கூட்டமைப்பு தவிசாளருக்கு பிணை?

மாற்றுத்திறனாளியான பொதுமகன் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பாக புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளர் ஒரு இலட்சம் பெறுமதியுடைய சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
குறித்த வழங்கு இன்று (புதன்கிழமை) முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றின் துணுக்காய் சுற்றுலா நீதிமன்றில் இடம்பெற்றது.
இதன்போதே சந்தேகநபரான புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளரை 1 இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீர  பிணையில் செல்லுமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும் குறித்த வழக்கின் விசாரணைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 10ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இதேவேளை பிரதேச சபை தவிசாளரை அச்சுறுத்தியதாக தெரிவித்து குறித்த பொதுமகன் மீதும் பொலிஸார் மற்றுமொரு வழக்கு தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
முறிகண்டி பிரதேசத்தில் சில தினங்களுக்கு முன்னர் பொதுமகன் மீது புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளர் தாக்குதல் நடத்தியமை தொடர்பான காட்சிகள் ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களிலும் வைரலாக பரவியதுடன், பல்வேறு விமர்சனங்களும் தவிசாளர் பிறேமகாந் மீது முன்வைக்கப்பட்டன.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை பிரதேச சபை உறுப்பினர்கள் சிலர் நேரில் சந்தித்து விடயங்களை கேட்டறிந்ததுடன், அப்பகுதியில் உள்ள பொது அமைப்புக்களையும் சந்தித்து கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments