தேவரபெருமவை விடுதலை செய்!- கோட்டையில் கவனயீர்ப்பு


களுத்துறை - மத்துகமையில் தமிழ்த் தோட்டத் தொழிலாளி ஒருவரின் சடலத்தை நீதிமன்ற உத்தரவை மீறி காணி ஒன்றில் பலவந்தமாக புதைத்த வழக்கில் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தேவரபெரும மற்றும் ஐவரை விடுதலை செய்யக் கோரி இன்று (15) காலை 10 மணி முதல் 12 மணி வரை கொழும்பு - கோட்டை புகையிரத நிலையம் முன்னால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதன்போது பாலித தேவரபெருமவை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தப்பட்டது. அத்துடன் தொழிலார்களின் உடல்களை புதைப்பது தொடர்பில் உள்ள பிரச்சினைகளை தீர்க்கவும் வலியுறுத்தப்பட்டிருந்தது.

போராட்டத்தின் போது கருத்து வெளியிட்ட பிரதான செயற்பாட்டாளர் ப.கனகேஸ்வரன், "உயிர்களை இந்த மண்ணில் புதைக்க இடமில்லை எனும் போது தொடர்ந்தும் எம்மை பொருளாதாரத்தின் முதுகெலும்பு என்று சொல்லத்தான் வேண்டுமா? என்று சிந்திக்க வேண்டும். முதுகெலும்பு என்பதால் தான் எம்மை பின்தள்ளி வைத்துள்ளனரா?. தோட்டத் தொழிலாளியின் உடலைப் புதைக்க முன்வந்த பாலித தேவரபெருமவிற்கு நன்றி கூறி, ஆதரவை வெளிப்படுத்தவே ஒன்று திரண்டுள்ளோம்" என்றார்.

இப்போராட்டத்தை மலையக இளைஞர்கள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்திருந்தனர். இதில் சில அரசியல் பிரமுகர்களும் கலந்து கொண்டு ஆதரவு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.






No comments