எப்படி வருவார் இலங்கை ஜனாதிபதி?


ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர்கள் மூவர் அல்லது அதற்கு அதிகமானவர்கள் போட்டியிடுவார்களேயானால் செல்லுபடியாகும் வாக்குகளில் 50 வீதமான வாக்குகளை வெற்றிபெறும் வேட்பாளர் பெற்றுக்கொள்ளுவது அவசியமென தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் முகநூலில் அவர் இவ்விடயங்களை தெளிவுபடுத்தியுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக செல்லுபடியாகும் வாக்குகளிலிருந்து 50% மற்றும் அதற்கு மேலதிகமாக ஒரு வாக்கினை பெற வேண்டும். அவ்வாறு ஒரு வேட்பாளரும் பெறமுடியாத விடத்து மேற்கொள்ளப்படும் தீர்மானம் தொடர்பில் கடந்த ஜூன் 11 ஆம் திகதி நடைபெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தின் போது எழுப்பப்பட்ட கேள்விக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் பதிலளித்துள்ளார்.
குறித்த கூட்டத்தில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் 39 இன் செயலாளர்கள் அல்லது நிரந்தர உறுப்பினர்கள் கலந்து கொண்டதோடு, செயலாளர் தொடர்பான பிரச்சினை காணப்படும் கட்சியொன்றை தவிர அனைத்து கட்சிகளும் பங்குபற்றியதாக அவர் தெரிவித்துள்ளார்.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ முகநூலில் அது தொடர்பான கேள்வியும் பதிலையும் தேர்தல்கள் ஆணையாளர் இவ்வாறு பதிவு செய்துள்ளார்.
கேள்வி: எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் செல்லுப்படியாகும் வாக்குகளில் 50 சதவீதத்தை பெற்றுக் கொள்வதற்கு எந்த வேட்பாளர்களினாலும் முடியாது போனால், மீண்டும் தேர்தல் நடத்தப்படுமா?
பதில்: அவ்வாறு மீண்டும் வாக்களிப்புக்கான அவசியம் கிடையாது. மூன்று வேட்பாளர் அல்லது அதற்கு அதிகமான வேட்பாளர்கள் போட்டியிட்டால் மட்டுமே செல்லுப்படியாகும் வாக்குகளிலிருந்து அரைவாசியுடன் மேலதிகமாக ஒரு வாக்கினை அதாவது 50% இற்கும் அதிக வாக்கினைபெற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படும்.
ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கும் போது, வாக்காளர்கள் தமது விருப்பத்திற்கு ஏற்ப 1, 2, 3 என்ற இலக்கங்களை பிரயோகித்து தமது விருப்பு வாக்கை அளிக்க முடியும். ஒரு வேட்பாளருக்கு மட்டுமே விருப்பு வாக்கு அளிக்க வேண்டுமானால் 1 என்ற இலக்கத்தை மட்டும் பிரயோகிக்க முடியும் அல்லது வழமை போன்று (X) என வழங்கி வாக்களிக்க முடியும்.
A, B, C, D, E என ஐந்து வேட்பாளர்கள் போட்டியிட்டு மொத்தமாக செல்லுபடியாகும் வாக்குகள் 100 என நாம் வைத்துக் கொண்டால், வேட்பாளர்கள் பெற்றுக் கொண்ட வாக்குகள் வருமாறு என வைத்துக்கொள்வோம்.
A = 40, B = 35, C = 15, D = 6, E = 4
அதற்கமைய, முதலாவது மற்றும் இரண்டாவது வேட்பாளர்களான A மற்றும் B ஆகியோருக்கு இடையில் போட்டி அமையும். ஏனைய C, D, E ஆகியோர் போட்டியிலிருந்து நீக்கப்படுவர்.
பின்னர், 1ஆவது மற்றும் 2 ஆவது இடங்களை பெற்றுக் கொள்ளும் A மற்றும் B ஆகியோரின் வாக்குச் சீட்டில் புள்ளடியிடப்பட்டுள்ள விருப்பு வாக்கு தொடர்பில் கவனம் செலுத்தப்படமாட்டாது.
அதனையடுத்து, 15 வாக்குகளை பெற்றுக் கொண்டுள்ள C என்பவரின் வாக்குச் சீட்டு அனைத்தும் கவனத்தில் கொள்ளப்படும். C என்பவருக்கு மாத்திரம் புள்ளடியிட்டுள்ள வாக்குகள் கவனத்தில் கொள்ளப்படமாட்டாது. அத்துடன் 1 என அடையாளமிடப்பட்ட வாக்குச்சீட்டுகளும் நீக்கப்படும். அவற்றில் வேறு எவருக்கும் வாக்களிக்கப்டாமை காரணமாக அவ்வாறு ஒதுக்கப்படும். அவற்றில் 1, C இற்கு 2, A அல்லது B இற்கு புள்ளடி இடப்பட்டிருந்தால், A இற்கு புள்ளடியிடப்பட்ட வாக்குகள் A இற்கான பெட்டியிலும் B இற்கான வாக்குகள் B பெட்டியிலும் இடப்படும். C இற்காக 1 என இலக்கமிடப்பட்ட வாக்குச்சீட்டில் இலக்கம் 2 என குறிப்பிடப்பட்ட 2 எனும் விருப்பு வாக்குகள் D அல்லது E இற்கு வழங்கப்பட்டிருப்பின், இலக்கம் 3 என குறிப்பிடப்பட்ட 3 எனும் விருப்பு வாக்குகள் காணப்படுகின்றதா என பரீட்சிக்கப்பட்டு 3 என இடப்படாதவை காணப்படுமாயின் அவையும் அதிலிருந்து நீக்கப்படும். இலக்கம் 2 ஆனது, D அல்லது E இற்காக வழங்கப்பட்டிருப்பின் 3 என A அல்லது B இற்கு இடப்பட்டிருப்பின், அவை A இற்காக மற்றும் B இற்காக இடப்பட்ட பெட்டிகளில் இடப்படும். ஆயினும் 2 எனும் விருப்புவாக்கு D இற்கு வழங்கப்பட்டு, 3 ஆனது E இற்கு வழங்கப்பட்டிருப்பின், இதன்போது E போட்டியில் இல்லை என்பதால் அவையும் நீக்கப்படும். 2 ஆனது E இற்கு வழங்கப்பட்டு 3 ஆனது D இற்கு வழங்கப்பட்டிருப்பின் அவையும் நீக்கப்படும். அதன் அடிப்படையில் D மற்றும் E பெற்றுக் கொண்ட வாக்குகள் 2, 3 இலக்கங்களுக்கு அமைய, A மற்றும் B இற்கு வழங்குதல் அல்லது நீக்கப்பட்டு, ஏற்கனவே தெரிவிக்கப்பட்டவாறு குறித்த 25 (15+6+4) வாக்குகளும் A அல்லது B இற்கு சேர்க்கப்பட்டு அல்லது நீக்கப்படுதல் மேற்கொள்ளப்படும்.
அவ்வாறு பிரிக்கப்பட்டு A இற்கு மேலதிகமாக 03 வாக்குகளும், B இற்கு 10 வாக்குகளும் கிடைத்துள்ளது என வைத்துக் கொண்டால், A இனது மொத்த வாக்குகள் 43 (A=40+3 = 43) ஆகவும், B இற்கான மொத்த வாக்குகள் 45 (B = 35+10 = 45) ஆகவும் காணப்படும்.
தற்போது செல்லுபடியாகும் வாக்குகள் 88 ஆகும். A மற்றம் B ஆகியவற்றின் மொத்த வாக்குகள் 88 (43+45 = 88) ஆகும். இதன்போது இங்கு அதன் அரைவாசிக்கும் அதிகமான 45 வாக்குகளைப் பெற்ற B வெற்றி பெற்றவர் என அறிவிக்கப்படும்.
இதன்போது செல்லுபடியான வாக்குகள், 100 ஆக இருந்த போதிலும், அதில் அரைவாசிக்கும் அதிகமாக அதாவது 51 இனை பெற வேண்டிய அவசியம் ஏற்படாது.
இதன்போது A இற்கு 08 வாக்குகள் அதிகமாகவும், B இற்கு 05 வாக்குகள் மேலதிகமாகவும் கிடைத்தால் A = 48 உம் B = 40 உம் பெற்று, A வெற்றி பெறுவார்.
A இற்கு அல்லது B இற்கு எவ்வித மேலதிக வாக்குகளும் பெறப்படாத நிலையில், A=40, B=35 என்பதால் A வெற்றி பெறுவார்.
A மற்றும் B சமமான வாக்குகளை பெறுவாராயின் வெற்றியாளரை தெரிவு செய்வதற்காக தேர்தல் ஆணைக்குழுவினால் சீட்டிழுப்பு மேற்கொள்ளப்பட்டு ஒருவருக்கு மேலதிக வாக்கு வழங்கப்படும்.

No comments