8 ஆயிரம் ரூபா இலஞ்சம் பெற்ற இருவருக்கு கடூழியச் சிறை



8000 ஆயிரம் ரூபாய் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட அக்கரைப்பற்று கமநல சேவைகள் மையத்தின் முன்னாள் கமநல அபிவிருத்தி அதிகாரிக்கு 16 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்த கொழும்பு மேல் நீதிமன்றம் 20 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார்.

அதேபோல், குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட குறித்த கமநல அபிவிருத்தி மையத்தில் பணிபுரிந்த முன்னாள் எழுதுவினைஞருக்கு 4 வருட கடூழிய சிறைத்தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

2015 செப்டெம்பர் மாதம் 6 ஆம் திகதியன்று, அக்கரைப்பற்று பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவருக்கு வயல் ஒன்றிற்கான உரிமத்தை பெற்றுக் கொடுப்பதற்காக 8000 ஆயிரம் ரூபாய் இலஞ்சம் பெற்றுக் கொள்ளப்பட்டது தொடர்பில் குறித்து இரண்டு பேருக்கும் எதிராக இலஞ்ச ஆணைக்குழுவால் கொழும்பு மேல் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது.

நீண்ட வழக்கு விசாரணையின் பின்னர் தீர்ப்பினை வழங்கிய மேல் நீதிமன்ற நீதிபதி, பிரதிவாதிகளுக்கு எதிராக முறைப்பாட்டில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் சந்தேகத்திற்கு இடமின்றி உறுதியாகியுள்ளதாக தெரிவித்தார்.

அதன்படி, பிரதிவாதிகளுக்கு இந்த தண்டனை வழங்கப்படுவதாக நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

No comments