகங்கள் ஒரு புறமிருக்க மக்களுக்கான, எமக்கான குரல்களை வெளிப்படுத்த ஊடகங்கள் இல்லாமலே நாம் வாழ்ந்து கொண்டிருந்தோம்"

இவ்வாறு யாழ்ப்பாணம் பல்கலைக்கழக ஊடகத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் சி.ரகுராம் தெரிவித்தார்.

"நந்திக்கடல் பேசுகிறது" நூல் வெளியீடுீ இன்று (13) காலை 10.30 மணிக்கு யாழ்ப்பாணம், கலைத்தூது கலையகத்தில் இடம்பெற்ற போது "டிஜிட்டல் ஊடகம்" என்ற தலைமைப்பின் கீழ் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றும் போது,

இத்தகைய சந்தர்ப்பத்தில் தான் இணைய ஊடகங்களின் பல் ஊடகம் கிடைத்துள்ளது. பிரஜைகள் ஊடகவியலில் சாதாரண மக்களுக்களின் ஊடக வளமாக, துறையாக இணைய ஊடகம் எமக்கு வாய்ப்பைத் தந்திருக்கின்றது. ஆனால் இவற்றை எப்படிப் பயன்படுத்தப் போகிறோம் என்பதில் தான் பிரஜைகள் ஊடகம் என்ற கருப்பொருள் தங்கியிருக்கின்றது. இதய சுத்தியுடன் மக்களுக்கான ஊடகமாக பயன்படுத்த விளையும் போது தான் டிஜிட்டல் ஊடகமான கருப்பொருள் எங்களை சார்ந்ததாக, மக்களை சார்ந்ததாக அமையக் கூடியதாக இருக்கும்.

துரிதமாக நாம் செயற்படக் கூடிய, துள்ளியமாக நாம் கருத்துக்களை பகிரும் வல்லமையை டிஜிட்டல் ஊடங்கள் தந்துள்ளன. அது இணையமாக, வலைப்பூவாக, சமூக வலைத்தளமாக இருக்கலாம் அவற்றை நாம் அவ்விதம் பயன்படுத்துகிறோம் என்பதில் கேள்வி எழுகின்றது.

மட்டற்ற சுதந்திரத்தையும், அறிவையும் நாம் காவிச் செல்லக் கூடிய பாக்கியத்தை இணைய ஊடகங்கள் தருகின்றது. நாங்கள் எங்களுடைய குரல்களை, எங்களுடைய அடையாளத்தை பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பை சமூக ஊடகங்கள் தந்துள்ளன. சமூக ஊடகங்களின் வினைத்திறன் உங்களுக்கு தெரியும், சில வரலாற்று நிகழ்வுகளில் அவை நிரூபிக்கப்பட்டுள்ளது. எகிப்தாகட்டு, இந்தியாவில் தமிழகமாகட்டும் மிகப் பெரிய போராட்டங்களின் பின்னணியில் சமூக ஊடகங்கள் இருக்கின்றது. சமூக ஊடகங்களை சரியாக பயன்படுத்தி மக்களை ஒன்றிணைக்க முடியும்.

இது குறித்து எமது நாட்டில் கூட சுன்னாகம் குடிநீர் தொடர்பான விடயம் உட்பட சில சில விடயங்களை உதாரணமாக சொல்லக்கூடிய கருத்தாடல்களை நாம் கொண்டுள்ளோம். இனிவரும் காலங்களில் டிஜிட்டல் ஊடகங்களை நாம் எப்படி பயன்படுத்தவுள்ளோம் என்று சிந்திக்க வேண்டும். இவ்வாறான சூழலில் புதிய ஊடகத்தின் இன்றைய நிலையயை பற்றி பார்க்கும் போது டிஜிட்டல் ஊடக அறம் பற்றி கேள்வி எழுகிறது. டிஜிட்டல் ஊடகங்கள் தந்துள்ள மட்டற்ற சுதந்திரம் எமக்கு தவறாக செயற்படும் ஆற்றலையும் தந்திருக்கின்றன. யாழ்ப்பாணத்தில் நடைபெறும் சிறுவர்கள் மீதான பாலியல் அத்துமீறல்களை ஊடகங்கள் எவ்வாறு வெளிப்படுத்திகின்றன என்று நாம் ஒரு கருத்தாடலை செய்த போது அச்சு ஊடகங்கள் தமது நெறிமுறைகளில் இருந்து தவறிச் செல்கின்றன. அதற்கு மாறாக இணைய ஊடகங்கள் மேலும் நெறிமுறைகளை விலகிச் சென்று கொடூரமாக செயற்படுகின்றன.

இலங்கையை பொறுத்த வரையில் அச்சு ஊடகங்கள் தொடர்பிலேயே ஊடக அறத்தை பிரயோகிக்கக் கூடிய நியாயாதிக்க வலு இருக்கின்றது. துரதிஷ்டவசமாக இணைய ஊடகங்கள் அல்லது புதிய ஊடகங்களை கேள்விக்குள்ளாக்க முடியாத நிலை இருக்கின்றது. அவற்றை நெறிப்படுத்தும் வல்லமை எம்மிடம் இல்லை. ஆனால் சட்டவலு, நியாயாதிக்கவலு, என்பதற்கு அப்பால் மனச்சாட்சியின்படி கேள்வி கேட்கக்க கூடிய ஒவ்வொரு மானுடனும் ஊடக அறத்தை பின்பற்ற வேண்டும். ஒரு விடயத்தை பிரசுரிக்கும் போது அந்த விடயம் சார்ந்த பின்னணியை, அது எழுப்ப கூடிய அதிர்வை, சிக்கல்களை கவனத்தில் கொள்ள வேண்டும். ஆனால் இந்த டிஜிட்டல் ஊடகங்கள் எமக்கு மட்டற்ற சுதந்திரத்தை தந்திருப்பது போல் பொறுப்பின்மையையும் எமக்குத் தந்திருக்கின்றன.

டிஜிட்டல் தளத்தை பயன்படுத்தும் போது எமக்குரிய மனச்சாச்சி, நீதி, நேர்மையின் படி செயற்பட வேண்டும். டிஜிட்டல் ஊடகங்களின் தமிழ் ஊடகப்பரப்பு பற்றி அண்மையில் ஒரு நிகழ்வின் நான் விரக்தியுடன் பேசிய போது யுனஸ்கோவின் தொடர்பாளர் பணிப்பாளராக பணியாற்றும் ஜெயவீர குறிப்பிட்டார் "அவர்கள் கத்தியை கொண்டு, உங்களை வெட்ட வருகிறார்கள் என நினைக்கிறீர்களா?" என்று. நான் சொன்னேன் "கத்தியை கொண்டு வெட்ட வருவது கூட ஒரளவிற்கு தான் பாதிப்பை ஏற்படுத்தும், ஆனால் உள அளவில், அந்த உளம் என்பது குறிக்கப்பட்ட நபருக்கு மாத்திரமானதல்ல அவரது குடும்பம், சமூகம் மற்றும் எதிர்காலம் ஆகியவற்றை பாதிக்கக்கூடிய கருத்துக் கொலைகளை டிஜிட்டல் ஊடகங்கள் செய்து வருகின்றன. அவற்றை நெறிமுறைப்படுத்த வேண்டும்" என்று.

அதற்கு அவர் கூறிய மறுமொழி, "நாம் டிஜிட்டல் ஊடகங்களை நெறிமுறைப்படுத்தி அவற்றை ஒரு ஒழுங்குமுறைக்கு கொண்டு வருவதாக இருந்தால் நாளை எமக்கிருக்கக் கூடிய சுதந்தரமான தளம், சில சமயம் வரக்கூடிய ஆளும் தரப்புக்களின் அடாவடித்தனங்களினாலேயே அது மறுவினையாக பயன்படுத்தக் கூடிய நிலையும் உருவாகும்" என்று கூறினார். அதுவும் உண்மைதான் யார் ஆளும் தரப்பாக வருகின்றனரோ அவர்கள் இருக்கக்கூடிய சட்டங்களை, விதிமுறைகளை அவர்களின்பாலே பயன்படுத்த முனையும் போது மட்டற்ற சுதந்திரம் பாதிக்கப்படத்தான் போகின்றது. ஆனால் அதற்காக எமது மானுட விதிமுறைகளை மீறிச் செயற்பட முடியாது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். டிஜிட்டல் ஊடகம் எவ்வாறு மட்டற்ற சுதந்திரத்துடன் இருக்கின்றதோ அதே வகையில் அதனை உரியவாறு நெறிமுறைப்படுத்தி சீராக்க வேண்டும். அப்போது தான் ஒவ்வொருவரின் மனச்சாட்சியும், ஊடக அறமும் தொடர்வதற்கு வாய்ப்பாக இருக்கும். - என்றார்.

No comments